பெண்களை நிந்தனை செய்ய வேண்டாம்; பெண்களுடன் அதிகாரப் பரவல் ஒரு சுமையல்ல : சாமுவேல் இரத்தினஜீவன் ஹே. ஹூல்


Political_Representation_of_Womenகடந்த சில நாட்களாக உள்ளுராட்சி சபைகள் குறைந்தது 25% மாவது பெண்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற சட்டபூர்வ நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. டெய்லி நியூஸ் (பெப்ரவரி 15) பத்திரிகை இதைப் பற்றிக் கூறுகையில் “தேர்தல் ஆணைக்குழு விசேட நிலைமைகளில் 25% ஒதுக்கீட்டையும் பாராது கவுன்சில்களை அமைக்க விடும்படி 2012ம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல்கள் (திருத்த) சட்டம் 22ஐ மாற்றியமைக்கக் கோரவிருக்கிறது.” என்கிறது. இது தவறானது. அதற்காக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, 25% ஒதுக்கீடானது மிக அண்மையிலேயே பிறப்பிக்கப்பட்டது. அது 2017 சட்ட எண் 16இல் இருந்து எழுந்தது. இரண்டாவது, இப்படி ஏதும் தீர்மானம் ஆணைக்குழுவின் எந்தக் கூட்டத்திலும் எடுக்கப்படவில்லை என்பனவே.

தி ஐலண்ட் (பெப் 16) பத்திரிகை “பெண்களுக்கான 25ம% ஒதுக்கீட்டை மாற்றுவதற்கான நகர்வுகள்”, மேலும் “ஒதுக்கீட்டில் காணப்படும் விதிவிலக்குகளை அடையாளம் கண்டுகொண்டு” என்ற பெண்கள் குழுக்களின் கூற்றுக்களைப் பிரசுரித்துள்ளது. இதைவிட “தனிப்பட்ட நிலைமைகளின் கீழே பெண்களுக்கான 25ம% ஒதுக்கீட்டு நிபந்தனையையும் மீறி உள்ளுர் அங்கீகார உறுப்புக்கள் உள்ளுராட்சிச் சபைகளை அமைக்க விட்டு விடுவதற்கான புதிய திருத்தங்கள் உள்ளுராட்சி தேர்தல்கள் சட்டத்தில் தேவை” என்று கூறியுள்ளது.

கொழும்பின் மேயர் வேட்பாளர் ரோசி சேனாநாயக்க, டெய்லி மிரரில் (பெப்.16) உள்ள உள்ளு_ராட்சி தேர்தலில் 25% வீத ஒதுக்கீடு சந்தேகமாகியுள்ளது என்கிற குறிப்பைக் காட்டி, “உடனேயே உள்ளுராட்சித் தேர்தல்களில் 25% பெண்களுக்கான ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று வற்புறுத்துகிறார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தனியொரு அங்கத்தவராக (ஆணைக்குழு சார்பில் அல்ல) நான் கூறுவதாவது: பெண்கள் தாங்கள் பலகாலமாய்ப் போராடிப் பெற்ற நன்மை அபாயத்திலுள்ளது என்று பயப்படுவது முறையானது என்கிறேன். உண்மையில் நான்; சட்டத்தில் உடனே கவனிக்கப்பட வேண்டிய எந்தத் துளையையும் காணவில்லை. ஒதுக்கீடே சட்டமாய் அமைந்த பட்சத்தில் அதில் நாம் விதிவிலக்குகளை அங்கு வைக்க முடியாது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தல்களைத் தாக்கும் வகையில் திருத்தங்களை திகதி முன் நகர்த்தல் தவறானது என்பது எனது கருத்து. பலர் பிரச்சினையெனக் காண்பதின் அடிப்படை விடயம் தேர்தல் அங்கீகாரச் சட்டத்திலுள்ள

27ஊ. (1) இக்கட்டளைச்சட்டத்தில் முரணான ஏதேனும் ஏற்பாடு எவ்வாறிருப்பினும், ஒவ்வோர் உள்ளுர் அதிகாரசபையிலுமுள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையினரின் இருபத்தைந்து சதவீதத்திற்கு குறையாதோர் பெண் உறுப்பினர்களாகவிருத்தல் வேண்டும் -  என்னும் வரிகளே. அதாவது ஒரு உள்ளுராட்சி உறுப்பில் 25% பெண்கள் இராவிட்டால், அந்த அங்கீகாரச் சபைக்கு அதிகாரமில்லை என்பதாகும். அதற்கான விதிவிலக்குகள் இல்லாவிட்டால் இது ஒரு சர்ச்சைக்கான (என் கருத்தில் ஒரு தீவிர பிரச்சினையான) விடயமாயிராது.

65அஅ. (1) ஓர் உள்ளுர் அதிகாரசபைக்காக ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியிலிருந்து அல்லது சுயேச்சைக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு மேன்மிகையை விளைவித்து 65 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் உறுப்பினர்களாத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்தனுப்பப்படுவதற்கு நிச்சயிக்கப்பட்ட எண்ணிக்கையை விஞ்சுமிடத்தும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் அத்தகைய எண்ணிக்கை எவரேனும் பெண் உறுப்பினரை உள்ளடக்காதவிடத்தும், அப்போது, இப்பிரிவின் (3) ஆம், (4) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகள் அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவுக்கு ஏற்புடையனவாதலாகாது.

(2) ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக்குழு ஒன்று ஓர் உள்ளுர் அதிகார சபைப் பிரதேசத்தில் பெறப்பட்ட மொத்த எண்ணிக்கையினவான வாக்குகளின் இருபது சதவீதத்துக்குக் குறைவானதைப் பெற்று, மூன்றுக்குக் குறைவான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அல்லது தெரிந்தனுப்பப்பட்டவர்களாகக் கொண்டிருக்குமிடத்து, அப்போது இப்பிரிவின் (3) ஆம், (4)ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகள், அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவுக்கு ஏற்புடையனவாதலாகாது.

(2) முதலில் நோக்க வேண்டியதாவது இந்த விலக்குகள் ஒரேநேரத்தில் 20% வீதத்துக்குக் கீழானதும்
மூன்றுக்கும் குறைந்த பிரதிநிதிகளை மட்டுமே பெற்றதுமான இரண்டு நிலைப்பாடுகளையும் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே செல்லும். இவ்விலக்குகளின் ஆதாரம் தமக்குரிய ஓரிரு ஆசனங்களுக்கு தமது சிறந்த வேட்பாளர்களைக் கட்சி போட முடியும் என்பதே.

ஆயினும் இந்த நிபந்தனைகள் முற்கூறிய பத்திரிகைக் குறிப்பிலுள்ளது போல் இன்று இரண்டில் யாதொரு நிபந்தனையொன்றை மட்டுமே கடைப்பிடிக்க ஏதுவாக்கும் விதிவிலக்கு என்று அநேகமாக நோக்கப்படுகிறது. அத்தோடு இன்னொரு தவறான எண்ணமுமுண்டு: அது வட்டார வேட்பாளர் களமிறங்க வேண்டும். ஆனால் விகிதாரப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அது தேவையில்லை என்பது; உண்மையில் அவர்கள் யாவரும் களமிறங்குகிறார்கள். ஆங்கிலத்தில், வாக்களிப்பில் வெற்றிபெற்ற ஒரு வேட்பாளரைத் திரும்புபவர் எனபர். ஆனால் இலங்கையில் சில உத்தியோகபூர்வ ஆவணங்களில் இரண்டும் ஒரே பதம்படப் பாவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் நாங்கள் விருப்பிய கட்சிக்கு வாக்களித்தவிடத்து வட்டார, விகிதாசார முறையாகிய இரண்டு வகையினரும் தெரிவு செய்யப்படுகின்றனர். தாமும் உள்வாங்கப்படும்படி விகிதாசார வேட்பாளர் தாமுமாய்ப் பிரசாரம் செய்வார்கள். அதனடிப்படையில் அவர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர் எனலாம். ஆகையால், விகிதாசரத்துப் பட்டியலிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்கையில், அங்கு களமிறங்காத ஒருவர் தெரிவு செய்யப்படுகிறார் என்பது ஒரு தவறான கூற்றாகும்.

அப்படியானால், இன்றைய பிரச்சனை எது? பலர் காணுகின்றபடி அது இருமுனைப்பட்டது. முதலாவது. வட்டாரங்களிலிருந்து 60% மும், விகிதாசாரப்படி 40% மும் என்ற பாராளுமன்றம் குறிப்பிட்ட ஆசனங்கள் பகுக்கப்பட்ட செயல்முறை எவரும் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. உதாரணத்துக்கு ஆணைக்குழு உறுப்பினர் மூவரும் ஆணைக்குழு அதிகாரிகள் பாவித்த முறையின் திறனைக் கணிக்கும் முறையில் சரி பார்த்த அம்பலாங்கொடை நகர சபை முடிவுகளை இங்கு நோக்குவோம்.

Election_Analyse_Exambleதகுதியானவர்களின் எண்ணிக்கையானது கொடுக்கப்பட்ட முறைப்படி விகிதாசரப்பட்டியலிலிருந்து கணிக்கப்பட்ட பின், வட்டாரங்களால் பெறப்பட்ட எண்ணிக்கைகள் தள்ளிவிடப்படுகின்றன. இங்கு பொதுஜன பெரமுனை வட்டாரத்து வாக்குப்படி 10 ஆசனங்களைப் பெற்றுள்ளது. சட்டத்திலுள்ள விகிதாசாரப்பட்டியல் கணிப்பீட்டின்படி அவர்களது உரித்து 9. ஆனால் அக்கட்சி 10 ஆசனங்கனங்களை ஏற்கனவே கொண்டுள்ளபடியால் அதற்கு விகிதாசார ஆசனங்கள் எதுவும் இனிக் கிடையாது. அதனால் இக்கட்சி மேலும் ஆசனம் பெறாது. இதில் காணும் மேலதிக (10-9= 1) ஒரு ஆசனமே தொங்குநிலை ஆசனம் அதாவது ஒவர்ஹங் எனப்படுகிறது. நிற்க, அதன் மொத்த 10 வேட்பாளர்களும் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டமையால் இக் கட்சியின் 10 தேர்ந்தெடுக்கப்பட்ட / மீண்ட அங்கத்தவர்களில் பெண்கள் ஏற்கனவே இருந்திருந்தாலொழிய கட்சியில் பெண்கள் பிரதிநிதித்துவம் இராது.

இரண்டாவதாகக் கூறப்படுகின்ற பிரச்சனை யாதெனில், அவையிலுள்ள சிறிய குழுக்கள் (20% குறைவான வாக்குகளும், 3இலும் குறைந்த அங்கத்தவர்களும் கொண்டவை) பெண்களை நியமிப்பதிலிருந்து விடுபடும். அதனால், அம்பலாங்கொடையில் பொதுஜனபெரமுன பெண்கள் ஒதுக்கீட்டுக்கு உதவ முடியாது. மக்கள் சுதந்திர முன்னணி, 2 அங்கத்தவரையும் 7.5% வாக்குக்களையும் மட்டும் கொண்டதாலும், ஐக்கியதேசிய சுதந்திர முன்னணிக்கு ஆசனங்களில்லாததாலும் அவை பெண்களைப் பிரதிநிதிப்படுத்த வேண்டியதில்லை. ஆகையால் பெண்கள் ஒதுக்கீடு (பொதுஜன பொரமுனவில் வாக்குப்பெற்ற பெண்களைவிட) ஐக்கியதேசியக்கட்சி, ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டணி ஆகிய கட்சிகளால் செய்யப்பட வேண்டியுள்ளது. மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏறக்குறைய எல்லா ஆசனங்களையும் பெற்றிருந்தும் வட்டாரப் பிரதிநிதிகள் யாவரும் ஆண்களாயுள்ளதோடு, விகிதாசாரப் பட்டியலிலும் பெண்கள் எவரும் இல்லை.

சிறிய குழுக்களைவிட தமது மொத்தப் பட்டியலிலிருந்து பெண்களை நியமிக்கக் கடமைப்பட்டுள்ள பெரிய கட்சிகளுக்கே இந்நிலைமை தெரிவு செய்தலில் தமக்கு மட்டும் கட்டுப்பாடு போடப்பட்டதாய்த் தோன்றும். அதனால் ஒதுக்கீட்டைப் பாரமென்றோ,  நியாயமற்றது என்றோ கூறுவது விடயத்தை மிகைப்படுத்தலாகும். இக்கூற்று பெண்களுக்கு ஒரு நிந்தையாகிறது. விக்டோரியா இராணி, சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் எம்மை ஒப்பீட்டளவில் நல்லாய் ஆண்டது உண்டு. கட்சிகள் தமது பெண் உறவினர்களைவிட்டுத் திறமை காட்டும் பெண்களைக் நியமித்திருந்தால் ஒதுக்கீடு ஒரு பழுவாய்ப் பட்டிருக்காது.

ஒரு ஆணைவிட்டு அவ்விடத்தில் ஒரு பெண்ணை நியமிப்பது உண்மையில் பாரமா அல்லது நியாயமற்றதா? இது ஆண்கள், அதிலும்; முக்கியமாக எம்மில் சிரேஷ்ட வயதினர் விட்டுக்கொடுக்க விரும்பாத நிலைமையையே புலப்படுத்துகின்றது. எமது பாரபட்சத்தால் 25% பெண்கள் ஒதுக்கீடு ஒரு வெறும் நியமப்படுத்திய ஒதுக்கீடு என்று எண்ணுகின்றோம். ஆனால் இது ஒரு வரையறை அடிமட்டம். இதை விஞ்சுவதாயினும் அது குற்றமல்ல. இதை ஒரு பாரமாக நாம் நினைக்கிறோம். இது பெண்களை இன்றைய எமது கேலிச் சித்திரிப்பிலிருந்து எடுக்க வேண்டிய ஒரு நிலைமையைக் காட்டி நிற்கிறது.

சட்டங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளதென்று கதை அடிபடுகின்றது. அப்படி அறவே இல்லை. கிட்டடியிற்தான் திருத்தப்பட்ட உள்ளுராட்சிச் சட்டத்தின் வாசகம் அமைந்தவிதமாவது:

27ஊ.(2) தேர்தல்கள் ஆணையாளர் வர்த்தமானியில் வெளியிடப்படும் அறிவித்தல்மூலம் ஒவ்வோர் உள்ளுர் அதிகாரசபை தொடர்பிலும் பெயர் குறித்து நியமிக்கப்படவேண்டிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் குறித்துரைத்தல் வேண்டும்.

ஆகையால் ஆணைக்குழு 25 க்கும் மேற்படப் பெண்களை நியமிக்க வலுப்படுத்தக்கூடிய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது.

இப்படியான பிரச்சனையானது, சட்டத்தில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டு உள்ள தொங்கு நிலை ஆசனம் (ஓவர்ஹங்) என்ற கொள்கைக்கு எதிரான கருத்தால் எழுகிறது.

“மேன்மிகை” என்பது ஏதேனும் அங்கீரிகக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு, இக்கட்டளைச்சட்டத்தின் 65ஆ என்னும் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் நியதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உரித்துள்ளதாகவுள்ள எண்ணிக்கைக்கு விஞ்சுதலாக அத்தகைய அங்கீகக்கப்பட்ட அரசியற் கட்சியிலிருந்து அல்லது சுயேச்சைக் குழுவிலிருந்து உள்ளுர் அதிகாரசபையொன்றுக்காகத் தோ;ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை என்று பொருளாகும்.

பெறுபேறுகளை வெளியிட்டபின்னர் ஒரு கட்சியானது தான் விகிதாசார முறைப்படியான ஆசனங்களிலும் குறைவான ஆசனங்களை வட்டார முறையிற் பெற்றால் மட்டுமே பெண்களை நியமிக்க வேண்டும். ஆனபடியால் எல்லாரும் பெண்களாயிருந்தாலுமென்ன. அதுவும் அவர்கள் கட்சிகளின் வேட்பாளர் தெரிவுகளாயிருக்கையில்? இப்படியிருக்க, இங்கு கூட, முற்சுட்டிய சட்டமானது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இவ்விடயத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.

65ஆ (4) மூன்றாம் உட்பிரிவின் நியதிகளின்படி, விடயத்துக்கேற்ப, ஒவ்வோர் அங்கீகக்கப்பட்ட அரசியற் கட்சியினாலும் அல்லது சுயேச்சைக் குழுவினாலும் அந்த உள்ளுர் அதிகாரசபையின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்தனுப்பப்படுவதற்கு உரித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையை நிச்சயிப்பதன்மேல், அந்த உள்ளுர் அதிகாரசபைக்காக அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியிலிருந்து அல்லது சுயேச்சைக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை:

(அ) (3) ஆம் உட்பிரிவின்கீழ் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்தனுப்பப்படுவதற்கு நிச்சயிக்கப்பட்ட எண்ணிக்கையை விஞ்சுகின்றதாகக் காணப்படின், அப்போது, அத்தகைய மேன்மிகை, தேர்தல்கள் ஆணையாளரினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

ஆகவே தயவு செய்து பிரச்சனை இல்லாத ஒரு இடத்தில் பிரச்சனைகளைக் காணாதிருப்போம். மேலும் ஒட்டுவேலை தேவைப்படாத இடத்தில் பாராளுமன்றத்தை ஒட்டுவேலை செய்யும்படி விட்டுப் பாரத்துக்கொண்டிராமல் அதிக காலமாயக் காத்திருந்த உள்ளுராட்சி நியமனங்களை இன்னும் தாமதிக்காது செய்வோம். சட்டபூர்வ மாற்றம் தேவைப்படுவது எல்லா விகிதாசார நியமனங்களும் பெண்களாயிருந்தும் 25% பெண்கள் ஒதுக்கீடு அடையப் பெறமுடியா நிலைமையில் மட்டுதான்.

பெண்கள் பிள்ளைகள் சிரேஷ்ட வயதினர் ஆகியோரின் விசேட தேவைகளை கூட அறிந்திருப்பதாலும், மேலும், பொதுவாக எம் அனைவரினதும் பொதுத்தேவைகளை இன்று ஆண்களுக்கு நிகராய்ப் பெண்களும் செய்ய முடிவதாலும் பெண்களும் பிரதிநிதிகளாயிருக்கும் உரிமையைக் பெற்றவராவர். இந்தச் சொற்ப 25% பங்கீட்டுக்குக் கடினமாக அவர்கள் உழைத்திருக்கிறார்கள். ஆகையால் கட்டாயமாய் அமுலாக்கவேண்டிய இந்தச் சட்டத்தில் அவர்களுக்கு விட்டுக் கொடுப்பது பற்றி இவ்விடம் முரண்படாதிருப்போம்.

உலக பூராகவும் அதிகாரப் பரவலானது தம்மைப் பற்றிய விடயங்களைத் தீர்மானிப்பதில் எல்லோருமாய் உள்ளடக்கப்படுவதற்கான வழியாகக் காணப்படுகிறது. உள்ளுர் அதிகாரம் பற்றிய தீர்மானங்கள் உள்ளுர் மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும். இதில் மேலும் தாமதம் ஏற்கப்படுவதற்கில்லை. உள்ளுர் அதிகார உறுப்பில் 1.8% பெண்களை மட்டும் வைத்து ஆண்களாகிய நாம் இப்பல வருடங்களாய் முடிவெடுத்து வருகிறோம். எமது அதிகாரத்தைப் பரவலாக்கிப் பெண்களையும் குரல்கொடுக்க வைப்போம்.

பிற்குறிப்பு: 20. 02. 2018
நேற்றுப் பாராளுமன்றத்தில் ஆணைக்குழுவினர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான ஒரு கூட்டம் சபாநாயகரின் தலைமையின் கீழ் நடைபெற்றது. ஆணைக்குழு கட்சித் தலைவர்களுக்குச் சமர்ப்பித்தனவாவது:
1. சட்டத்தின்படி ஒவ்வொரு உள்ளுராட்சி சபைபிலும் பெண்கள் குறைந்தது 25% ஆவது இருக்க வேண்டும்.
2. ஆனால் காரைநகா; கரைச்சி போன்ற சில சபைகளில் அநேக வட்டாரரீதியான ஆசனங்களை வென்ற கட்சிகளுக்கு விகிதாசாரரீதியில் ஒரு சில ஆசனங்கள் மட்டுமோ, அல்லது அதுவும் இல்லாத நிலையோ ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர்களுக்குப் பெண்களை நியமிக்கும் சுதந்திரம் பெரிய அளவில் இல்லை. அதேவேளை சட்டம் குறிக்கின்றபடியாய் மூன்றிற்குக் குறைவான ஆசனங்களையும் பெற்று, 20% க்கும் குறைவான வாக்குகளையும் பெற்ற கட்சிகளையோ அல்லது சுயாதீன குழுக்களையோ பெண்களை நியமிக்குமாறு கட்டாயப் படுத்தும் அதிகாரமும் ஆணைக்குழுவிற்கில்லை.
3. ஆகவே, ஆணைக்குழு இந்நிலையிலுள்ள சபைகளில் இடைநிலையிலுள்ள கட்சிகளின் ஊடாகவே அந்த 25% த்தை செயற்படுத்த முடியும்.
4. இதற்கு இடைநிலையிலுள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
5. ஆனால் ஆணைக்குழுவின் கருத்தானது இத்தேர்தலை நடத்தும் வரை விட்டு விட்டு, பின்பு இத்தேர்தல் நடாத்தப்பட்ட சட்டத்தைப் போய் மாற்றி ஏற்கனவே முடிவடைந்த தேர்தலுக்கு அதை அமுல் படுத்த முடியாது.

இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நடந்த சம்பாஷணையில் ஏற்றுக் கொள்ளப் பட்டவையாவன:
1. பாராளுமன்றம் தான் சட்டமாற்றங்களைத் தீர்மானிக்க வேண்டியது.
2. அந்த மாற்றங்கள் இனி வருங்காலத் தேர்தல்களுக்கே செல்லுபடியாகும்.
3. குறிப்பாக வரப்போகின்ற மாகாணசபை, பாராளுமன்றத் தேர்தல்கள் என்பவற்றிற்கான சட்டங்களும் திருத்தப் பட வேண்டும்.
4. பெண்களுக்கான ஒதுக்கீட்டைக் கட்சிகளிடம் சட்டம் வேண்டிநின்றாலும் அது கட்சிகள் தம்விருப்பமாகச் செய்ய வேண்டிய பொறுப்பென்றும், கட்டாயப்படுத்தினால் ஆண்கள் கொந்தளித்தெழுந்து இந்த ஓதுக்கீட்டை சட்டத்திருத்தத்திலிருந்து முற்றாக விலக்கிவிடுவார்கள் என்று சில பாராளுமன்றத்தினாரால் கருத்துத் தெரிவிக்கப் பட்டது.
5. சில பழைய சட்டங்களின் படி ஒரு சபைக்கு அங்கத்தவர்களின் சரியான நியமனம் இல்லாவிடினும், அச்சபை இயங்கமுடியும். இதன்படி 25% பெண்களைக் கொண்டு அமைக்க முடியாத சபைகளை இயக்கமுடியும்.

இந்தச் சிக்கலை முடிவிற்குக் கொண்டுவரும் பொறுப்பு பாராளுமன்றத்தினது மட்டுமே. ஒரு ஜனநாயக நாட்டின் நன்ன நடத்தைக்குப் பெண்களினதும், நலிந்த பிரதிநிதித்துவம் உடையவர்களினதும் கட்டாய அங்கத்துவம் அவசியம் என்று உணர்ந்திருப்பவர்கள் உடனடியாகத் தம் கருத்துக்களைப் பிறருக்கும் இவ்வேளை புரிய வைப்பது நன்று.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு