தலையற்ற கோழியாக அந்தரித்து ஓடும் தமிழர் விடுதலைக் கூட்டணி: த ஜெயபாலன்


TNA-Sampanthan-Sumanthiran10814501surash-anandCM-Gajan-@-vakeesamதமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய தலைவர் பொன் சிவசுப்பிரமணியத்தை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்க லண்டன் கிளை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. மீண்டும் ஒருமுறை தவறான காரணங்களுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி பேசப்படுகின்றது. அண்மையில் சிறிய நம்பிக்கையோடு கட்சியின் தலைமைப் பொறுப்பையேற்ற பொன் சிவசுப்பிரமணியம், தனது தலைமைத்துவத்தை நிரூபிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்படாமலேயே வெளியேற்ற முயற்சிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினர் சுதா மாஸ்ரர் லண்டன் கிளையைத் கேள்விக்கு உட்படுத்தியதை அடுத்தே இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்தது.புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பின் பொன் சிவசுப்பிரமணியம் இலங்கை சென்றிருந்ததும் அங்கு அவர் கட்சியின் எதிர்காலம் தொடர்பாக தமிழரசுக் கட்சி உட்பட பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் இருந்தார். இது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வி ஆனந்தசங்கரியுடன் முரண்பாட்டை ஏற்படுத்தி இருந்தது. வி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கும் உள்ள முரண்பாடு காரணமாகவே அவர்களோடு பொன் சிவசுப்பிரமணியம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை வி ஆனந்தசங்கரி விரும்பியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொன் சிவசுப்பிரமணியம் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையை ஏற்கும் வரையும் அதன் பின்னரும் தமிழரசுக் கட்சியுடன் நெருக்கமான உறுவுகளை வைத்துள்ளவர் என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மை.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பையேற்குமாறு காலம்சென்ற் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் புதல்வர்கள் அணுகப்பட்டனர். ஆனால் அவர்கள் வெவ்வேறு காரணங்களால் முன்வரவில்லை. பெரும்பாலும் வி ஆனந்தசங்கரி அவர்கள் செயலாளராக இருக்கின்ற போது அவருடன் முரண்பாடுகள் ஏற்படும் என்பது அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்காத முக்கிய காரணம்.

முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரனை கட்சிக்குள் இணைக்க வி ஆனந்தசங்கரியால் முயற்சிக்கப்பட்டது. அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. அனந்தி சசிதரனை லண்டன் மத்திய குழு உறுப்பினர் எஸ் அரவிந்தன் கட்சிக்குள் இணைய அழைப்பு விடுத்ததாக அனந்தி சசிதரன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். கட்சியின் தலைமையை தன்னிடம் தந்தால் கட்சியை தான் செயற்படுத்த தயாராக இருப்பதாக தான் தெரிவித்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இவ்வாறான முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையிலேயே பொன் சிவசுப்பிரமணியத்தை தலைமைப் பொறுப்பில் லண்டன் கிளை முன்வைத்தது. அதனை இலங்கையில் உள்ள மத்திய குழு உறுப்பினர்களும் ஏற்றிருந்தனர். தற்போது அதே லண்டன் கிளை அவரை வெளியேற்ற முயற்சி எடுத்த செய்தி கசிந்துள்ளது.

அண்மையில் நடந்த உள்ளுராட்சி சபைக்களுக்கான தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தலையறுக்கப்பட்ட கோழியைப் போல் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தது. கட்சியின் செயலாளர் வி ஆனந்தசங்கரி ஈபிஆர்எல்எப் சுரேஸ் அணியுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் குதித்தார். யாழ் மாநகரசபையின் முதன்மை வேட்பாளராக 116 பவுண் நகை திருடி, நீதிமன்றில் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியும் அவருடைய உறவினர்களும் நிறுத்தப்பட்டனர். கட்சியின் தலைவர் பொன் சிவசுப்பிரமணியம் கட்சி செயலாளரின் அரசியல் நிலைப்பாட்டை முற்றாக நிராகரித்தார். அவர் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே முன்வைத்தார்.

உளளுராட்சி தேர்தல் பிரச்சார கலந்துரையாடலின் போது கட்சியின் மத்திய குழு உறுப்பினரான எஸ் அரவிந்தன் தமிழ் கருத்துக்களத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை தமிழ் காங்கிரஸ்ற்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தார். அத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், தமிழ் காங்கிரஸ்; தமிழர் விடுதலைக் கூட்டணியை துரோகக்கட்சியாகக் கருதி சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைத்த; தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டில் இணைய மறுத்துவிட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தீண்டத்தகாத கட்சியாகவே கருதுகின்றது.

அப்படியிருந்தும் அ அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், பொன் சிவபாலன், சரோஜினி யோகேஸ்வரன் போன்ற தலைவர்களின் படுகொலைகளை இன்றும் நியாயப்படுத்துகின்ற அவர்களைத் துரோகிக்களாகக் கருதுகின்ற புலியிசத்தின் தொடர்ச்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களை ஆதரித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுவைச் சேர்ந்தவரான அரவிந்தன் கருத்து வெளியிட்டு வருவதும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சைக்கிளில் ‘டபுள்ஸ் ஓட’ அவர் ஆசைப்படுவதும்; எப்படியாவது தமிழ் தேசியத்தை வைத்து ஓரிரு ஆசனங்களையாவது தமிழர் விடுதலைக் கூட்டணி வென்றுவிட வேண்டும் என்ற நப்ப ஆசை மட்டுமே. இச்சுயநல அரசியலுக்காக அக்கட்சியின் உயிர் கொடுத்த தலைவர்களை அவமதிக்கவும் அவர் தயங்கவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பொன் சிவசுப்பிரமணியம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் போராளியான பொன் சிவகுமாரனின் சகோதரர். எப்போதுமே புலியிசத்தின் படுகொலைளைக் கண்டித்து வருபவர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் அரசியலுக்கு விலைபோகாதவர். தமிழரசுக் கட்சியின் தலைமைகளுடன் மிக நெருக்கமானவர். அத்தலைவர்களின் அதே தலைமுறையைச் சேர்ந்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணியை அது ஆரம்பித்த இடமான தமிழரசுக் கட்சியுடன் சங்கமிக்க வைப்பதுவே அவரது நோக்கமாக இருக்கும். அதுவே தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சரியான முடிவாகவும் அமையும்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே எவ்வித அரசியல் ரீதிhன கொள்கை முரண்பாடுகளும் கிடையாது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மாவை சேனாதஜராஜா, இரா சம்பந்தன் போன்றோருக்கும் இடையே உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளே தமிழர் விடுதலைக் கூட்டணியின் இருப்புக்கு காணமாக உள்ளது. இந்த அடிப்படையில் இன்று மக்களாலும் அக்கட்சி முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டு உள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு என்று ஒரு குறிப்பான அரசியல் இல்லை.

கட்சியின் தலைவருடைய செயற்பாடுகளில் அதிருப்தி இருந்தால் அவரையும் கூட்டத்திற்கு அழைத்தே எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விவாதத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். கட்சியின் தலைவர் பொன் சிவசுப்பிரமணியத்தை இலங்கைக்கு வழியனுப்பி விட்டு அவரின் முதுகில் குத்தும் செயற்பாட்டையே கட்சியின் லண்டன் கிளை மேற்கொண்டு உள்ளது. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. மேலும் கட்சியின் தலைவருடன் கலந்து ஆலோசிக்கப்படாமலேயே செயலாளர் ஈபிஆர்எல்எப் சுரேஸ் அணியுடன் கூட்டுச் சேர்ந்தார். அதே போல் தமிழ் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் முடிவை தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு போதும் எடுக்கவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாட்டாளர் பிரபாகரன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். ஆனால் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தமிழ் காங்கிரஸ் க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

பொன் சிவசுப்பிரமணியத்தை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரான தனது சகோதரனும் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்த லண்டன் கிளையைச் சேர்ந்த பிரபாகரன் அவ்வாறான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தனது முழுமையான ஆதரவு பொன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு உன்டென்பது அவருக்கும் தெரியும் என்றும் தெரிவித்தார்.

கட்சியின் தலைவராக ஒருவரை பெயருக்கு நியமித்து விட்டு கட்சிச் செயலாளரும் மத்திய குழு உறுப்பினர்களும் தாங்கள் நினைத்வாறு செயற்படுவதும் தங்களுக்கு ஒத்துவரவில்லை என்பதற்காக து}க்கியெறிய முற்படுவதும் முற்றிலும் ஜனநாயக விரோதமான செயற்பாடாகும். பொன் சிவசுப்பிரமணியம் தனது தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்துவதற்கான தருணம் இது. கட்சியின் அரசியற் கொள்கையைத் தெளிவுபடுத்தி தான் தலைவராகப் பொறுப்பேற்ற பின் லண்டன் கூட்டத்தில் அறிவித்த விடயங்களை செயற்படுத்த முன்வரவேண்டும். கட்சியின் முடிவுகளுக்கு மாறாக தன்னிச்சையாக செயற்படுபவர்களை ஓரம்கட்ட வேண்டும். இல்லையேல் அவர் தன்னுடைய பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் கட்சியில் இருந்து வெளியேறி தன்னுடைய கெளரவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு