சீருடை விதிமுறை – வேலைத்தள கலாச்சாரம்: சிறி சண்முகா இந்து மகளீர் கல்லூரி: சேலை V அபாயா முரண்பாடு : த ஜெயபாலன்


Siri_Shanmuga_Protest_01மேற்கு நாடுகளில் வேலைத்தளங்களில் சீருடை விதிமுறை என்பது பெரும்பாலும் தெட்டத் தெளிவாக தெரிவிக்கப்ட்ட விடயம். பணியாளருக்கு வழங்கப்படும் கையேட்டில் அவர்களுயை உடைவிதிமுறை குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படி இருந்தும் சீருடை விதிமுறை தொடர்பான பல்வேறு வழக்குகள் மேற்கு நாடுகளில் இடம்பெற்று உள்ளது. தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இவ்விதிமுறைகள் தெளிவுபடுத்தப்படாமல் பொது நியாயத்தின் அடிப்படையில் இலங்கையில் பாடசாலைகளில் இந்த சீருடை விதிமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

அண்மைக்காலங்களில் ஸ்லாமோபோபியா வின் தாக்கங்கள் காரணமாக மேற்கு நாட்டு பாடசாலைகளில் மாணவிகள் ஆசிரியைகள் ஹிஜாப், அபாயா ஆடைகளை அணிவது தொடர்பான சர்ச்சைகள் எழுப்பப்பட்டு இருந்தது. பிரான்ஸ் 2010இல் முக அடையாளத்தை மறைக்கின்ற ஹிஜாப் போன்ற ஆடைகளைத் தடை செய்தது. இதே போன்ற விதிமுறைகள் பிரித்தானிய பாடசாலைகளிலும் முயற்சிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பிரித்தானியாவில் 2010இல் கொண்டுவரப்பட்ட சமத்துவச் சட்டங்களுக்கு அமைவாக நிறுவனங்கள் செயற்படக் கட்டுப்பட்டு உள்ளன.

சிறி சண்முகா இந்து மகளீர் கல்லூரி ஆசிரியயைகளின் சீருடை விவகாரமும் உலகம் தளுவிய ஸ்லாமோபோபியாவின் ஒரு விளைலாகவும் பார்க்கலாம்.

சிறி சண்முகா இந்து மகளீர் கல்லூரி ஆசிரியர்களின் சீருடை சர்ச்சையின் பின்னணி:

றஷிதா (2012இல்), பெளமிதா (2013இல்), சஜானா (2014இல்), ஷிபானா (2016இல்) ஆகிய நால்வரும் சிறி சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்து கொண்ட போது தாங்கள் விரும்பிய அபாயா ஆடையை அணிந்து வருவதற்கு அனுமதி கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இடமாற்றம் பெற்று இவ்வாண்டு ஜனவரியில் திருமதி கபீர் கடமையில் இணைந்த போது, அவர் அபாயா உடையை அணிந்தே தனது ஆசிரியர் பணியயை மேற்கொண்டார். ஏப்ரல் 23 இல் ரெஜினா என்பவரும் நியமனம் பெற்று வர இருந்தார். இந்நிலையில் திருமதி கபீர் அபாயா ஆடையை அணிந்து தனது கடமையில் ஈடுபட்டதைப் போல், ஏனைய ஆசிரியைகளும் தங்கள் மதக்கலாச்சார ஆடையை அணிந்துவர முடிவெடுத்தனர்.

இதன் பின்னணியில்,

ஏப்ரல் 22: பெளமிதாவும் அவர் கணவரும், சஜானாவும் அவருடைய கணவரும், சஜானாவும், ஷிபானாவும் அதிபரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து தாங்கள் மறுநாள் திங்கட்கிழமை முதல் அபாயா ஆடை அணிந்தே வருவோம் என்பதனை அறிவித்து உள்ளனர். அதற்கு கல்லூரியின் அதிபர் சுலோச்சனா ஜெயபாலன் மறுப்புத் தெரிவிததுடன் மீறி  அணிந்து வந்தால் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளார். இச்செய்தி ஈழம் சுகன் என்பவரின் முகநூல் தளத்தில் அன்றிரவே பதிவேற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. (ஆனால் அதனை உறுதிப்படுத்த அம்முகநூல் தளத்தை ஏப்ரல் 30இல் பார்க்கும் போது இப்பதிவுகள் எதுவும் இருக்கவில்லை. ஏப்ரல் 24 முதலே கல்லூரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. முன்னைய பதிவுகள் நீக்கப்பட்டு இருக்கலாம்.)

ஏப்ரல் 23: இன்று மூன்று ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றனர். அவர்கள் பாடசாலை நிர்வாகக் குழுவால் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவாரத்தையில் பாடசாலை அதிபர் சுலோச்சனா ஜெயபாலன், பிரதி அதிபர் பாலசிங்கம், உதவி அதிபர் மாலினி சின்னப்பிள்ளை, வசந்தகுமார், விடுதியின் பொறுப்பாளர் ஆகியோர் அபாயா அணிந்து வந்த ஆசிரியைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் உடைக் கட்டுப்பாட்டை முஸ்லீம் ஆசிரியைகள் ஏற்கவில்லை. பாடசாலை நிர்வாகம் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்தனர். இச்செய்தியும் ஈழம் சுகன் இன் முகநூலில் வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. பின்னர் அது காணப்படவில்லை. வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 24: இன்று நாளைய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஈழம் சுகன் இன் முகநூலில் பல அழைப்புகளும் முஸ்லீம் விரோத பதிவுகளும் பதிவிடப்பட்டு இருந்தது. அவர்களுடைய ஊடக அறிக்கையில் இவ்விடயத்தை கவர்ச்சியூட்டும் விதத்தில் ஆசிரியைகளின் கணவன்மார் கல்லூரிக்குள் நுழைந்து அதிபரை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இதன் உண்மைத் தன்மை தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. சமூக வலைத்தளங்களில் இரு சமூகத்தினரும் எதிரும் புதிருமாக தரம்தாழ்ந்த பதிவுகளை இட்டுக்கொண்டிருந்தனர்.

ஏப்ரல் 25: சிறி  சண்முகா இந்து மகளீர் கல்லூரி முன்னால் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முஸ்லீம் எதிர்ப்பு கோஸங்களும் அவர்களது பேச்சு வழக்கை கேலி பண்ணும் பதாதைகளும் பிடிக்கப்பட்டு இருந்தது.

ஏப்ரல் 26: இரு சமூகங்களிடையேயும் பதட்டம் தொடர்ந்தது. முகநூலில் முரண்பாடுகள் மோசமான நிலையிவ் தொடர்ந்தது.

ஏப்ரல் 27: முஸ்லீம் சமூகத்தினர் அபாயா ஆடை அணிய அனுமதி கோரி பள்ளி வாசல் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைத் தளத்தில் சீருடையும் அது ஏற்படுத்தும் தாக்கமும்:

பிரபலமான சட்ட சஞ்சிகையில் ரிறிஸ்ரின் கிரீன், ‘வேலைக்கலாச்சாரமும் பாரபட்சமும்’ என்ற கட்டுரையில், ”வேலைக் கலாச்சாரம் பெரும்பாலும் இன மற்றும் பால் சார்ந்தே செல்லும்” என்கிறார். ”பொறுப்பில் உள்ள ஓரு சமூகக் குழுவைச் சேர்ந்தவர் அச்சமூகத்தில் தன்னை மேல்நிலைப்படுத்த தான்சார்ந்த குழு சார்பாகவே செயற்படுவார்” என அவர் வாதிக்கின்றார்.

சிறி  சண்முகா இந்து மகளீர் கல்லூரி விவகாரத்தில் தமிழரான கல்லூரி அதிபர் சுலோச்சனா ஜெயபாலன் சீருடை மூலமாக முஸ்லீம் ஆசிரியைகளுக்கு பொருத்தமற்ற ஒரு சுழலை உருவாக்கி உருவாக்கினாரா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

மனிதர்கள் தங்களது அடையாளங்களை சமூக வெளிப்பாடுகளான உடை மற்றும் தோற்றத்தினூடாகவே வெளிப்படுத்துகின்றனர். உடையும் தோற்றமும் அவர்களுடைய கருதுகோள்களை பண்புகளை நம்பிக்கைகளை சமூகத்துக்கு வெளிப்படுத்தும் ஊடகமாக அமைகிறது. வேலைத்தளத்தில் உடைக்கும் தோற்றத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும் போது ஒரு தனி மனிதனுடைய சுதந்திரம் மறுக்கப்படுகிறது. கட்டப்படுத்தப்படுகிறது. அவ்வாறு செய்வது அவர்களை உளரீதியில் காயப்படுத்துகிறது; கோபத்தை ஏற்படுத்துகிறது; வெட்கமடையச் செய்கிறது.

வேலைத்தளங்கள் சீருடை போன்ற ஒரே மாதிரியான – ஒற்றைப்பரிமாணச் சூழலை ஊக்கப்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலான ஆதாரங்கள் ஒற்றைப் பரிமாணச் சூழலுக்கும் இனப் பாரபட்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வொற்றைப் பரிமாணச் சூழல் என்பது அதிகாரத்தில் உள்ள பெரும்பான்மைச் சமூகத்திற்கு இசைவான சூழலாக அதாவது, ஆசிரியைகள் அனைவரும் தமிழருக்கு இசைவான வகையில் சேலையை அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனரா என்பது மற்றுமொரு அவதானத்திற்குரிய விடயம்.

இந்நிலையைக் கடக்கவே சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 29வது சரத்து வருமாறு வரையப்பட்டு உள்ளது.
1. ஒரு மனிதனிற்கு சமூகம் தொடர்பாக கடமைகள் உண்டு. அவற்றால் மட்டுமே சுயாதீனமான, முழுமையான வளர்ச்சியுடைய ஆளுமையை உருவாக்குவது சாத்தியமாகும்.
2. தனது உரிமைகளையும், சுதந்திரத்தையும் பயன்படுத்தும்போது, ஒவ்வொருவரும் ஏனையோரின் உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும், மதிப்பளிக்கும் வகையில் ஓர் ஜனநாயக சமூகத்தின் பொதுவான நலன் கருதி, அதன் தேவைகளான அறம், பொது ஒழுங்கு என்பவற்றைப் பேணும் வகையில் சட்ட அடிப்படையில் அவை மட்டுப்படுத்தப்படுதல் வேண்டும்.
3. இவ் உரிமைகளும், சுதந்திரமும் ஐ நா இன் கோட்பாடுகளுக்கு முரண்பாடாக எச் சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த முடியாது.

சிறி சண்முக இந்து மகளீர் கல்லூரியில் எழுந்துள்ள இப்பிரச்சினை இந்த மனித உரிமைப் பிரகடன எல்லைக்குள் உட்பட்டதே. இவ்வாறான பிரச்சினைகள் இலங்கையிலும் எழுந்து உடன்பாடு காணப்பட்டு தீர்க்கப்பட்டும் உள்ளது.

ஆடைக் கட்டுப்பாட்டுக்குத் தடை:

2016 செப்ரம்பரில் தலைநகர் கொழும்பில் உள்ள சென் ஜோசப்ஸ் தனியார் கல்லூரி (ஆண்கள் கல்லூரி) தங்கள் பையன்களை அழைத்துச் செல்ல வரும் தாய்மார்; சேலை மற்றும் தளர்வான ஆடைகளை மட்டுமே அணிந்து வர நிர்ப்பந்தித்தது. பல தனியார் மற்றும் அரச கல்லூரிகள் இந்நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. தங்கள் பிள்ளைகளைக் கூட்ட வரும் பெண்கள் என்ன ஆடைகளை உடுக்க வேண்டும் எவற்றை உடுக்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் பலகையையும் கல்லூரி வைத்திருந்தது.

இது தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்த கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம், ”பாடசாலைகள் பெற்றார் என்ன ஆடையை அணிய வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது” என பிபிசிக்கு தெரிவித்து இருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”எந்தத் தாய்க்கும் பாடசாலைக்கு எப்படி உடுத்துச் செல்ல வேண்டும் என்பது தெரியும். பாடசாலைச் சூழலுக்கு ஏற்ற ஆடைகள் போதுமானது. உலகம் மாறிவிட்டது. நாங்களும் அதற்கேற்ப மாற வேண்டும். சட்டங்கள் பொதுமக்களுக்கு உதவுவதற்காக கொண்டுவரப்பட வேண்டுமேயொழிய அவர்களை கஸ்டப்படுத்துவதற்காக அல்ல” என்றும் தெரிவித்தார்.

இச்சம்பவம் ஆசிரியர்களுடைய சீருடை பற்றியதானதாக இல்லாத போதும் ஆடை பற்றிய உள்ளடக்கம் கவனிக்கத் தக்கது.

சேலை – அபாயா – கலாச்சாரம்:

தங்களை கலாச்சார காவலாளிகளாக காட்டிக்கொள்பவர்கள் கலாச்சாரம் பற்றிய புரிதல் அற்றவர்களாகவே உள்ளனர். முகநூலில் மூன்றாம் தர கருத்துக்களைப் பதிவு செய்பவர்கள் அப்படி இருக்கலாம், ஆனால் அதே நிலையில் பாடசாலை நிர்வாகம் இருக்க முடியாது. மனிதகுல வரலாறு சேலை அணிந்த அல்லது அபாயா அணிந்த கலாச்சாரத்துடன் தொடங்கவில்லை. அவ்வரலாறு அம்மணமானது. அதனை இந்து சமயக் கடவுளரின் சிலைகளிலே இன்றும் காணலாம். அறுமுகநாவலரால் தொடக்கி வைக்கப்பட்ட இந்துக் கல்லூரிகள் உயர்சாதி இந்துகளுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டவை. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துக்கள் சேலை கட்டவோ; தங்கள் மார்பகங்களை மறைக்கவோ; கற்பதற்கோ அனுமதிக்கப்பட வில்லை. இந்நிலை இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னும் காணப்பட்டது.

மேலும் சேலை – அபாயா வின் வரலாறுகள் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நூறு ஆண்டுகளே. அவை இன்னும் எத்தனை ஆண்டுகள் நிலைக்கும் என்பது எமது அடுத்த தலைமுறையினரின் உடை சம்பந்தமான உணர்வுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடியும். இந்த மாற்றங்களை பாடசாலை நிர்வாகங்களினாலோ அரசியல் தலைவர்களினாலோ உலாமாக்கள் சபையினாலோ தடுத்து நிறுத்திவிட முடியாது.

சேலையும் – அபாயாவும் அடிப்படையில் ஒன்றே. வடிவத்தில் மட்டுமே மாறுபடுகின்றது. இதில் பாடசாலைக்கு எதனை அணிந்தாலும் அது பொருத்தமானது என்று கருதுபவர்களுக்கு பொருத்தமானதாகவும் பொருத்தமற்றது என்று கருதுபவர்களுக்கு பொருத்தமற்றதாகவும் அமையும். அது அவரவர் சார்ந்த சமூக சிந்தனையின் வெளிப்பாடாக அமையும்.

இதில் சேலையா அபாயாவா முற்போக்கானது என்றால் இரண்டுமே வேலையிடத்திற்கு பொருத்தமற்றது; இலங்கை போன்ற வெப்பநிலையுள்ள நாட்டிற்கு பொருத்தமற்றது என்பது என்னுடைய அறிவுசார்ந்த புரிதல்.

பெண்கள் மீதான கலாச்சாரச் சுமை:

எல்லா சமூகங்களுமே கலாச்சாரம் என்று வரும்போது அதனை பெண்கள் மீதே சுமத்துகின்றனர். அதனால் பெண்கள் என்ன ஆடை உடுத்த வேண்டும் என்ற முடிவை எடுக்கின்ற உரிமையை பெண்களிடமிருந்து பறித்துவிடுகின்றனர். தங்களை கலாச்சார காவலாளிகளாகக் காட்டும் எந்த ஆணும் தான் சார்ந்த கலாச்சார ஆடையுடன் பணியாற்றுவதில்லை. ஆனால் பெண்களை மட்டும் அப்படி பணியாற்ற அழுத்தங்களை வழங்குகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் இரு சமூகத்தைச் சேர்ந்த ஆண்களே முற்றிலும் கேவலமான கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர். எவ்விதத்திலும் இப்பிரச்சினையுடன் சம்பந்தப்படாத ஆண்கள் இப்பிரச்சினையை தங்கள் கையில் எடுத்து நிலைமையை கீழ்த்தரமான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பெண்களை பாலியல் பொருட்களாகவே இரு சமூகத்து ஆண்களும் சித்தரித்து உள்ளனர். இவர்களுடைய பாலியல் வக்கிரங்களுக்கு அவர்களுடைய எழுத்துக்களே சாட்சியாக அமைகின்றது. இந்த பாலியல் வக்கிரர்களை பெற்றெடுத்ததற்காக, இவர்களை சகோதரர்களாக அடைந்ததற்காக, இவர்களைக் கணவராக அடைந்ததற்காக இரு சமூகத்தையும் சேர்ந்த இவ்வக்கிரர்களின் உறவுப் பெண்கள் வெட்கப்படுகின்றனர்.

முஸ்லீம் ஆண்களே அபாயாவை தங்கள் பெண்கள் மீது திணிக்கின்றனர் என்று தமிழ் சமூகத்தில் ஒரு பிரிவினர் சேலையை நியாயப்படுத்த முற்படுகின்றனர். அதற்கு எதிராக போராட வேண்டியவர்கள் முஸ்லீம் பெண்கள். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதால் யாரும் நம்பிவிடமாட்டார்கள். மாற்றத்தை உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகத்திலேயே யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று கூடி சேலைகட்ட வேண்டும் என்று தீர்மானம் இயற்றினர். ஆணாதிக்கம் என்பது அக்கரையில் மட்டுமல்ல இக்கரையிலும் தாராளமாகவே உள்ளது.

வெளித் தலையீடுகள்:

சவுதிய அராபியா, அபாயாவை இறுக்குமதி செய்து விட்டது; பேரீச்சை மரத்தை இறக்குமதி செய்துவிட்டது என்பவர்கள் இந்தியா சிவசேனையை இறக்குமதி செய்து விட்டதை இலகுவாக மறந்துவிடுகிறார்கள்.  சிறி சண்முகா இந்து மகளீர் கல்லூரியின் உள்வீட்டுப் பிரச்சினையை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்து; போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த முகநூல் காரர் ‘ஈழம் சுகன்’ எல்லாளன் படையணி என தன்னை உரிமைகோருகிறார். இம்முகநூலில் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனை தமிழ் மக்களின் ஒரே தலைவர் என்று போற்றி, புகழாரம் சூட்டி, அவருக்கு ஏப்ரல் மாதம் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து உள்ளார். ஈழம் சுகன் இன் முகநூலில் மட்டக்களப்பு சிவசேனையின் பதிவுகளும் உள்ளது. கிழக்கில் பா உ யோகேஸ்வரன் சிவசேனையின் முக்கியஸ்தராக உள்ளார்.

சிவசேனை அமைப்பை இலங்கைக்கு கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும் என பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூல் தேசம்நெற் – தமிழ் கருத்துக்களம் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் நவம்பர் 25 2016இல் தெரிவித்து இருந்தார். மத அடிப்படைவாதக்குழுவும் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட மதக் குழுவுமான சிவசேனையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் மறவன் புலவு சச்சிதானந்தன் ஆகியோர் இணைந்துகொண்டமை. எஸ்ஜேவி செல்வநாயகம் எந்த கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தாரோ அதற்கு முற்றிலும் விரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஏற்கனவே இரு சமூகங்களிடையேயும் காணப்படும் முரண்பாடுகளை சீனித்தம்பி யோகேஸ்வரன் போன்றவர்கள் குறுகிய அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர்.

வடக்கு கிழக்கின் கல்வி நிலை:

வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் மிகவும் பின் தங்கி உள்ளன. இங்கு வாழுகின்ற தமிழ் – முஸ்லீம் சமூகங்கள் தங்கள் கல்வி நிலையை மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்கு இரு சமூகங்களும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்;டியது தவிர்க்க முடியாதது. அதனை விடுத்து கல்விச் சமூகமே ஆடைப் பிரச்சினையில் சிக்கிக் கிடப்பது ஆரோக்கியமானது அல்ல.

தமிழ் பிரதேசங்களில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பக் கல்வியை தமிழ் மொழி மூலம் கற்பிக்கத் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. அதனால் ஆசிரியர்களை தமிழகத்தில் இருந்து தருவிக்க வேண்டி வரலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது. கபொத உயர் தரத்தில் கணித விஞ்ஞான பாடங்களைக் கற்பவர்கள் வடக்கில் 20 வீதத்தினரானவே இருப்பதால் எமது ஆசிரியத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளோம். கல்வி நிலை தொடர்ந்து வீழ்ச்சி அடைவதால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வறுமைக் கோட்டில் அல்லது அதற்கு அண்மையாகவே நிற்கின்றன. இதுபற்றி எமது கல்விச்சமூகம் கண்டுகொள்ளவில்லை. சேலை – அபாயா பிரச்சினையில் தான் இவர்களின் கவனம் உள்ளமை துரதிஸ்டமானது.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் 2989 தமிழ் மூலமான பாடசாலைகள் உள்ளது. இதில் வடக்கில 880 பாடசாலைகளும் கிழக்கில் 791 பாடசாலைகளும் உள்ளன. இதைவிட தமிழ் – சிங்கள பாடசாலைகள் 66 தமிழ் ஆங்கில பாடசாலைகள் 168 மும்மொழிப் பாடசாலைகள் 47 உள்ளது. (இலங்கையில் மொத்த பாடசாலைகள் 10,162). இப்பாடசாலைகளில் 1,028,000 மாணவர்கள் தமிழ்மொழியில் கல்வி கற்கின்றனர். இவர்களில் 20 வீதமானவர்களே வடக்கில் கல்வி கற்கின்றனர். ஏனையவர்கள் வடக்குக்கு வெளியே வாழ்கின்றனர். கற்கின்றனர்.

தமிழ் – முஸ்லீம் சமூகங்களிடையே அண்மைய தசாப்தங்களாக நிலவிவரும் நம்பிக்கையீனம், முரண்பாடுகளை இச்சீருடை விவகாரம் எண்ணையூற்றி எரியவிட்டு உள்ளது. இரு சமூகங்களுக்கும் இடையே நல்லுறவைக் கொண்டுவர உதவ வேண்டிய கல்விச் சமூகம் இதன் பாரதுரமான விளைவுகளை கவனத்திற்கொள்ளாமல் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளனர். பாடசாலை நிர்வாகம் இப்பிரச்சினையை பொதுத் தளத்திற்கு கொண்டுவருவதற்கு முன் அதனை சுமூகமாக தீர்ப்பதற்கான எல்லா வழிகளையும் பொறுப்புடன் அணுகி இருக்க வேண்டும்.

பாடசாலை ஆசிரியைகளின் சீருடைப் பிரச்சினை பாடசாலைக்குள் தீர்க்கப்பட முடியாது இருந்தால் வலயம் மற்றும் அதற்கு மேல் உள்ள கட்டமைப்புகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஏப்ரல் 22இல் பேச்சுவார்த்தை அன்றிரவே முகநூலில் வருவதென்பது பாடசாலையின் தலைமைத்துவ பண்பை கேள்விக்கு உட்படுத்தி உள்ளதுடன் அதன் பின்னணி தொடர்பாகவும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

சிறி  சண்முகா இந்து மகளீர் கல்லூரி கிழக்கில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்லூரி. ஆனால் தமிழ் ஆசிரியர்கள் ஆசிரியைகள் நாடு முழுவதும் வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் தங்கள் பணியை கெளரவத்துடன் செய்து வருகின்றனர். அதே கெளரவத்தையும் மதிப்பையும் தமிழ் சமூகம் தான் பெரும்பான்மையாக உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு வழங்குவதே நியாயமானது.

சிறி  சண்முக இந்து மகளீர் கல்லூரியில் எழுந்த ஆசிரியர்களின் சீருடை தொடர்பான இச்சர்சை, இனி அக்கல்லூரி மட்டும் சார்ந்தது அல்ல. ஒட்டுமொத்தமாக இலங்கையில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுடைய சீருடை சார்ந்த பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டி இருக்கும். அதனால் சிறி சண்முக இந்து மகளீர் கல்லூரியின் ஆசிரியைகளின் சீருடை பற்றிய முடிவுகள் நாட்டின் ஏனைய பாடசாலைகளையும் அது நோக்கி நகர்த்தும்.

ஆதலால் இப்பிரச்சினையில் தமிழ் கல்விச் சமூகம் பொறுப்புடன் நடந்து கொண்டு, ஏனைய சமூகத்தவரின் கலாச்சார அடையாளங்கள் கல்வி நோக்கத்திற்கு தடையாக இருக்காதவரை தமது உரிமைகளை பாதிக்காத வரை ஐக்கிய நாடுகள் சபையின் 29வது சரத்துக்கமைய தனிமனிதர்களின் உரிமைகளை மதித்து செயற்பட வேண்டும்.

உங்கள் கருத்து
 1. Mohamed SR Nisthar on May 2, 2018 10:14 am

  இரண்டு சமூகங்களுக்கும் தலை போகும் எத்தனையோ பிரச்சிசினைகள் இருக்க அதை பற்றி ஒன்றும் கவலைப்படாமல் இந்த சீலை பிரச்சினையில் சீரழிந்து போக தயராகின்றார்கள். முட்டால்தனத்துக்கும் ஒரு எல்லை வேண்டும். நானா மாரே!, அண்ணா மாரே!! கொஞ்சம் யோசிக்கலாமே.


 2. T Jeyabalan on May 4, 2018 2:19 pm

  ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள் என்பதை அறிவதற்கு கொஞ்சம் அறிவு வேணும். தான் முட்டாள் என்பதையே அறியும் குறைந்தபட்ச அறிவு இல்லாத நானாமாரிடமும் அண்ணாமாரிடமும் நீங்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் ரூமச் போல்படுகிறது.

  அபாயா – சேலை விவகாரத்தில் பாத்திமாவும் பார்வதியும் வாயே திறக்கல்ல. நானாமாரும் அண்ணாமாரும் போடுர கூத்து தாங்க முடியல்ல.


 3. a voter on May 6, 2018 6:27 pm

  //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்திமாவும் பார்வதியும் வாயே திறக்கல்ல.//
  அவர்களிற்கு அதற்கான சுதந்திரம் இல்லை.

  முக்கியமாக இந்த விடயத்தில் சம்மந்தரின் முடிவு சரியானது அல்ல.


 4. a voter on May 6, 2018 6:30 pm

  ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதிபரும் மாணவியரும் தமக்குக் கற்பிக்கும் ஆசிரியரின் முகத்தைக் காண வேண்டும். எனவே முழு முகத்தையும் பாடசாலையுள் மூடக்கூடாது. (இதற்கும் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமில்லை.)


 5. mohamed on May 9, 2018 2:37 pm

  முஸ்லீம் மக்களின் மீது பொய்யான பிரச்சாரத்தை வைத்து சிங்கள இனவாத கும்பல்களினால் நடாத்தப்படட வன்முறையை நாம் எல்லோரும் அறிந்தவிடயம். சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீதான வன்முறையின் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் சக்திகள் இருந்ததை நாம் மறக்க கூடாது. ஆனால் மறந்துவிட்டொம்.இந்த அரசியல் சக்திகள் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒருமைப்படுவதை ஒருபோதும் விரும்புவது இல்லை. இந்த விடயத்தில் கூட அந்த சக்திகளின் பின்னணி இருந்து இருக்கலாம் என்பது உண்மையாக கூட இருக்கலாம். எனவே தமிழ் முஸ்லீம் தலைமைகள், புத்திஜீவிகள், சமய தலைவர்கள் இப்படியான சிறு பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து விட வேண்டும்.

  தேசம்நெட் ஆசிரியர்கள் போல் நாம் யாரையும் மூடடால்கள் என்று கூறி இழிவுபடுத்த முடியாது. அதற்கான தகுதியும் எமக்கு உண்டா என்று சிந்திப்பது அவசியம்.


 6. Raja on May 17, 2018 12:53 am

  சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது நடாத்திய வன்முறையின் பின்னணி அவர்கள் தமிழர்கள் என்பதே என்று என்று நாடுகடந்த தமிழ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


 7. BC on May 31, 2018 1:09 pm

  //Raja – சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது நடாத்திய வன்முறையின் பின்னணி அவர்கள் தமிழர்கள் என்பதே என்று என்று நாடுகடந்த தமிழ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.//

  ஓம் அது சரி தான் அவர்கள் காரணம் இல்லாமலா சொல்வார்கள் முஸ்லிம்களை யாழ்பாணத்தை விட்டு புலிகள் வெளி ஏற்றியதை வைத்து தான் அப்படி சொல்கிறார்கள்
  நல்ல நானாமார்களை தவிர பல நானாமார் ஒன்றும் திறம் இல்லை. பல காலமாக சீலை கட்டி வந்த பாத்திமாவுக்கு மதவெறி காரணமாக அரபு நாட்டு அபாயாவை பலவந்தமாக இலங்கையில் திணிக்கிறார்கள்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு