15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பிணை !

15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு இன்று(13) பிணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று(13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 23 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 04 பிரதிவாதிகளுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான கந்தையா இளங்கோ, 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முதலாவது பிரதிவாதியால் வழக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற உண்மை விளம்பல் விசாரணையின் போது நீதமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 2009 ஆம் ஆண்டு விமானப்படையால் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் முதலாவது பிரதிவாதி தனது வலது காலை இழந்துள்ளதுடன், 15 வருடங்களாக வழக்கு விசாரணை நிறைவு செய்யப்படாமை குறித்தும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு எடுத்துரைத்துள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த காலி மேல் நீதிமன்ற நீதிபதி, 04 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையில் பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜராகியதுடன், சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மொஹமட் பாரி மன்றில் ஆஜராகியிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *