ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் !

ஐக்கிய அரபு அமீரகம் தமது நாட்டிற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள அமைச்சர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னன் அல் அவார், அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு ஊழியர்களை நாட்டிற்குள் கொண்டுவருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தனிநபர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் பல்வேறு மோசடிகளின் விளைவாக விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடி வரும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அமைச்சர் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரிடம் விளக்கினார்.

விசிட் விசா மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குமாறு அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் சாதகமாக பதிலளித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே 2021 இல் அமைக்கப்பட்ட கூட்டு தொழில்நுட்பக் குழு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசா மூலம் மனித கடத்தலை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த தொழில்நுட்ப விவரங்களை தொடர்ந்து கலந்துரையாடுகிறது.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் தகுதிகளை அங்கீகரிக்கும் வகையில் இரு நாடுகளின் தகுதிக் கட்டமைப்பை வரைபடமாக்குவதன் மூலம் ஒரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்தாண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக 35,572 இலங்கை பணியாளர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர், இது இலங்கையில் இருந்து வெளியேறிய மொத்த பயணங்களில் 11.4% ஆகும். இது 2021 உடன் ஒப்பிடும்போது 2022 இல் 27 சதவீதம் அதிகமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *