எமது தலைமை தமிழ் மக்களின் பொக்கட்டுக்குள் மாத்திரமே இருக்கின்றது


Tharmalingam-Siththarthanஎமது தலைமை யாருடைய பொக்கட்டுக்களுக்குள்ளும் இல்லை. தமிழ் மக்களின் பொக்கட்டுக்குள் மாத்திரமே இருக்கின்றது. அதை விடுத்து யாருடைய பொக்கட்டுக்குள்ளும் போக மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடன் மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்தையும் வெல்லக் கூடிய வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே இருக்கின்றது. நாங்கள் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்று வெற்றியடைவோம். அதே நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இடைக்கால அறிக்கை மற்றும் இரண்டு கோடி ரூபாய்ப் பிரச்சனை. இவ்வாறான பொய்தனமான விமர்சனங்களை வைத்து மக்களைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகளைக் கண்டு மக்கள் குழம்புகின்றவர்கள் அல்ல. அவர்களுக்கு உண்மை நிலைமை தெரியும்.

இடைக்கால அறிக்கை என்று சொல்லும் போது அந்த அறிக்கை சம்மந்தப்பட்ட ஆறு குழுக்கள் ஆறு முக்கிய விடயங்கள் சம்மந்தமாக ஆராய்ந்து ஆறு அறிக்கைகள் தயாரித்துள்ளன. இவ்வறிக்கைகள் விவாதிக்கப்பட்டு இறுதி அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும். அது தயாரிக்கப்பட்டதன் பின்புதான் அரசியல் வரைபு ஒன்று வரும்.

அந்த வரைபு வருகின்ற போதுதான் அதனை ஏற்பதா இல்லையா என்ற கேள்வி கேட்கப்படும். அதனை ஏற்பதா இல்லையா என்கின்ற கேள்வி வரும் போது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான ஒரு தீர்வாக இருந்தால் மாத்திரமே நாங்கள் அதனை ஏற்போம்.

எமது தலைமை யாருடைய பொக்கட்டுக்குள்ளும் இல்லை. தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது. அதை விடுத்து யாருடைய பொக்கட்டுக்குள்ளும் போக மாட்டாது.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. காணி விடுவிப்புகள் பல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மெதுவாக இருந்தாலும், வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் பல காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

அதே நேரத்தில் காணி அபகரிப்பு என்பதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை தக்க தருணங்களில் ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு எடுத்தக் கூறி தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

அதே போன்று அரசியற் கைதிகளிலும் பலர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். காணாமற் போனோர் பிரச்சினை தான் பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந்த அரசு மாத்திரமல்ல எந்த அரசும் இவ்விடயத்தில் சரியான ஒரு பதிலைத் தருவதற்குத் தயக்கம் காட்டுகின்றார்கள்.

காணாமல் போனோர் அலுவலகம் திறப்பதற்கு வரவுசெலவுத் திட்டத்திலே நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அது சம்மந்தமான நடவடிக்கைகளும் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு