சிங்கள திரையுலகின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்.


1525082451-lestr-Lசர்வதேச அளவில் சிறப்புப் பெற்ற இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ​நேற்று (29) காலமானார்.

1919 ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பிறந்த இவர் தனது 99 ஆவது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடினார்.

சிங்கள திரையுலகின் தந்தையெனப் போற்றப்படும் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், சர்வதேச ரீதியில் பிரபல்யமான இலங்கையின் சிங்கள திரைப்படத் துறையில் தனக்கென ஓர் தனி இடத்ததைப் பதித்துக் கொண்ட தயாரிப்பாளரும் இயக்குனருமாவார்.

ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்கையை ஆரம்பித்த இவர் 1949 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்குள் பிரவேசித்தார்.

1956 அம் ஆண்டு இவரது முதலாவது திரைப்படமான ரேகவ வெளியானது. இதனைத் தொடர்ந்து சந்தேசய, கம்பெரலிய, தெளுவக் அதர, கொளு ஹதவத தேசநிசா, மடேல்துவ, யுகாந்தய, வேகந்த மற்றும் வளவ்வ போன்ற திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் வெளியான முக்கியமான திரைப்படங்ளாகும்.

இந்திய திரைப்படங்களின் பிரதிகளாக இருந்த இலங்கை சினிமாவுக்கு நவீன யதார்த்தத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு ஒரு செல்நெறி வகுத்தவர் இவர் என்றும், சிங்கள சினிமாவுக்கு சர்வதேச மட்டத்தில் ஒரு அடையாளத்தை தந்தவர் இவர் என்றும் சினிமா விமர்சகரும், இயக்குனருமான ஞானதாஸ் காசிநாதர் இவரை பற்றி வர்ணிக்கிறார்.

முழு நீளத்திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறுந்திரைப்படங்கள் என இவர் உருவாக்கிய 28 க்கும் அதிகமான படங்களில் பல, சர்வதேச புகழ் பெற்றவையாகும்.

லண்டனில் சினிமா கல்வியை முடித்து இலங்கை திரும்பிய இவர், 2006 ஆம் ஆண்டு வரை சினிமா துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளார்.

கிராமிய வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு 1956 இல் இவர் இயக்கிய ரேகவ என்ற திரைப்படந்தான், முதன் முதலில் அவுட்டோரில் படமாக்கப்பட்ட சிங்கள திரைப்படமாகும்.

இலங்கை சினிமாத்துறையில் இது ஒரு மறுமலர்சியாக பார்க்கப்பட்டு சர்வதேச மட்டத்தில் இது பிரபலமாக அங்கீகரிக்கப்பட்டாலும், வணிக ரீதியில் இது ஒரு தோல்விப்படமாகவே அமைந்தது.

இலங்கையின் பிரபல புனைகதை ஆசிரியர் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கதையை அடிப்படையாகக் கொண்டு இவர் தயாரித்த கம்பெரலியவும் சிறந்த படமாகப் பேசப்பட்டதாகும்.

2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

இவர் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பல விருதுகளை வென்றுள்ளதுடன் இவரது மனைவியான சுமித்ராவும் ஒரு திரைப்பட இயக்குனராவார்.

சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துமனையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில் இவர் நேற்று இரவு காலமானார்.

தற்போது அவரது உடல் அஞ்சலிக்காக கொழும்பு – 5, கலாநிதி ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் பூதவுடல் தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கலைஞர்களின் பங்களிப்போடு பிற்பகல் 3.00 மணிக்கு பூதவுடல் சுதந்திர சதுக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

பிரபல கலைஞர்களான ரவீந்திர ரந்தெனிய, திரைப்படத் தயாரிப்பாளர் சோமரத்ன திசாநாயக்க உள்ளிட்ட கலைஞர்கள் இறுதிக் கிரியைகளை முன்னின்று நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு