தேசிய முத்திரை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் எம் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளா? : சாமுவேல் இரத்தினஜீவன் ஹே. ஹூல்


Kandaia_Neelakandanதேசிய வீரர்களைத் தெரிவு செய்வது அவர்களை வாலிபர்களுக்குத் தம் வாழ்க்கையை அமைப்பதற்கு ஒரு முன்மாதிரியாக வைப்பதற்கே ஆகும். ஹேமந்தா வர்ணகுலசூரிய (ஐலன்ட், 1-3-2018) என்னும் சட்டத்தரணி கந்தையா நீலகண்டனுக்கு ஒரு வாழ்த்தரங்கு அமைத்து அதில் அவர் படத்தை வைத்து திரைநீக்கம் செய்ய வேண்டும் என்கிற கூற்று அதிர்ச்சிக்கு இடமானது. தேசிய நலன்கருதி சொல்லத் தயங்குவதைச் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு சமுதாயத்தின் தேசிய வீரர்கள் வழிகாட்டிகளாய் அமைய வேண்டும் என்ற தேவையை நிலை நாட்டுவது முக்கியம்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூவரைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவிடம் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் தொடர்பான பொறுப்புடைமையைப் பற்றி ஒரு அறிக்கையைத் தருமாறு வேண்டியிருந்தார். அவ்வறிக்கை எமது மத்தியில் வந்து சேர முன்பே இலங்கையில் ஒரு மனவெறி போன்ற பரபரப்பு உண்டாயிற்று. அச்சமயம் ஜெயந்தா குணசேகரா (ஜனாதிபதியின் சட்டத்தரணி) ஐ.நா. அறிக்கையைக் கண்டிக்கும் 23-05-2011 திகதியிட்ட ஒரு பிரேரணையை வழக்கறிஞர் சங்கத்தில் முன்வைத்தார். மேலும் அவர் முந்திய செயலாளர் நாயகம் நவநீதம்பிள்ளையையும் கண்டித்து “அவர் ஒரு தமிழிச்சி ஆவார். தமிழர் பக்கத்தையே எடுப்பார். ஏனெனில் “தண்ணீரை விட இரத்தம் தடித்தது” என்றார் (சண்டே ஒப்சேவர் 24-04-2011). வழக்கறிஞர் சங்கமோ, ஐ.நா. அறிக்கை வெளிவரும் வரை குணசேகராவின் பிரேரணையை ஒத்தி வைத்து, பின்பு அறிக்கை கிடைத்ததும் 07-05-2011 அன்று, ஒரு கடமை போல் முற்றாக ஐ.நா. அறிக்கையை நிராகரித்து முன்னைய பிரேரணையாக ஒருமனதாக ஏற்றுக் கொண்டது. இவ்வாறு சிங்களவர் அவர்களது விளக்கப்படியே தம் இரத்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் இனப் படுகொலையை மூடி மறைப்பது எதிர்பார்க்கப்பட வேண்டியது.

ஆனால் தமிழருமா? அன்று கந்தையா நீலகண்டன் உட்பட மூன்று தமிழர் அப்பிரேரணையை ஆதரித்தார்கள். (சா ஹே ஹூல், டெயிலி மிரர், 04-04-2011). தமிழராகிய அம் மூவரும் இனப் படுகொலைகளைப் பற்றிக் கட்டாயம் அறிந்திராதவர்களா?

இலங்கையில் தேசிய பெரியோராகத் தெரிவுபட ஒருவர் சிங்களவரின் பக்கம் சார்ந்து தமிழர்களின் நலன்களைப் புறக்கணித்த நிலையில் நிற்கத் தேவை என்றல்லோ தெரிகிறது. அப்படியிருக்கச் சமயபக்தர் தோற்றத்தில் அவர்கள் வடகிழக்கில் தோன்றுவாராகில் அவர்கள் பின்னனி மறக்கப்படுகிறது. திரு. நீலகண்டன் முள்ளிவாய்க்கால் கொலைகளை மறுத்த அதே சமயம் இலங்கை இந்து சமய கொங்கிரசின் தலைமையை எடுத்து தமிழர் மத்தியிலுள்ள சிறுபான்மையினரை ஒதுக்கினார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு இந்துசமயத்தினராக இருக்க வேண்டுமென்று சம்பாஷணைகளிலும் ஒரு வீரகேசரி நேர்காணலிலும் கூறியுள்ளார். அவர் அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களுக்கு அடிபணியத் தயாராய் இருந்ததால் சந்திரிக்கா குமாரதுங்காவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தில் ஆளுநர் பதவியொன்றில் நியமிக்கப்பட்டார். இது பொருத்தமில்லாத நியமனம் என்று நான் சந்திரிக்கா குமாரதுங்காவிற்கு எழுதிய பொழுது அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

நீலகண்டன் கிறிஸ்தவருக்கு எதிராகப் பல்கலைக் கழகத்தில் ஊட்டிய நஞ்சு பல்கலைக்கழகத்தில் வேறு பெரிய பதவிகளுக்கும் தொற்றியுள்ளது. மானியங்கள் ஆணைக்குழு தவிசாளர் மோகன் டி சில்வா, பேராசிரியர் காலோ பொன் சேகா கையொப்பமிட்ட வாக்கு மூலத்தின்படி, இந்து சமயத்தவர்களுக்கும் ஆறுமுக நாவலரின் புகழை ஏற்றுக் கொள்பவர்களுக்கும் மட்டும் வேலை வாய்ப்பு கொடுக்கப் பல்கலைக்கழகத்திற்கு உரிமை உண்டு என்று கூறினார்.

ஆனால் பல்கலைக்கழகச் சட்டத்தின் 30 வது பிரிவின் படி ஒரு பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்புப் பெறவோ அல்லது பட்டதாரியாய் வெளிவருவதற்கோ சமய ரீதியான ஒரு கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. மேலும் மோகன் டி சில்வா வாக்கு மூலங்களில் ஆணைக் குழுவிற்குப் பல்கலைக் கழகங்களின் சட்ட வீரோத நடவடிக்கைகளை நிறுத்த அதிகாரமில்லை என்று வேடம் போடுவதால் பல்கலைக் கழகங்களில் கள்ளச் செயல்கள் விஸ்தரிக்கப்படுகின்றன. உதாரணமாக ராஜன் ஹூல் கிளிநொச்சி வளாகத்தில் மரங்கள் களவாடப்படுகிறது பற்றி ஐலன்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையைப் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் ஒவ்வொரு மட்டத்திலும் இப்பொழுது அதிகாரிகளுக்குத் தண்டணை இன்றிக் களவெடுக்கச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள சமய பேதத்தை மதிப்பிடுவது கஷ்டமானது. அண்மையில் நடத்தப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் யாழ் நகர சபையின் நான்காம் வட்டாரத்திற்கு (நல்லூர்) வேட்பாளராகத் தமிழரசுக் கட்சியால் நிறுத்தப்பட்டவர் ராகினி ராமலிங்கம் என்ற கிறிஸ்துமதப் பெண் ஆவார். தேர்தல்கள் ஆணைக் குழுவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி டக்ளஸ் தேவானந்தாவின் டி.டி. டீ.வி. தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் நல்லூரே இராஜதானி என்றும் அங்கு ஒரு கிறிஸ்தவரைப் பிரதிநிதி ஆக்குவது பொருந்தாது என்றும் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. இதை ஆணைக் குழு விசாரித்து வருகின்றது. இந்துக்களை மிகப் பெரிய பெரும்பான்மையாகக் கொண்ட நல்லூர் வட்டாரம் குற்றமில்லா முடிவாக இக்கூற்றை நிராகரித்து ராகினியை தெரிவுசெய்துள்ளது.

எனது பார்வைக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக உத்தியோகத்தர்களுக்குப் போட்டியிடும் சில உயர்வர்க்க இந்துக்கள் சமய வேற்றுமைகளைக் கீழ்த்தரமாய் உபயோகிக்கத் தயாராக இருக்கிற போதிலும், சாதாரண மக்கள் பேதம் பாராது திறந்த மனதுடன் செயற்படுகிறார்கள்;. இதுவே சிங்கள – தமிழ் மக்களுக்கிடையிலான நிலைமையும் என்று நான் கருதுகின்றேன்.

Stamp_of_Navalar_and_Ponnampalamஇவ்விடத்தில் ஆறுமுக நாவலருக்கும், பொன் இராமநாதனுக்கும் வெளியிடப்பட்ட தபால் முத்திரைகளைப் பார்ப்போம். 25-11-1847 ம் திகதியிட்ட உதயதாரகைப் பத்திரிகையின்படி கலாநிதி. பீட்ட பேசிவல் பாதிரியின் தலைமையில் இயங்கிய வெஸ்லியன் செமினரிக்கு – இன்றைய மத்திய கல்லூரிக்கு – கேப்ரியல் ஜெரோனி என்னும் நளவர் குலத்தைச் சார்ந்த கெட்டிக்கார மாணவன் அனுமதிக்கப்பட்ட போது அங்கு மாணவனாயிருந்த நாவலர் தலைமையில் அரைவாசி மாணவர்கள் அப்பாடசாலையை விட்டு வெளியேறினர். ஆனால் நாவலர் அவர்களுக்குத் தொடங்கிய பாடசாலையின் தரக் குறைவு காரணமாக மாணவர்கள் திரும்பி வந்தனர். இதைத் தொடர்ந்து நாவலர் மிஷனரிமாரை மிலேச்சர் என்று எழுத்தில் விமர்சித்து “யாழ்ப்பாண சமய நிலை” என்ற தன் நுhலில் மிஷனரிகளின் வீட்டிற்குச் சென்றவர்களை “குசினி பறையன்டை கோப்பி” யை குடிப்பவர்களாக கேலி செய்தார்

இதே நாவலர் தன் சிஷ்யனான பொன் இராமநாதனை சட்டமன்றச் சபையின் நியமன அங்கத்தவராக பரிந்துரைத்தார். பேராசிரியர் சிவத்தம்பி விபரித்தது போல இராமநாதனும் நாவலரைப் போல் தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட அனுமதிகளை எதிர்த்து அனுமதிக்கப்பட்டாலும் அவர்களை வாங்கில் இல்லாமல் வெளி முற்றத்தில் அமர்த்த வேண்டும் என்று வாதாடினார். இந்த இராமநாதன் தொடர்பு தெற்கிலும் நாவலருக்குச் சிங்களவரின் நன்மதிப்பை பெற்றுக் கொடுத்தது. இராமநாதனை சட்டசபைக்கு அனுப்புவதற்கு எதிர்த்து நியமனம் கேட்டது அவரது மச்சான் ஏ.டி.ஜீ பிரிட்டோ. நாவலர், இராமநாதனை பரிந்துரைத்த பொழுது இராமநாதன் சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியின் பட்டதாரி என்ற மாதிரி ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் உண்மை என்ன? இராமநாதனின் சரிதை ஆசிரியரான சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் எம். வைத்திலிங்கத்தின் படி இராமநாதனும் அவரது சகோதரன் குமாரசாமியும் அக் கல்லூரியில் இருந்து தட்டப்பட்டு இடாப்பிலிருந்து அவர்களது பெயர்களும் அழிக்கப்பட்டன. அதற்கு காரணம் அவர்கள் வாலிப பிராய குழப்படிகளில் கடுமையாக ஈடுபட்டமை என்கிறார் வைத்திலிங்கம்.

எனது மூதாதரையரான ராவ் பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி ஒருவர் ஆவார். அவரே இந்தியாவில் இராமநாதன் சகோதரர்களுக்குக் காவலராய் இருந்தார். எமது குடும்ப வழக்கில் வந்தபடி இச் சகோதரர்கள் தம் வாலிப பிராய இச்சைகளுக்கு இணங்கிவார்களோ இல்லையோ, உண்மையாக நீக்கப்பட்டது சோதனைகளில் கொப்பியடித்து அம்பிட்டதற்கு. இதனால் அச் சகோதரர்கள் சி.வை.தா.விற்கு பெரிய ஒரு அவமானத்தை உண்டாக்கினார்கள். மேலும் இராமநாதன், அவர் மனைவி வள்ளியம்மை இறக்கும் முதலே தன் வெள்ளைக்கார சீஷியுடன் புகையிரதப் படுக்கைப் பெட்டியில் பிரயாணம் செய்தது பற்றியும் பின்பு வள்ளியம்மை கிணற்றில் இறந்து கிடந்தது பற்றியும் பல கேள்விகள் உள்ளன.

இராமநாதனுக்கு எதிராக உள்ள மிகப் பெரிய குற்றச்சாட்டு கலாநிதி குமாரி ஜயவர்த்தனவின் “முகவரியற்றோர் பெருமகன்களாகியது” என்ற புத்தகத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. குமாரியின் படியும் அன்று வைத்திலிங்கத்தின் படியும் பிரிட்டோவே மக்களின் ஆதரவைக் கொண்டிருந்தார். குமாரியின் ஆராய்ச்சியின் படி அப்படியிருந்தும் இராமநாதன் குடும்பத்திடமிருந்து அன்றைய ஆங்கிலேய ஆளுநரும் வேறும் பெரிய வெள்ளையரும் கடன்கள் எடுத்து வாங்கப்பட்ட நிலையில் இராமநாதன் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டார். இந்தக் குற்றத்திற்கு இந்த ஆங்கிலேயர் நாடனுப்பப்பட்டார்கள்.

வள்ளியம்மையின் சகோதரியின் கணவரான பிரிட்டோ ஒரு கிறிஸ்தவர். எம். வைத்திலிங்கம் கிறிஸ்தவர்களை சலுகைகளுக்காக மாறியவர்கள் என்று தாக்கி இராமநாதனைப் புகழ்கிறார். பின்பு தன்னை மறந்து இராமநாதனை உயர்த்தும் நோக்குடன் அவர் அம்மம்மாவின் தகப்பனான எதிர்மானசிங்க முதலியார் டச்சுக்காரரின் கீழ் வன்னிப் பிரதேச ஆளுநர் என்கிறார். ஆனால் வில்லியம் ஹெளலான்ட் தனது 1865 ம் ஆண்டு புத்தகத்தில் குறிப்பிட்டபடி டச்சுக் காலத்தில் முதலியார், பியன் உட்பட எந்தவொரு அரசாங்க உத்தியோகத்துக்கும் டச்சுச் சபையில் கிறிஸ்தவ ஞானக் குளிப்பு பெற்றவராய் இருக்க வேண்டும். இராமநாதனின் மூதாதையரான எதிர்மானசிங்கமும் உண்மையில் ஒரு கிறிஸ்தவர் தான்.

சட்ட சபையின் அங்கத்தவராகிய பின்பு அரசியல் தந்திரம் மிக்க இராமநாதன் 1915 முஸ்லிம் சிங்களவர் கலவரத்தின் போது சிங்களப் பக்கத்திற்கு லண்டனில் பரிந்துரைத்து தனது கையை மேலும் பலப்படுத்திக் கொண்டார். அக் கட்டத்தில் சிங்களவரோ முஸ்லிம்களோ சரியென்று கூற முடியாதிருந்தது குறிப்பிடத்தக்கது. இராமநாதன் லண்டனில் இருந்து திரும்பியதும் சிங்களவர் அவருக்கு ஒரு பெரிய வரவேற்பை கொடுத்து கெளரவித்தார்கள். இவர் மேலும் முஸ்லிம்களை தாழ்ந்த சாதி தமிழர் என்று அவதூறு செய்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு நிரந்தரமான பெரும் பிளவை எற்படுத்தி உள்ளார்.

இராமநாதன், நாவலர் முத்திரைகளை விட இலங்கையில் தேசிய பெரியோர்களுக்கான 48 முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் தமிழருக்கு 6 முத்திரைகள் உள்ளன. இந்த ஆறில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்திற்கான முத்திரை தகுதியற்றது. குறிப்பாக மதிப்பிற்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கும், கொலை செய்யப்பட்ட எதிர்க் கட்சி தலைவரான அ. அமிர்தலிங்கத்திற்கும் ஒரு முத்திரையும் அச்சிடப்படாதிருக்கும் பட்சத்தில் சிங்களவருக்குப் பந்தம் பிடித்த அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இலங்கையில் முத்திரை அடிக்கப்படுகிறது போலும்!

இராமநாதன் கிறிஸ்தவ சமயத்திலிருந்து மதம் மாறிய பெண்ணை இரண்டாம் தாரமாய் முடித்திருந்தார். ஆனால் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ரோஸ், அழகுமணி கிளப் என்ற கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்த போது, அது அழகுமணி அம்மாவிற்கு இரண்டாம் தாரம். கிளப் குடும்பத்தினர் காரைதீவின் அமெரிக்கன் மிஷன் திருச்சபை அங்கத்தவர். அவர்கள் மலாயாவில் உழைத்த நுhற்றுக் கணக்கான ஏக்கர் இறப்பர் தோட்டங்களின் உரிமையாளர். இத் திருமணத்தின் மூலமே பொன்னம்பலம் ஒரு பெரும் செல்வந்தரானார். இந்தக் கல்யாணத்தில் பொன்னம்பலம் இந்துமதச் சட்டங்களை மீறினாலும் சாதிச் சட்டங்களைக் கவனமாகக் கடைப்பிடித்தார்.

ஒதுக்கப்பட்ட சாதித் தலைவரான கோண்டாவில் சீனியார் குணசிங்கத்தின்படி 1956 பாராளுமன்றத்தில் மொஸ்கோ – கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவரான பொன். கந்தையா பொன்னம்பலம் மந்திரியான காலத்தில் அவர் ஸ்தாபித்த தொழிற்சாலைகளில் ஒதுக்கப்பட்ட சாதியினருக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை எனவும் அதனால் பண்டாரநாயக்கவின் புதிய அரசாங்கம் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இதற்குப் பிரதியுத்தரமாகப் பொன்னம்பலம் சொன்னாராம் “அப்படியொரு தேவையுமில்லை. ஏனென்றால் யாழ்ப்பாணத்திலுள்ள மிகச் சிறந்த உஸ்தியோகங்கள் கீழ்சாதியினர் கையிலேயே உள்ளன” என்று. அதை நம்ப முடியாத பண்டாரநாயக்கா “இவ் உத்தியோகங்கள் எங்கே?” என்று, கேட்க பொன்னம்பலத்தின் பதில் “கள்ளுச் சீவும் உத்தியோகம்” என்றார், என்கிறார் சீனியார். அந்நாட்களில் நளவர்களின் வாழ்க்கை நிலைகளைக் கண்டவர்களுக்குப் பொன்னம்பலத்தின் இந்தப் பதில் தாழ்த்தப் பட்டோரின் புண்களில் புளி வார்த்தது போல் வலித்தது.

ஹன்சாட் (25-08-1948) பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு அளிக்கப்பட்ட வாக்கு விபரங்களைத் தருகிறது. அக்கட்டத்தில் தமிழரின் ஒரே கட்சியான தமிழ் கொங்கிரஸ் அச் சட்டத்தை எதிர்ப்பார்கள் என்று செள.தொண்டமான் அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தது. அதே வேளை பொன்னம்பலம் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்காவுடன் தன்னை மந்திரியாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பேச்சுவார்த்தையைத் தனியாய் நடத்திக் கொண்டிருந்தார். இத் துரோகத்தை அறியாது செல்வநாயகம் போன்ற அன்றைய கொங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தை எதிர்த்து, ‘இல்லை’ என்று வாக்களிக்க கட்சித் தலைவர் பொன்னம்பலம் ஏதோ நிறுத்த முடியாத இருமல் வந்தது போல் நடித்து மன்றத்திலிருந்து தன் வாக்கை குறிக்காது வெளியேறிவிட்டார். ஜே.எல்.பர்ணாந்து என்பவர் “மூன்று இலங்கைப் பிரதமர்” (1963) என்ற தன் நுhலில் எழுதுவதாவது: தெமிழ பொன்னம்பலம் சிங்களச் சிங்கமான டி.எஸ்.சேனநாயக்காவுக்கு முன் குனிந்து மடிந்து மந்திரியாக எழுந்து வந்து 10 லட்சம் மத்திய நாட்டுத் தமிழரை வாக்காளர் டாப்பிலிருந்து அழித்து விட்டார். அவர் குறிப்பிட்டது மந்திரியாகிய பின்பு பொன்னம்பலம் இந்திய பாகிஸ்தானிச் சட்டத்துக்கு (3, 1949) வாக்களித்து மலையகத் தமிழரின் வாக்குரிமையை பறித்த மோசத்தையே.

பொன்னம்பலம் தமிழரசுக் கட்சி 1965 ம் ஆண்டு காலங்களில் திருகோணமலையில் ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகத்தை அமைக்கும்படி வாதாடி வெல்லப்போகின்றதென்ற அத் தறுவாயில் மாறாய் யாழ்ப்பாணத்தில் ஒரு இந்துக் கல்லூரியையே அமைக்க வேண்டும் என்று வாதாடி அம் முயற்சியைக் குழப்பியடித்ததை தமிழினம் மறக்கலாமா?

பொன்னம்பலத்தின் சமய வெறியாட்டம் தொடர்கிறது. 2011ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக வைத்தியர் வசந்தி தேவராஜன் கொழும்பில் ஒழுங்குபடுத்திய விருந்திற்குச் சென்றிருந்தேன். அங்கு மானிய ஆணைக் குழுவின் மதிப்பான அங்கத்தவர் காளோ பொன்சேகா, வைத்தியர் யோகலக்சுமி பொன்னம்பலத்துடன் பேசிக் கொண்டிருந்தார். காளோ என்னை அழைத்து “உங்களுக்கு திருமதி. குமார் பொன்னம்பலத்தைத் தெரியுமல்லவா? இவர் இராமநாதனின் பரமேஸ்வரா நன்கொடை விதியின் படி பல்கலைக் கழக துணை வேந்தர் இந்து மதத்தைச் சேர்ந்தவராய் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என்கிறார். இது மெய்தானா?” என்று கேட்டார். தான் இரகசியமாயச் சொன்ன பொய்யை இவ்வாறு அம்பலப்படுத்துவார் என்று எதிர்பாராத யோகலட்சுமி அதிர்ந்தே போனார். அவரின் கூற்று பல்கலைக் கழக சட்டத்தின் 30 வது அம்சத்திற்கு மாறாய் இருந்ததால் நான் அது தவறானது என்று சொன்னேன். விருந்து முடிய யோகலட்சுமி எம்மை உபசரித்த வசந்தியோடு கோபித்து என்னையும் அவர் விருந்திற்கு அழைத்தது தெரிந்திருந்தால் தான் வந்தே இருக்க மாட்டேன் என்று கூறி மறைவாய் பதுங்கி ஓடிவிட்டார். யோகலட்சுமி கிறிஸ்தவரை வெறுத்தாலும் கிறிஸ்தவர் உழைத்த கிளப் ஐஸ்வரியத்தை அனுபவிப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

மேற் கூறிய யாவரும் எப்படித்தான் நாம் போற்றும் தேசியத் தமிழ் பெரியார் ஆகினாரோ? எமக்கு வேண்டியது இனி வருகின்ற எமது சந்ததியினர் தமது வாழ்க்கைக்கு முன் மாதிரியாய் வைத்துப் பின்பற்றக் கூடிய உண்மையான, உத்தமமான தேசியப் பெரியோர்களேயொழிய> சமய வேஷம் போடும் பேதவாதிகள் அல்ல.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு