இலஞ்சத்தை இல்லாதொழிக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்


Unknownஅரச சேவையிலும் ஏனைய சகல துறைகளிலும் காணப்படும் இலஞ்சம், ஊழல், மோசடி என்பவற்றை தடுப்பதற்கும் அவற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்குமான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் மோசடி என்பவற்றிற்கு எதிராக எதுவித பேதங்கள் இன்றியும் எந்தவொரு நபருக்கும் சலுகை அளிக்கப்படாமலும் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

இன்று (05) முற்பகல் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல சேவைகள் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளாகும் வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் செயற்படக் கூடாது என தெரிவித்ததுடன், சிறந்தவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரச சேவையிலிருந்து இலஞ்சம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தாம் அமைச்சராக செயற்பட்ட காலத்திலும் ஜனாதிபதியாக பதவி வகித்துவரும் கடந்த மூன்று வருட காலத்திலும் இலஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் மற்றும் அரச சொத்துக்களின் முறையற்ற பாவனை என்பவற்றைத் தடுப்பதற்காக எதுவித வேறுபாடுகளும் இன்றி சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதனை ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.

மத்திய வங்கி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உரியவாறு முன்னோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போன்று ஶ்ரீ லங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் எதிர்காலத்தில் மிக முக்கியமான தகவல்களை நாட்டிற்கு வெளிப்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எமது சுகாதார சேவையிலிருந்து இலஞ்சம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக இதன்போது மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, எமது நாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

குடும்ப நல சேவை உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடையும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

நாட்டின் சுகாதார துறையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் விசேட சேவையை பாராட்டி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் குடும்ப நல சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி இதன்போது நினைவுப் பரிசில்கள் வழங்கி வைத்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு