“தொலைத்தொடர்பு கோபுரத்தால் புற்றுநோய்.” – தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் என கூறி மக்கள் போராட்டம் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை எம்.பி.சீ.எஸ். வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுரத்தை இடைநிறுத்தக் கோரி இன்று (11.02.2023) சனிக்கிழமை பிரதேச மக்களால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் செரிந்து வாழும் குறித்த பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதால் பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் சரும நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்று தெரிவித்தே இவ் எதிர்ப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படும் கட்டிடத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் கோபுரம் வேண்டாம், அதிகாரிகளே எங்கள் கருத்தை கேழுங்கள் என்ற சுலோகங்களை ஏந்தியவாறு தங்களது எதிர்பினை வெளியிட்டனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர்.பண்டார, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் க.கமலநேசன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சீ. ரமீஸா, பிரதி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோர் வருகை தந்தனர்.

தொலைத்தொடர்பு கோபுரத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக ஆராய்வதற்காக வேண்டி தொலைத்தொடர்பு கோபுரத்தை பொருத்தும் பணிகளை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தி வைக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர். பண்டார கட்டிட உரிமையாளருடன் கலந்துரையாடியதற்கு அமைய கோபுரம் அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக ஒருவாரத்திற்கு ஒத்திவைப்பதாக கட்டிட உரிமையாளர் பொருந்திக் கொண்டதற்கமைய ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *