“ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஒரு மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும்.” – சிவஞானம் சிறிதரன்

“ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஒரு மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும்.” என இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேற்று (11) இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே சிறிதரன் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த சிநேகபூர்வ சந்திப்பின்போது வடக்கின் நிலைவரம் குறித்து இந்திய பிரதிநிதிகளிடம் சிறிதரன் எம்.பி எடுத்துக் கூறியுள்ளார்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவும் தமிழகத் தலைமைகளும் பேசி வருகின்றபோதிலும் – இப்போது 13ஆவது திருத்தம் பலவீனம் அடைந்திருக்கிறது.  இத்திருத்தத்துக்கு எதிராக 28 வழக்குகள் தொடுக்கப்பட்டு மாகாண சபை முறைமை சீரழிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, ‘அப்போது இந்தியா வழங்கிய 13ஆவது திருத்தச்சட்டம் வேறு, இப்போது காணப்படும் 13ஆவது திருத்தம் வேறு. இதனை இந்திய தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைமைகளுடன் இந்திய ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், புலனாய்வு மற்றும் இராணுவ ஆலோசகர்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்த வேண்டும்.  அத்தகைய சந்திப்பொன்றை ஏற்படுத்தினால் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும், 13ஆவது திருத்தத்தின் பலவீனமான தன்மை குறித்தும் எம்மால் எடுத்துக்கூற முடியும், அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அத்துடன் தமிழகத்தில் உள்ள தலைவர்கள், இலங்கையின் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தமிழர் மாநாடொன்றை ஏற்பாடு செய்யவேண்டும். இதில் தமிழர்களின் இறுதித் தீர்மானம் என்னவென்பது குறித்து சகலரும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அத்தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு புதுடெல்லிக்கு அழுத்தம் பிரயோகித்து, அதனூடாக இந்தியாவின் தலையீட்டை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு தமிழகம் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *