Wednesday, October 28, 2020

ஜனாதிபதியின் 7 நிதி திருத்த சட்டங்கள் நிறைவேற்றம்

ranjithsiyabalapitiya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ள பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் ஏழு நிதித் திருத்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நேற்று (25) நிறைவேற்றப்பட்டன. கடந்த 2008 டிசம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட 16 பில்லியன் ரூபாய் பெறுமதியான பொருளாதார நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், நிதிச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சமர்ப்பித்த 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்குப் புறம்பாக பொருளாதார நிவாரணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிதிச் சட்டமூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதாக அரச வருவாய்த்துறை மற்றும் பிரதி நிதியமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அடுத்த புதிய நிதியாண்டு ஆரம்பமாகும் ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த நிதித் திருத்தச் சட்டமூலங்களை விவாதித்து நிறைவேற்றுவதற்காக நேற்றைய தினம் பாராளுமன்றம் விசேட அமர்வாகக் கூட்டப்பட்டிருந்தது.

வழமையான அமர்வுகளைப் போலன்றி, வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நேற்று இடம்பெறவில்லை. சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்குக் கூடியபோது, அமைச்சர் சியம்பலாபிட்டிய ஏழு நிதித் திருத்தச் சட்டமூலங்களைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, நாட்டின் வர்த்தக சமூகத்தினர் குறிப்பாக ஏற்றுமதித்துறையின் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியைத் தேடித் தரும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரிவிலக்களிக்கும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த நிவாரணத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிச்சலுகையை நடைமுறைப்படுத்துவதற்கும் நிதித் திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் பொதுமக்கள் மீது வரிச் சுமையைத் திணித்திருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறினாலும், இந்தச் சட்டமூலங்களால் பாரிய வரிச்சலுகை வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

முக்கியமாக தேசிய உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய ரீதியாக உற்பத்தி செய்யப்படும், தேயிலைத் தொழிற்துறைக்குத் தேவையான இயந்திர, உபகரணங்களுக்கு வரிவிலக்களிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளால் சேதமடைந்த பஸ் வண்டிகளுக்காக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் பித்தளை தொழிற்துறைக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நகைத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெருந்திரளானோரை மேம்படுத்தும் வகையில் உள்ளூரில் தயாரிக்கப்படும் தங்கநகைகளுக்கு வற்வரி நீக்கப்பட்டுள்ளது.

தேயிலையை பக்கற்செய்து ஏற்றுமதி செய்வோருக்கு வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை நிறுவனமொன்றோ, தனி நபரோ இலங்கைக்கு வெளியில் சேவையாற்றி ஈட்டும் வருமானத்தை வங்கி ஊடாக நாட்டுக்குக்கொண்டு வரும் வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் கமநெகும, மக நெகும, சமுர்த்தி அபிவிருத்தி ஆகிய திட்டங்களுக்கு வற்வரி நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் வழங்காத வரிச்சலுகை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தகமொன்றை எழுதுவதன் மூலம், மேடை நாடகத் தயாரிப்பின் மூலம், பாடலொன்றை எழுதுவதன் மூலம், இசையமைப்பதன் மூலம், பாடுவதன் மூலம் கலைஞர்கள் பெறும் வருமானத்திற்கும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையிலும் அரசாங்கம் பொருளாதார மேம்பாட்டுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு பாரிய சவால்களையும் எதிர்கொண்டு அரசாங்கம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

ஐ.தே.க. வினர் நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டு 45 ஆயிரம் கோடிக்காக உலகைச் சுற்றினர். ஆனால், நாம் பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *