தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாப்பு இன்னமும் – நாட்டின் பிரிவினையை ஆதரிக்கின்றது – தமிழீழக் கோர்கையை முன்வைத்துள்ளது? : கூட்டணியின் தலைவர் பொன் சிவசுப்பிரமணியன்


sivasubramanium_pon_TULFதமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் யாப்பு 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழப் பிரகடனத்தை தற்போதும் வைத்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பொன் சிவசுப்பிரமணியன் மார்ச் 16 2018இல் அவருடைய இல்லத்தில் வைத்துப் பதிவு செய்யப்பட்ட தமிழ் கருத்துக்களத்தின் நேர்காணலில் தெரிவித்தார். ஓகஸ்ட் 8> 1983இல் அப்போது ஜனாதபதியாக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா 6வது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி நாட்டில் பிரிவினையைக் கோருவது அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்குவது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டது. இச்சட்ட மூலத்தின் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உறுப்புரிமையை இழந்தனர்.

1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் யாப்பு தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது. 1983ற்குப் பின் மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்ட போதும் அதன் யாப்பு இதுவரை திருத்தம் செய்யப்படவில்லை என்றும் அதே அரசியல் யாப்பே இன்னமும் பயன்பாட்டில் இருப்பதாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பொன் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையை ஒரு தேர்தல் கோசமாக முன் வைத்ததும் பிற்காலத்தில் அதனை நடைமுறையில் கைவிட்டும் இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணித் தலைவர்களான அ அமிர்தலிங்கம்> யோகேஸ்வரன் போன்றோரின் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இதனை ஒரு காரணமாக முன் வைத்து வந்தனர். இதே விடுதலைப் புலிகளின் அரசியல் வாரிசுகளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் காங்கிரஸ் காட்சியாக மாறியுள்ளது. இவர்கள் இன்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை துரோகிகளாகவே கணிக்கின்றனர். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் மத்திய குழு உறுப்பினரான எஸ் அரவிந்தன் படுகொலை செய்யப்பட்ட கட்சியின் முன்னைய தலைவர்களை இன்றும் துரோகிகளாக கருதும் தமிழ் தேசிய முன்னணியுடன் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டுச்சேர முடியவில்லை என்று பெப்ரவரி 8இல் தமிழ்கருத்துக்களத்தில் வெளியிடப்பட்ட நேர்காணலில் கவலை வெளியிட்டு இருந்தார். எதிர்காலத்தில் அவர்களுடன் கூட்டுச்சேரும் விருப்பத்தையும் வெளியிட்டு இருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி நடைமுறையில் பிரிவினையைக் கைவிட்டு இருந்தாலும் அதன் யாப்பு ஆவணம் பிரிவினையை வலியுறுத்துவதாக உள்ளது. இந்த ஆவணத்தின் அடிப்படையிலேயே அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக தேர்தலில் போட்டியிட்டும் வருகின்றது. இலங்கையில் உள்ள கட்சி உறுப்பினர்களின் தகவல்களின்படி தேர்தல் ஆணையாளர் கட்சியின் தலைவராக அண்மைக்காலம் வரை இருந்து தற்போது செயலாளராக உள்ள வி ஆனந்தசங்கரியின் நண்பர் என்றும் அதன் அடிப்படையில் இந்த பிரிவினையை முன் வைக்கின்ற யாப்பின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் கட்சியாகச் செயற்படவும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

அண்மையில் கட்சியின் புதிய தலைவர் பொன் சிவசுப்பிரமணியன் கட்சியின் செய்லாளர் ஆனந்தசங்கரி ஆகியோருக்கு இடையேயான முரண்பாடு தலைவர் பொன் சிவசுப்பிரமணியனை செயலாளர் ஆனந்தசங்கரி தாக்குமளவிற்குச் சென்றிருந்தது. பொன் சிவசுப்பரமணியன் அவமதிக்கப்பட்டு தாக்கப்பட்டது தொடர்பில் அவரை தலைவராக கொண்டுவந்து நிறுத்திய லண்டன் கிளைகூட அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்க மறுத்துவருகின்றது. மாறாக அவரை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு திரைமறைவில் செயற்பட்டும் வந்தது.

தன்னை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கும் எந்த முயற்சியையும் தான் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த பொன் சிவசுப்பிரமணியன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரிக்கோ அரவிந்தனுக்கோ சொந்தமான கட்சி அல்ல. இது மக்களுடைய கட்சி. அக்கட்சியை கட்டியெழுப்பி அதன் வரலாற்று முக்கியத்துவத்தை நிறுவவே தான் விரும்புவதாகவும் தொடர்ந்தும் ஆனந்தசங்கரியோடு இணைந்து கட்சியை செயற்படுத்த தான் முயற்சிப்பதாகவும் பொன் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார. வி ஆனந்தசங்கரியை தான் எதிரியாகப் பார்க்கவில்லை அவருக்கான கெளரவத்தை தான் எப்போதும் வழங்கிவருவதாகவும் பொன் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பொன் சிவசுப்பிரமணியன் அவர்களுடனான கலந்துரையாடல் இங்கு இணைக்கப்பட்டு உள்ளது:

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு