ஐ.தே.கவை வீழ்த்துவதே எமது இலக்காகும் ; எஸ்.பி.திஸாநாயக்க


sbdisaஅரசாங்கத்தின் கொள்கை மீதான அதிருப்தியின் காரணமாகவே நாம் எதிரணியின்  ஆசனத்தில் அமர்ந்தோமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் மீதோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மீதோ எமக்கு தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதுமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தும் பலமான சக்தியாக உருவாகுவதே எமது இலக்காகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாக செயற்பட்ட 16 உறுப்பினர்களான நாங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளோம்.

சுயாதீனமாக தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி எமக்கு அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய நாம் எதிரணியில் அமர தீர்மானம் எடுத்த போது கூட்டு  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் எமக்கு ஆதரவு தெரிவித்ததுடன்  கூட்டு எதிர்க்கட்சி பாரளுமன்ற குழுக்களின் தலைவரான தினேஷ் குணவர்தன மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் எம்மை வரவேற்றனர்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறாடாவான அனுரகுமார திசாநாயக ஆகியோருடன் இணைந்து எதிர்க்கட்சியின் பிரதான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படவும் தயாராக உள்ளோம்.

மத்திய வங்கி நிதி மோசடி இடம்பெற்ற நிலையில் அரசாங்கத்தில் இருந்துகொண்டு நாம் பாரிய அழுத்தங்களை முன்னெடுத்தோம். அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர முதலில் மத்திய வங்கி ஊழல் குறித்து முறைப்பாட்டையும் செய்திருந்தார்.

அத்துடன் கோப் குழுவில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்தும் நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் நாம் ஜனாதிபதிக்கும் அக் காரணிகளை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வலியுறுத்தினோம்.

இவ்வாறான சூழலின்  பின்னணியில் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே எம்மால் நிராகரிக்க முடியாத விடயங்களாக அமைந்தது.

ஆகவே தேசிய அரசாங்கத்தில் நாம் அமைச்சர்களாக பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்ட போதிலும் எமது மனசாட்சிக்கு அமைய நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆகவே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து 16 பேரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என தீரமானம் மேற்கொண்டோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சிலர் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் நிலைப்பாட்டில் இருந்தனர். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நாம் கலந்துரையாடி 16 பேர் ஆதரவாக வாக்களிக்கவும் ஏனையவர்கள் வாக்களிக்காது நிராகரிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் கடந்த மே தினக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமுர்த்தி வங்கி நிதி மோசடிகள் என்ற பாரிய குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

குறிப்பாக கடந்த காலத்தில் சமுர்த்தி வங்கியின் 675 கோடி ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றதாக கூறியுள்ளார். கோடிக்கணக்கில் அல்ல சதக் கணக்கிலும் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளது என்று கூறினார். அது மிகப்பெரிய குற்றமாகும்.

ஆனால் இவ்வாறு முன்வைக்கும் குற்றச்சாட்டினை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். பிரதமர் இவ்வாறு குற்றம் சுமத்திய பின்னர் சமுர்த்தி வங்கி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர், கணக்காய்வாளர், உயர் மட்ட அதிகாரிகள் அனைவரதும் கையொப்பம் இடப்பட்ட கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித குற்றங்களும் இடம்பெறவில்லை என்ற அறிக்கையினை முன்வைத்துள்ளனர்.

ஆகவே இந்த குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். சமுர்த்தி வங்கிகளுக்கு பொறுப்பான அமைச்சராக செயற்பட்டவர் என்ற நிலையில் நான் இந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி செயற்பட தயாராக உள்ளேன் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு