ஊடகங்களை அச்சுறுத்தும் சுமந்திரனின் கருத்து கண்டிக்கத்தக்கது


873727137suresh-premachandranஅண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் திரு. சுமந்திரன், ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் கண்டணம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களைக் கண்டித்தது மாத்திரமல்லாமல், ´ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள்´ என்ற தோரணையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

தனது கருத்துக்களை ஊடகங்கள் முழுமையாக வெளியிடவில்லை என்றும் மாற்றுக் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும், ஆகவே ஊடகங்கள் திருந்த வேண்டும் என்று அவர் சீற்றத்துடன் கூறியிருக்கிறார்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பாக இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதும், அந்த இடைக்கால அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதும், சட்டத்தரணிகளான சம்பந்தன், சுமந்திரன் போன்றோரை சீற்றமடைய வைத்திருக்கிறது.

தாங்கள் கூறும் கருத்துக்களை மட்டுமே ஊடகங்கள் காவிச் செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள், ஏனையோரின் கருத்துக்கள் ஊடகங்களில் வருகையில், பதற்றப்பட்டு, அஞ்சி ஊடகங்களை மிரட்டும் அளவிற்கு செல்கின்றனர்.

இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழர் தரப்பில் திரு. சம்பந்தன், சுமந்திரனைத் தவிர, இது நியாயமானது என்று எடுத்துச் சொல்வதற்கு தமிழரசுக் கட்சியில் கூட யாருமில்லை. இதனால்தான் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்கவோ இல்லையேல் தமது கருத்துக்களை முன்வைக்கவோ முடியாமல் மௌனம் சாதிக்கின்றனர்.

தமிழ்ச் சமூகமானது ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக பல ஊடகவியலாளர்களை பலி கொடுத்திருக்கின்றது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தமிழ் மக்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் கணிசமான பங்கினை செலுத்தியிருக்கின்றார்கள்.

ஆனால் அண்மையில் அரசியலுக்கு வந்த சுமந்திரன் ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் என்று மிரட்டுவதானது அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பிலிருந்து அவர் பேசும் பேச்சாக இருக்கின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களையும் அரசாங்கத்தை விமர்சிப்போரையும் வெள்ளை வேனில் கடத்திச் சென்று கொலை செய்வது என்பது சர்வசாதாரணமான விடயம். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை அரசாங்கம் ஆதரவளித்து அவர்களைப் பாதுகாத்தது.

இன்று திரு.சுமந்திரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள மிரட்டலைப் பார்க்கின்றபோது இவர் யாருடைய ஆதரவில் இத்தகைய மிரட்டல்களை விடுகிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் கடந்த நாற்பது வருடங்களாகப் போராடிவருகின்றது.

எமது கட்சி இவ்வாறான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் வன்மையாகக் கண்டிப்பதுடன், ஊடக சுதந்திரம் என்றென்றும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு