தமிழருக்காக மாகாணங்கள் கேட்கவில்லை தமிழ் மாகாணங்களே கேட்கிறோம் – சிவாஜிலிங்கம்


sivajilinkamவடக்கு- கிழக்கு மாகாணங்கள் தமிழருக்கான மாகாணமாக நாங்கள் கோரவில்லை. தமிழ்மொழி வழி மாநிலமாகவே நாங்கள் கேட்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பிரதேசங்களை முஸ்லிம் மக்களே ஆளக்கூ்டிய வகையிலான சூழலை ஏற்படுத்துவதற்குத் தமிழ்த் தலைமைகள் தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பேரினவாதத்தை எதிர்கொள்ளக் கூடிய வகையில் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு தமிழ்மொழி வழி மாநிலத்தை நாங்கள் கோரி நிற்கின்றோம்“ என்றும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக 18 ஆண்டுகள் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இதனால், முஸ்லிம் மக்களுக்கு எவ்வாறான பாரதூரமான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டன என்பதைத் தற்போது வடக்கு- கிழக்கு இணைப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கேணல் கிட்டுவுடன் சேர்ந்து முஸ்லீம் கட்சிகள் சில இந்தியாவுக்குச் சென்று ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் சிவசிதம்பரம் தலைமையில் ஏழு கட்சிகள் இணைந்து முஸ்லீம் மக்களின் தலைவராகவிருந்த மர்ஹூம் அஷ்ரப்புடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பெறுபேறுகள் காணப்படுகின்றன. ஆகவே, வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு தமிழ்மொழி வழி மாநிலத்தையே நாங்கள் கோரி நிற்கின்றோம்.

மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய 75 அல்லது 80 சதவீத அதிகாரத்தைப் பெறும் பட்சத்தில் ஒரு சில அதிகாரங்கள் மாத்திரம் முழு மாநிலத்திற்கும் காணப்படும் வகையிலும், கீழே எல்லாவற்றையும் பகிரக்கூடிய வகையில் நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.

ஏற்கனவே பெளத்தத்திற்கு முதலிடம் என்ற நிலைமையைப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், வடக்கு- கிழக்கு இணைந்த தமிழ் மாநிலத்தில் பெளத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாது என்ற கருத்தைத் திட்டவட்டமான முறையில் நாங்கள் எடுத்துக் கூற வேண்டும்.

வடக்கு- கிழக்கிற்கு வெளியே பெளத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. இலங்கை அரசியலமைப்பில் வடக்கு- கிழக்கிலே தமிழ்மொழி ஆட்சிமொழியாகவும், வடக்கு கிழக்கிற்கு வெளியே சிங்களம் ஆட்சி மொழியெனக் குறிப்பிடப்பட வேண்டும். இரண்டும் அரசகரும மொழிகளாகவிருந்தாலும் அவ்வாறானதொரு ஏற்பாடு இடம்பெற வேண்டும். இவ்வாறானதொரு ஏற்பாட்டை முஸ்லீம் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், முஸ்லீம் மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் வடக்கு- கிழக்கில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறோம் என்பதற்காக முஸ்லீம் மக்கள் மீது சவாரி செய்ய விரும்பவில்லை. சிங்களவர்களோடு ஒப்பிடும் போது எண்ணிக்கையில் தான் நாங்கள் சிறுபான்மை.

இன ரீதியாக நோக்கினால் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய நான்கு இனங்களும் சமத்துவமானவர்களாகவும், அதேபோன்று பெளத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய நான்கு மதத்தைப் பின்பற்றுபவர்களும் சமத்துவமானவர்களாகவும் வாழும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும். இதனை விடுத்து நாங்கள் எங்களுக்குள் பிணக்குகளை வளர்த்துக் கொள்வோமானால் எதிர்காலம் என்பதே எங்களுக்கு இல்லாமல் போகும் அபாயம் காணப்படுகின்றது. இதன் விளைவாக இன்னும் 20 அல்லது 25 வருட காலத்திற்குள் இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள பெளத்த மயமாவது தவிர்க்க முடியாததாகி விடும். இதனால், சிங்களவர்கள் எறிகின்ற எலும்புத் துண்டுகளை நாங்கள் கவ்விக் கொண்டிருக்கும் ஒரு சூழல் ஏற்படும் என்பதை முஸ்லீம் தலைவர்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.” என்றுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு