முள்ளிவாய்கால் நினைவு கூரல் மக்களின் ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு


19989489_10154688269337409_6528491007600202060_nமுள்ளிவாய்க்கால் – மே 18 நினைவுகூரல் நிகழ்வு, ஒரு நாள் சடங்காக அமையாமல், பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்கால, எதிர்கால ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். இந்த நிகழ்வானது இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் நிறைவடைந்து விடக் கூடாது. உறவுகளை இழந்த மக்களின் உளத்தை ஆற்றுப்படுத்துவதற்கும் அவர்களுடைய அரசியல் மற்றும் வாழ்க்கையை  ஈடேற்றுவதற்குமாக அமைவது அவசியமாகும். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

 

“முள்ளிவாய்க்கால்” என்பது எமது அரசியற் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. இங்கே முடிவடைந்த யுத்தமும் அது ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகளும் எமது மக்களை விட்டு நீங்கவில்லை. இந்தப் பாதிப்பின் வலியோடுதான் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மக்கள் முள்ளிவாய்க்காலில் பெருந்துக்கத்தோடு ஒன்றிணைகிறார்கள். இந்த ஒன்றிணைவானது, எல்லோரும் கூடி அழுது தீர்ப்பதற்கானதல்ல. தங்களுடைய தீராத வலியை, கூட்டு மனவடுவை ஒன்றாகக் கூடி ஆற்றுப்படுத்துவதோடு, தங்களுடைய எதிர்கால ஈடேற்றத்தைக் குறித்த ஏக்கத்தையும் இங்கே வெளிப்படுத்துகிறார்கள். அறுபது ஆண்டுகாலப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வழியை இங்கே ஏற்றப்படும் சுடரில் அவர்கள் தேடுகிறார்கள். மக்களுடைய இந்த வேட்கையை நாம் அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் உள்ளோம்.

 

ஆகவேதான் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வை சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, எமது மக்களுடைய விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியலை உய்த்துணர்வதற்கான ஒரு மையமாகும் என எண்ணுகிறது. இந்த மையத்திலிருந்து நாம் புரிந்து கொள்கின்ற விடயங்களும் எதிர்காலத்துக்காக மேற்கொள்கின்ற தீர்மானங்களும் புதிய அரசியல் முன்னெடுப்புகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்  என வலியுறுத்துகின்றோம்.

 

அரசியல் போட்டிகள், பேதங்கள் போன்ற வேறுபாடுகள் எதற்கும் இடமளிக்காமல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நிகழ்வை நிறைவேற்றுவோம். அதுவே உயிரிழந்தோருக்கும் உறவுகளை இழந்தோருக்கும் நாம் செய்கின்ற மரியாதையும் மதிப்பளித்தலுமாகும்.என தனது அறிக்கையில் சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு