நாவலர் தொடர்பில் இரத்தின ஜீவன் ஹூல் உம் கோபிநாத் உம் முன் வைக்கும் விவாதம்


Arumuganavalan_Notice

இரத்தினஜீவன் ஹூலும் நாவலரும்

தேசம்நெற் இணைய இதழில் இன்று (2018-03-11) இரத்தினஜீவன் ஹூல் எழுதிய ”தேசிய முத்திரை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் எம் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளா?” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. (http://thesamnet.co.uk/?p=93188) அக்கட்டுரையில் பின்வருமாறு உள்ளது.

“25-11-1847 ம் திகதியிட்ட உதயதாரகைப் பத்திரிகையின்படி கலாநிதி. பீட்ட பேசிவல் பாதிரியின் தலைமையில் இயங்கிய வெஸ்லியன் செமினரிக்கு – இன்றைய மத்திய கல்லூரிக்கு – கேப்ரியல் ஜெரோனி என்னும் நளவர் குலத்தைச் சார்ந்த கெட்டிக்கார மாணவன் அனுமதிக்கப்பட்ட போது அங்கு மாணவனாயிருந்த நாவலர் தலைமையில் அரைவாசி மாணவர்கள் அப்பாடசாலையை விட்டு வெளியேறினர். ஆனால் நாவலர் அவர்களுக்குத் தொடங்கிய பாடசாலையின் தரக் குறைவு காரணமாக மாணவர்கள் திரும்பி வந்தனர்.”

இதனை வாசிக்கும் ஒருவர் “ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுடன் சேர்ந்து கற்கவிரும்பாத நாவலர் அவருடன் கற்ற அரைவாசி மாணவரையும் சேர்த்துக் கொண்டு கல்லூரியிலிருந்து வெளியேறினார்” என்பதாகவே விளங்கிக் கொள்வார். நாவலர் பிறந்தது 1822 இல். 1841 அளவில் அவர் கல்வியினை முடித்து விட்டார். 1841-48 காலத்தில் அவர் மத்திய கல்லூரியில் ஆசிரியராக இருந்துள்ளார். நாவலரைபற்றித் தனது பல ஆய்வுகளில் எழுதிய இரத்தினஜீவன் இத்தகவல்களை அறியாதிருக்க வாய்ப்பில்லை.

நாவலர் தொடர்பில் தகவல்களைச் சற்று அங்குமிங்குமாக மாற்றித் தவறாகப் பொருள்பட இரத்தினஜீவன் எழுதுவது இது முதல்முறையல்ல. ”தமிழ் மறுமலர்ச்சியாளர் சி. வை. தாமோதரம்பிள்ளை” என்ற நூலில் (2013) பின்வருமாறு குறிப்பிடுகிறார். (பக்கம் 80-81)

”சட்டசபைத் தேர்தலில் சேர். பொன் இராமநாதன் பிரிட்டோவை எதிர்த்து நின்றபோது வெள்ளாளர் அல்லாத சாதியினர்க்கு சமபந்திஇ பாடசாலைகளில் சம இடம் ஆகியவற்றை எதிர்த்தவரும்இ தாழ்த்தப்பட்ட சாதியினர்க்கு கல்வி புகட்டக் கூடாதென்றும் அப்படி அவர்கள் கல்வி புகட்டப்பட்டால் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்துவிடும் என்பதால் அதை எதிர்த்தவருமான பொன். இராமநாதனுக்கே நாவலர் ஆதரவு வழங்கினார்”

நாவலர் பிரிட்டோவை எதிர்த்து இராமநாதனுக்கு ஆதரவு வழங்கியது 1879 இல். நாவலர் அதே ஆண்டில் இறந்தும் விட்டார். இராமநாதன் சம ஆசனம்இ சம போசனத்துக்கு எதிராகச் செயற்பட்டது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளின் பின்னர். (இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். 2007. பக். 98-99) இராமநாதன் எதிர்ப்புத் தெரிவித்த இடமாகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அடிக்குறிப்பில் இரத்தினஜீவன் குறிப்பிடுகிறார். இவ்வெதிர்ப்பு முன்வைக்கப்பட்டது 1929இல்.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இராமநாதன் செய்யப்போகும் காரியங்களுக்கு நாவலர் எப்படிப் பொறுப்பாக முடியும்?

நாவலர் சாதிஒடுக்குமுறைக்கு ஆதரவாகச் செயற்பட்டார் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதனை நிறுவுவதற்குப் போதிய ஆதாரங்கள் நாவலர் எழுத்துக்களிலும் செயற்பாடுகளிலும் உள்ளன. அவற்றைவிடுத்துத் தகவல்களை முன்பின்னாக மாற்றி எழுத வேண்டியதில்லை. இதனால் இரத்னஜீவன் ஹூலின் சமூக அறிவியல் சார் ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தினதும் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுவருகிறது.

ஒருபுறம் எல்லாத் தீமைக்கும் நாவலரையே காரணங் காட்டுவதாக இத்தகைய முயற்சிகள் உள்ளன என்றால் மறுபுறம் எல்லா முக்கிய செயற்பாடுகளையும் நாவலரே செய்தார் எனப் புனையும் போக்கும் முன்னெடுக்கப்படுகிறது. இரண்டுமே ஆய்வுநேர்மையற்ற செயற்பாடுகள்.

._._._._._.

கோபிநாத்க்கு இரத்தினஜீவன் ஹூல் அளித்த பதில்

இரத்தினஜீவன் ஹுலும் நாவலரும் என்ற தலைப்பில் கோபிநாத் எனக்கு எழுதியதற்கு பதிலளிக்க முன்பு, நான் என் நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் விவாதம் மூலமே அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது. எனது பதிலை சுருங்கக் கூறுகிறேன். ஏனெனில் இதே விடயங்களில் விரிவாக ஒரு புஸ்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

முதலாவதாக நாவலரைப் பற்றிய சரிதைகள் இரு வகையானவை – 1950ம் ஆண்டுக்கு முதல் எழுதப்பட்டவையும்; மிகுதி, அதன் பின்பு எழுதப்பட்டவையுமாம். முதல் வகையில் பொதுவாக கல்வித்தரம் குறைந்த நாவலர் சரிதைகளை கனகரத்தினம் பிள்ளை (1882 இல் நாவலர் இறந்த காலங்களிலும்), நாவலரின் பெறா அல்லது மருமகனான கைலாசபிள்ளை (1918), பின் அதிக காலத்தின் பின்பு சுத்தானந்த பாரதி (1948) எழுதியுள்ளதோடு, பீ. ஏ. பட்டம் கொண்ட சிவபாதசுந்தரமும் (1950); எழுதியுள்ளார்.

கனகரத்தினம்பிள்ளையின் புஸ்தகத்தில் பல பிழைகள் உள்ளனவென மருமகன் கைலாசபிள்ளையே எழுதியுள்ளார். இப்புஸ்தகங்களிற் தான் நாவலரின் பிரமிக்கும் கெட்டித்தனத்தைப் பற்றியும் அவர் யாழ்ப்பாணத்து மத்திய கல்லூரியில் ஆசிரியராய் இருந்தது பற்றியும் கூறப் பட்டுள்ளன. ஆனால் தம்மைத் தாமே கெளரவித்து, பாரதி என்பார் யோகி சிறிசுத்தானந்த பாரதியார் என்றும் சிவபாதசுந்தரம் என்பார் சைவப்பெரியார் ஷிவபாதசுந்தரம் என்றும் அச்சடிக்கும் போது அவர்களின் புத்தகத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு இடமாகிறது.

இரண்டாவது வகையான புத்தகங்கள் காலனித்துவத்தை எதிர்த்து வளர்ந்த காலத்துக்குரிய புரட்சியெழுத்து நடைமுறை கொண்ட இலங்கையர்களரலும் மேலும் பிரித்தானியாவின் காலனித்துவத்துவத்தின் தாக்கத்துக்குள்ளாகி வாழ்ந்திருப்பவர்களுக்கு அநுதாபம் காட்டும் அமெரிக்கர் போன்றோரால்; எழுதப்பட்டவையுமாம். ஆதலால் முதல் வகையான புஸ்தகங்களில் காணப்படும் அதே புஸ்தகத்திலேயே உள்ள ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களைக் கேள்வியில்லாமல் பச்சைத்தண்ணியாய் ஏற்றுக்கொண்டு பல நூல்களிலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் அவர்கள் பிரசூரித்துள்ளதைக் காணலாம். எம்மைப் புழுகுவதற்காய் எழுதும் இவ்வகைக் கட்டுக் கதைகளை எம்மில் கற்றோரும் கைதட்டிப் பரப்புகிறோம். ஆனால் மெச்சத்தக்கதாக உண்மைபேணும் கலாச்சாரத்தில் எழுந்த ஐரோப்பிய ஆசிரியர்கள் ஸ்வெலெபில், ஹெல்மன் போன்றவர்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டிய பாரம்பரியத்தோடு எழுதியுள்ளனர்.

கோபிநாத் கேட்டதற்கமைய, நாவலர் மத்திய கல்லூரியில் ஒரு ஆசிரியராய் இருந்தாரா? மருமகன் கைலாசபிள்ளையின்படி அவர் படிப்பில் ஆரம்ப காலங்களில் ஒரு கெட்டித்தனமும் காட்டவில்லையாம் (பக்கம் 5). அவர் மேலும் கூறுவதாவது, நாவலர் தனது 22ம் வயதுவரை (அதாவது 1844 வரை) மாணவனாய் இருந்தாரென்றும் அதன் பின்பும் அங்கு மாணவராய் இருந்தாரோவென்று அறியேன் என்றும் மழுப்பிக் கூறுகிறார் (பக்கம் 10). 1934 இல் கல்லூரியில் சேர்ந்த நாவலர் ஆறு வருடங்களின் பின்பு தேர்ச்சி பெற்றிருந்தால் வெளிக்கிட்டிருந்திருக்கவேண்டும். இதைவிட அதன்பின்பு அவரோ வேலையில்லாதிருந்ததையும், காணலாம். நாவலர் மேலும் சொல்கிறார்: தன் சகாக்களும் தமக்கிளைய மாணவர்களும் தங்கள் ஆங்கில அறிவை உபயோகித்து உஸ்தியோகம் பெற்று வெளிக்கிட்டிருந்தாலும் தானோ பித்திராட்சிதமின்றி (சம்பளமின்றி) சிவனுடைய சமயத்தின் மேலுள்ள அன்பால் மத்திய கல்லூரியிலிருந்து வெளிக்கிடவில்லை என்கிறார் (பக்கம் 6-8, கைலாசபிள்ளை). சிவன்மேலன்பால் செமினரியில் இருந்தவரா?

மேலும் கைலாசபிள்ளை பேசிவலின் வேண்டுகோளுக்கு இணங்க நாவலர் சிறிய வகுப்புகளில் ஆங்கிலமும் உயர் வகுப்புகளில் தமிழும் சம்பளமின்றிக் கற்பித்தாரென்கிறார். இதே கதையையே சைவப் பெரியார் சம்பளமின்றி என்ற பகுதியைவிட்டு எழுதுகிறார். கைலாசபிள்ளை மேலும் பேசிவல் பாதிரி சொன்னதாக எழுதுவதாவது, சம்பளம் கொடுத்தாலும் நாவலர் மாதிரி ஒரு ஆசிரியரை கண்டுபிடிக்க முடியாதென்று. இப்படியான கதைகளை நம்புகிறவரைப்; பற்றி என்னத்தைச் சொல்வது?

உதயதாரகையில் நாம் ஏற்கனவே கண்டது போல; மாணவனாயிருந்த நாவலர் தலைமையில் நளவர் குலத்து ஜெரோனியின் பாடசாலை அநுமதியை எதிர்த்து தம் சகமாணவர்கள் ஐம்பது பேரோடு நாவலர் செமினரியிலிருந்து நீங்கினார். 1934 இலிருந்து 1947 வரை அவரொரு நிரந்தர மாணவராயிருந்தார். உதயதாரகையின்படி, பேசிவலை எதிர்த்தவர்கள வெளியேறிய பின்; ஒரு புதிய பாடசாலையை அமைத்து அதிக சம்பளம் தரலாமென்று சொல்லி ஒரு கிறிஸ்தவ ஆசிரியரை அழைத்திருந்தனர். ஆனால் சம்பளத்திற்கான பணம் கொடுபடவில்லை. இதைத் தொடர்ந்து மாணவர்கள் தேர்தல் மூலமாக நாவலரைத் தமது உதவி ஆசிரியராகத் தெரிந்தனர். ஆனால் படிப்பு, தரம் அற்றதாக இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக பேசிவலிடம் அம்மாணாக்கர் மீண்டனர். நாவலர் வெளியேறியவேளை பேசிவலின் கீழ் ஆசிரியராக இருந்திருப்பின் நாவலரின் பள்ளிக்கூடத்தில் ஏன் உதவி ஆசிரியராக மட்டும் தெரியப்பட்டார்? இந்த உதவி உஸ்தியோகத்தில் தன்னும் ஏன் அவரது வேலையில் அதிருப்தியால் பாடசாலையே மூடப்படவேண்டிய நிலை கிட்டியது?

கோபிநாத் இறுதியாக, நாவலர் இராமநாதனைச் சட்ட சபைக்கு சிபார்சு பண்ணிய காலத்திற்குச் சிலவருடங்களின் பின்பே, இராமநாதன் தாழ்த்தப்பட்ட சாதியினரை பாடசாலைகளுக்கு அநுமதிப்பதை எதிர்த்தார் என்பதால் நாவலர் இராமநாதன் தாழ்ந்தோரின் அநுமதியை எதிர்ப்பார் என்ற காரணத்துக்காகச் சிபார்சு பண்ணியிருக்க முடியாதென்கிறார். இக்கூற்றுப் பிழையானது. ஏனெனில் ஆளை ஆள் நன்றாயறிந்த நாவலரும் இராமநாதனும் தாம் அதேமாதிரிச் சிந்திக்கிறவர்களென்பதையும் நன்றாயறிந்திருப்பார்கள். அதுவே நாவலர் இராமநாதனைச் சிபார்சு செய்ததின் காரணம். அவர்களது ஏகமனதே இராமநாதனும் நாவலரைப் போல் அக்குழந்தைகளை ஒதுக்க முற்பட்டதன் காரணம். இதை அவர்களது வெள்ளாளச் சாதிப்புத்தி எனலாம்.

மிகுதி என் புஸ்தகத்தில்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு