“மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்கத்தயார்.”- சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் நன்மை கருதி, தற்போது தமிழ் கட்சிகள் சேர்ந்தே பயணிக்க வேண்டும் எனவும் அதற்கு மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 6 பேரின் கூட்டணிக்கு மாவை சேனாதிராஜா தலைமை வகிப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் சிரேஷ்ட உறுப்பினர் என்பதால், அதற்கு பொருத்தமானவர். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு விடயங்களை எடுத்துக்கூறும் விவகாரத்தை இணைந்து மேற்கொள்ள வேண்டும். தனித்து போட்டியிட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் சிலர் கூறினாலும் மக்களின் நலன் கருதி இந்த காலகட்டத்தில் சேர்ந்து போவது தான் சிறந்தது என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல் அல்லவெனவும் உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து தமக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தமக்கு கடிதம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் எனவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *