தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு திம்புக் கோட்பாடே எங்களின் நிலைப்பாடு – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்


28468041_10155255989437409_1155770124140967856_nதமிழ் மக்களின் அரசியல் உரிமையும் அவர்களுக்கான அபிவிருத்தியும் சமாந்தரமாகச் செய்யப்பட வேண்டும் என்ற எமது அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக மக்களிடம் எடுத்து விளக்கினோம். எந்தக் குழப்பங்களுக்கும் இடமில்லாத வகையில் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற, திம்புக் கோட்பாட்டுககுக் குறையாத, சுயநிர்ணய உரிமை உடைய சமஸ்டியே எங்களுடைய கொள்கை என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கி நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்

கேள்வி: சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அமைப்பு கிளிநொச்சியிலுள்ள மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

 

இது மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கான அடையாளம் இது. ஆனால், இந்த வெற்றி முழுமையடைந்திருக்க வேண்டும். அதாவது இந்தப் பிரதேச சபைகளின் ஆட்சியை நாம் அமைக்கக்கூடிய ஆதரவு கிடைத்திருக்க வேண்டும். அப்படி நாம் ஆட்சியமைத்திருந்தால், மக்களுக்குப் புதியதொரு – வினைத்திறனும் மக்கள் நலனும் உள்ள நிர்வாகச் செயற்பாடொன்று உருவாக்கப்பட்டிருக்கும். அப்படியான சூழலே மூன்று பிரதேசங்களிலும் இருந்தது. இதை அனைவரும் அறிவார்கள். ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கே இதுபற்றி நன்றாகத் தெரியும்.

 

நாங்கள் நேர்மையான முறையில், அரசியல் நாகரீகத்தோடு எமது பரப்புரைகளைச் செய்தோம். கடந்த காலத்தில் என்ன செய்தோம் என்பதை மக்களுக்கு நினைவு படுத்தினோம். எதிர்காலத்தில் எப்படியான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் என்பதைத் தெரியப்படுத்தினோம். கிளிநொச்சி மாவட்டத்திலும் வெளியிலும் உள்ள துறைசார் நிபுணர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள், பொது மக்கள், கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், விவசாயிகள், பனை தென்னை வளத் தொழிலாளர்கள், கடற்தொழிற் சமூகத்தினர், தொழிலாளர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து எதிர்காலத்திட்டங்களை உருவாக்கினோம். இதை முன்வைத்ததாகவே எமது பரப்புரை இருந்தது.

 

தமிழ் மக்களின் அரசியல் உரிமையும் அவர்களுக்கான அபிவிருத்தியும் சமாந்தரமாகச் செய்யப்பட வேண்டும் என்ற எமது அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக மக்களிடம் எடுத்து விளக்கினோம். எந்தக் குழப்பங்களுக்கும் இடமில்லாத வகையில் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற, திம்புக் கோட்பாட்டுககுக் குறையாத, சுயநிர்ணய உரிமை உடைய சமஸ்டியே எங்களுடைய இலக்கு என்பதைக் கூறினோம்.

 

ஆனால், எதிர்த்தரப்பினர் இதற்கு மாறாக மக்களைக் குழப்பும் வகையில், அரசியல் பண்பாட்டுக்கும் கண்ணியத்துக்கும் குறைவான முறையில் உண்மைக்குப் புறம்பான பொய்களையே பரப்புரையாகச் செய்தனர். அவர்கள் அரசியல் தீர்வு தொடர்பாகவோ, மக்களுக்கான எதிர்காலத்திட்டங்களைப் பற்றியோ எதுவுமே பேசவில்லை. மாறாகத் தனி நபர் தாக்குதல்களையும் அவதூறுகளையுமே செய்தனர். இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். இதனால்தான் எமது வெற்றி வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்காலம் இதை முறியடிக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

 

கிளிநொச்சியில் மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நாங்கள் எழுச்சியடைந்திருக்கிறோம். மக்கள் எம்மை வரவேற்றிருக்கிறார்கள். அதாவது, மக்கள் விழிப்படைந்திருக்கிறார்கள். அவர்களுடைய புதிய பயணம் ஆரம்பமாகியுள்ளது. இனி மக்களுக்கு வெற்றியே.

கேள்வி: எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமுள்ளதா?

 

நிச்சயமாகப் போட்டியிடுவோம். அதில் வெற்றியும் பெறுவோம். மக்கள் வெற்றியடைய வேணும் என்ற எங்களுடைய இலட்சியப் பயணம் வெற்றிகரமாகத் தொடரும்.

 

கேள்வி: உங்களது அமைப்பு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளதென்பதை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நிலையில் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டு எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுமா?

 

நாம் ஒரு கட்சியாகவே செயற்பட்டு வருகிறோம். கொள்கை, அதை அடைதற்கான கட்டமைப்பு, இலட்சிய நோக்கு, ஒழுங்கு விதிகள், நடைமுறைத் திட்டம், செயற்பாடு, எதிர்கால இலக்கு என அனைத்தையும் உள்ளடக்கியதாக எமது கட்சி உள்ளது. எமது கட்சியைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். அது சாத்திமாகும்போது ஏனைய இடங்களிலும் எமது கட்சியின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும். புதிய அரசியல் ஆளுமைகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இப்பொழுதே எமது கட்சி நாளாந்தம் பலமடைந்தே வருகிறது.

 

நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு அப்பால், பருத்தித்துறை நகரசபையிலும் எமது கட்சி போட்டியிட்டது. அதில் ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கிறோம். இந்தத் தேர்தலில் எமது சுயேட்சைக் குழுவுக்கு மொத்தமாக 20 ஆசனங்கள் கிடைத்துள்ளன. குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம். ஆகவே எதிர்காலத்தில் கட்சியாகப் பதிவு செய்து, அன்றைய அரசியற் சூழலுக்கு ஏற்ற மாதிரி எமது அரசியல் வியூகங்கள் அமையும். அதற்கமைய தேர்தல்களைக் கையாள்வோம்.

 

 

கேள்வி – உங்களுடைய கடந்த காலச் செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்களைச் சிலர் சொல்கிறார்கள். அப்பொழுது நீங்கள் முற்று முழுதாக அரசாங்க ஆதரவாகச் செயற்பட்டதாகவும் அரசாங்கத்தோடு இணைந்து தன்னிச்சையான முறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?

 

அது யுத்தம் நடந்த காலம், யுத்தத்துக்குப் பிந்திய காலம் அதாவது மீள் குடியேற்றக் காலம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. இந்த இரண்டு காலமுமே மிக நெருக்கடியான காலகட்டமாகும். நாம் எமது மக்களுடைய நலனைக் கருத்திற் கொண்டே அரசாங்கத்துடன் செயற்படுவதற்குத் தீர்மானித்திருந்தோம். அரசாங்கத்துக்குப் பலம் சேர்ப்பது எமது நோக்கமல்ல. எமது மக்களுக்குப் பலம் சேர்ப்பது, அவர்களுக்கு நன்மையைப் பெறுவது என்பதே எமது இலக்காக இருந்தது.

 

ஏனென்றால், நாம் இந்த மக்களுக்காகவே எமது இளைய வயதில் எம்மை முழுமையாக அர்ப்பணித்துப் போராடியவர்கள், அரசியலில் ஈடுபட்டவர்கள். ஆகவே, எமது மக்களின் நெருக்கடிகளையும் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் அவலத்தையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என உணர்ந்து, அதை முடிந்தளவு தீர்த்து வைப்பதற்காகவே அத்தகைய முடிவை எடுத்திருந்தோம். அது ஒரு காலகட்டம் வரைக்கும்தான். பின்னர் எமது நிலைப்பாட்டை மாற்றி, எமது அரசியல் பயணத்தைத் தனித்துவமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அரசியல் என்பது ஒரு விஞ்ஞானச் செயல்முறை. அது எப்போதும் வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கும். அதற்கேற்றமாதிரி மாற்றங்களும் இருக்கும். இது அறிவுபூர்மான வளர்ச்சியும் மாற்றமும் ஆகும்.

 

ஆனால், இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், மக்களுக்கு எதையுமே செய்யாதவர்கள் எங்களின் மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள். அது அவர்களுடைய அரசியல் வறுமை. நான் ஏற்கனவே கூறியதைப்போல இவர்கள் கடந்த காலத்தில் மக்களுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினார்களா? அல்லது தற்பொழுது மக்களுக்கு உண்மையைச் சொல்கிறார்களா? என்பதைச் சொல்லுங்கள்.

 

நாம் அப்போதும் சரி இப்பொழுதும் சரி வெளிப்படையாகவே எதையும் செய்கிறோம். இரகசியமாக எதையும் செய்யவில்லை. யாரிடமும் பணம் பெறவில்லை. எந்தப் பணத்தையும் மோசடி செய்யவில்லை. மக்களுடைய அபிவிருத்திக்காக வந்த பணத்தைத் திருப்பி அனுப்பவில்லை. இன்னும் இன்னும கூடுதலான நிதியையும் திட்டங்களையும் தமிழ்ப்பிரதேசங்களுக்குக் கொண்டு வந்தோம். குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டத்துக்குக் கொண்டு வந்தோம். இவர்களைப் போல மாறாட்டக் கதைகளைக் கதைக்கவில்லை.

 

கடந்த காலத்தில் எம்முடைய முயற்சியின் விளைவாக 6000 பேருக்கு மேல் கிளிநொச்சி மாவட்டத்தில் அரச, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றனர். இது தவறா? காணியற்ற மக்கள் அனைவருக்கும் காணிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்ற மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியிருந்தேன். இது தவறா? அனைத்துப் பிரதேசங்களுக்கும் மின்சாரம் என்ற திட்டத்துடன் எல்லாப் பிரதேசங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டு சென்றேன். இது தவறா? விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள் எனச் சகலருக்குமான அடிப்படை உதவிகளைச் செய்தோம். அவற்றை முழுமைப்படுத்தி, முன்னாள் போராளிகள், மாற்றுவலுவுடையோர், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என அனைவருக்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன் எம்மிடமிருந்த அதிகாரம் இல்லாமற் போனது. ஆனாலும் தொடர்ந்தும் மக்களோடு இணைந்து நின்று பணியாற்றுகிறோம். எம்முடன் புலம்பெயர் சமூகத்தினரும் கைகோர்த்தால் நிச்சயமாக நாம் எல்லோரும் வியக்கும் விதமாக மாற்றங்களைச் செய்து காட்டுவோம்.

 

எல்லா விமர்சனங்களுக்கும் உரிய பதில் நேர்மையான – அர்ப்பணிப்பான செயற்பாடாகும் என்பதே எமது நிலைப்பாடு.

 

சமூகப் பிளவுகளை உண்டாக்கும் விதமாக நீங்கள் செயற்பட்டு வருகிறீர்கள் எனவும் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று இன்னொரு குற்றச்சாட்டை சிறிதரன் எம்பி கூறியிருக்கிறார். இது தொடர்பாக என்ன சொல்கிறீர்கள்?

 

இது அவருடைய இன்னொரு அப்பட்டமான பொய்யாகும். சமூகப் பிளவுகளை யார் உண்டாக்கியது? இன்னும் சமூகப் பிளவை உண்டாக்கும் விதமாகச் செயற்படுவது யார் என்பதையெல்லாம் இந்த உலகமே அறியும். கிளிநொச்சி மாவடத்திலுள்ள மக்களைச் சமூக ரீதியாகப் புறந்தள்ளியவர், அவர்களில் ஒரு தொகுதியினரை இழிவு படுத்தும் விதமாகச் செயற்பட்டவர் சிறிதரனே. இது தனிப்பட்ட குற்றச்சாட்டல்ல. நடந்த உண்மையாகும். நாம் எப்போதும் யார் மீதும் குற்றச்சாட்டையோ அவதூறுகளையோ ஆதாரமற்ற விடயங்களையோ கூறும் அரசியலைப் பின்பற்றுகின்றவர்கள் இல்லை. நாங்கள் இதற்கெதிரான எமது கண்டனத்தைத் தெரிவித்தபோது, அதையெல்லாம் மூடி மறைப்பதற்காகவே அந்த மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களை நோக்கி “மக்கள் பணி” என்ற பெயரில் இப்பொழுது பல வேலைகளைச் செய்து வருகிறார். இது எமக்கும் எமது மக்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். அவரை முடிந்தவரையில் மாறுதலுக்குள்ளாக்கியிருக்கிறோம்.

 

இது மட்டுமல்ல, அப்பொழுது – அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பாக அபிவிருத்தியை மக்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு அரசியல் உரிமையே தேவை. அதையே நாம் செய்வோம். றோட்டுப் போடுவது எம்முடைய வேலை இல்லை. மின்சாரத்தை எம்மிடம் கேட்காதீர்கள் என்று கூறியவர்கள், இப்பொழுது ஒவ்வொரு வீதி நின்று வாய்க்கு வாய் அபிவிருத்தி பற்றிப் பேசுகிறார்கள். அன்று எம்மைக் கண்டபடி விமர்சித்தவர்களை இன்று மக்கள் விமர்சிக்கிறார்கள். அது மட்டுமல்ல, இவர்களுக்கு மக்கள் தேர்தலின் மூலமாகப் படிப்பினைகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்கள் வாக்களித்த முறையைச் சரியாக எடுத்து ஆராய்ந்தால் அந்த மக்களின் கொதிப்பு எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பது புரியும்.

 

மக்களுக்குப் பொய்களைக் கூறாமல் உண்மைகளையே சொல்லும் துணிவிருந்தால், நேர்மையாக முறையில் கண்ணியமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் அவர்கள் யாரை ஆதரிப்பார்கள்? எதை வரவேற்பார்கள் என்று புரியும்.

 

கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் எப்படியாக உங்களுடைய செயற்பாடுகள் அமையவுள்ளன?

 

இந்தச் சபைகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடையாது. பூநகரியில் மட்டும் கூட்டமைப்பு ஓரளவு ஆட்சியை வலுப்படுத்த முடியும். ஏனைய சபைகளில் கூட்டுச் செயற்பாட்டின் மூலமே சபைகளை இயக்கலாம். மக்களுக்குரிய நலத்திட்டங்களுக்கு நாம் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். ஆனால், வினைத்திறனுடன் சபைகளை இயக்கக் கூடிய, அதற்குத் தலைமை வகிக்கக்கூடிய, வழிகாட்டல்களைச் செய்யக் கூடிய அளவுக்கு இந்தச் சபைகளைப் பொறுப்பேற்கும் கூட்டமைப்பினருக்கு ஆற்றல் கிடையாது. இதற்குச் சிறந்த உதாரணம், கடந்த காலத்தில் கரைச்சிப் பிரதேச சபையை இவர்களே வைத்திருந்தனர். குறிப்பிட்டுச் சொல்லக் கூடியமாதிரி அப்பொழுது என்ன செய்தார்கள்? அதுவும் அறுதிப் பெரும்பான்மையோடு அந்தச் சபை இவர்களின் கைகளில இருந்தது. இன்று அந்த நிலை எங்குமே இல்லை.

 

இப்பொழுது எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களையே எதிர்காலத்திட்டங்களாக முன்னெடுக்கப்போவதாக மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எமது பலமே இதற்குக் காரணம். ஊழல் இல்லாத, மக்களுக்கு விசுவாசமான நிர்வாக முறையை நாம் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிப்போம். இதற்கு மாறாகச் செயற்பட்டால் மக்களுடன் இணைந்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

 

தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகின்றவர்கள். ஆகவே எதிர்காலத்தில் யார் யாருடன் கூட்டுச் சேர்ந்து செயற்படலாம் என்று கருதுகிறீர்கள்?

 

எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயற்படுவோம். ஆனால், பொய்யான அரசியற் கூட்டுகள், தேர்தல் வெற்றிக்கான சந்தர்ப்பவாதக் கூட்டணிகள், ஜனநாயகமற்ற சேர்க்கைகளில் நாங்கள் ஆர்வம் காட்ட மாட்டோம். எம்முடன் நேர்மையான சக்திகள், மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படுவோர், அரசியல் உறுதிப்பாடுள்ளவர்கள் வந்து இணைந்தால் அவர்களை இணைத்துக் கொள்வோம். அப்படியானவர்களோடு நாமும் இணைந்து கொள்வோம். இது அந்தந்தச் சூழ்நிலையைப் பொறுத்ததாக அமையும்.

 

அரச தரப்போடு அல்லது தென்னிலங்கைக் கட்சிகளோடு இணைந்து செயற்படும் வாய்ப்புள்ளதா?

 

இல்லை. நிச்சயமாக இல்லை. மக்களின் அரசியல் விருப்பும் அவர்களுடைய தேவையுமே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு