இராணுவத்தளபதி அரசியற் கட்சிகளை விமர்சிப்பது, இராணுவ வன்முறையாகும்


inkaranesan1-720x450இராணுவத்தளபதி ஒருவர் தமிழ் அரசியற் கட்சிகளை வெளிப்படையாக விமர்சனம் செய்வது, ஜனநாயக அரசியலின் குரல் வளையை நெரிக்கும் ஒரு இராணுவ வன்முறையாகும்” என வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தாக ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் தொடர்பாக பொ.ஐங்கரநேசன் இன்று (04) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

“வெசாக் பண்டிகைக்கு மடை திறந்த வெள்ளம் போல் மக்கள் கூட்டங்கூட்டமாகக் கலந்து கொள்கிறார்கள். இதற்கு வந்த யாழ்ப்பாண மக்களின் ஐந்திலொரு பங்கினர் கூட யாழ்ப்பாணத்தில் உள்ள சில அரசியற்கட்சிகளின் கூட்டங்களுக்கு வருவதில்லை. மக்களின் மனங்களை வெல்ல முடியாத இக்கட்சிகளே இராணுவம் யாழ்ப்பாணத்தைப் பௌத்த மயமாக்கி வருகின்றதாகக் குற்றஞ்சாட்டுகின்றன என்று யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அரச ஊழியர்கள் வெளிப்படையாக அரசியல் பேசுவது அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தாபனவிதிக்கோவைக்கு எதிரானது. அத்தோடு, அரச ஊழியரான இராணுவத்தளபதி அரசியல் பேசுவது இராணுவ ஒழுக்க விதிகளுக்கும் முரணானது. அந்த வகையில் இராணுவத்தளபதியின் தமிழ்க்கட்சிகளின் மீதான விமர்சனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இராணுவத் தளபதியின் இவ்வாறான அரசியல் கருத்துகளை பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் வெளிப்பாடாக மாத்திரம் கருத முடியாது. இராணுவ அதிகாரியாக இவர் தெரிவித்திருக்கும் விடயங்கள் போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் முகிழ்த்து வரும் ஜனநாயக அரசியலின் குரல் வளையை முளையிலேயே நெரிக்கும் ஒரு இராணுவ வன்முறையும் ஆகும்.

மக்களின் மனங்களை வெல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்து ஆலயங்களைப் புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். ‘ஆமிக்காரன் வாறான், ஓடுங்கள்’ என்று சொன்ன வாயால் ‘ஆமி மாமா வாறார்’ என்று சொல்ல வைக்க வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆனால், இராணுவம் பொதுமக்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் அவர்களால் யுத்தத்தால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களை வெல்லமுடியாது. வெசாக்கொண்டாட்டத்தை வேடிக்கை பார்க்கவரும் மக்கள் கூட்டத்தை வைத்து இவ்வாறான ஒரு முடிவுக்கு வருவது வேடிக்கையானது.

மக்கள் மனங்களை வெல்லவேண்டியது அரசாங்கத்தரப்பே அல்லாமல் இராணுவத்தினர் அல்லர். புதிய அரசியல் அமைப்புக்கான வரைபிலும் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்காக நிதி ஒதுக்குவதாக எவ்வித தயக்கமும் இன்றித் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் வடக்கு – கிழக்கில் பெரும் எடுப்பில் நடாத்தப்படும் வெசாக் கொண்டாட்டங்களைப் பௌத்த மேலாதிக்கமாகத் தமிழ் மக்கள் கருதுவதில் தவறேதுமில்லை. தமிழ்மக்களின் பிரதிநிதிகளான தமிழ்க்கட்சியினரும் இக்கருத்தை வெளிப்படையாகப் பேசுவதிலும் குற்றங்காண்பதற்கில்லை. இவற்றை அரச அதிகாரியான இராணுவத்தளபதி புரிந்துகொண்டு நா காப்பது அவர் விரும்புகின்ற இன நல்லிணக்கத்துக்கு அவசியமாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து
  1. BC on May 5, 2018 11:57 am

    வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் – இராணுவ அதிகாரியாக இவர் தெரிவித்திருக்கும் விடயங்கள் போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் முகிழ்த்து வரும் ஜனநாயக அரசியலின் குரல் வளையை முளையிலேயே நெரிக்கும் ஒரு இராணுவ வன்முறையும் ஆகும்.
    வெசாக் பண்டிகைக்கு மடை திறந்த வெள்ளம் போல் மக்கள் கூட்டங்கூட்டமாகக் கலந்து கொள்கிறார்கள். இதற்கு வந்த யாழ்ப்பாண மக்களின் ஐந்திலொரு பங்கினர் கூட யாழ்ப்பாணத்தில் உள்ள சில அரசியற்கட்சிகளின் கூட்டங்களுக்கு வருவதில்லை என்ற உண்மையை சொன்னது எப்படி போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் முகிழ்த்து வரும் ஜனநாயக அரசியலின் குரல் வளையை முளையிலேயே நெரிக்கும் ஒரு இராணுவ வன்முறை ஆக இருக்க முடியும்?
    அந்தோனியார் கோவிலிலும் மக்கள் கூட்டங்கூட்டமாகக் கலந்து கொள்கிறார்கள் என்றதை மட்டும் தெரிவிக்கலாமா?
    ஐங்கரநேசன் தான் ஊழல் செய்து அடித்து வைத்த பொது பணத்தை மறைத்து அரசியல் செய்ய வேண்டுமானால் இப்படி ஏதாவது வீர வேசமாக பேசி ஏமாற்ற தான் வேண்டும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு