12,000 பேரை வேலையில் இருந்து நீக்கும் கூகுள் !

மைக்ரோசொப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்ய உள்ளது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் வர்த்தக சரிவு காரணமாக, உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

 

இந்த ஆட்குறைப்பு தொடர்பாக தனது பணியாளர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், “கடினமான செய்திகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் தோராயமாக 12,000 பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். கடுமையான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உறுதியுடன் கடினமாக உழைத்து, பணியமர்த்த விரும்பி, அதீத திறமை வாய்ந்த சிலரிடம் இருந்து விடை பெறுகிறோம்.

 

அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணியாளர்களின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பெரிதும் பாதிக்கிறது. இதற்கான, முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டோம்.

 

இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், பணியமர்த்தம் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்று நாம் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர்கொண்டு வருகிறோம். இருப்பினும், நமது வலுவான கட்டமைப்பு, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பு, செயற்கை நுண்ணறிவு துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

 

முன்னதாக மைக்ரோசாப்ட் 11000 பணியாளர்களையும், அமேசான் 18000 பணியாளர்களையும், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11000 பணியாளர்களையும் நீக்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *