தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடர்வோம் – ரணில்


DSC_0396நாட்டை கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல. எமது வேலைத்திட்டங்களில் ஒரு சில குறைப்பாடுகள் உள்ளன. எனினும் அதனை திருத்திக்கொண்டு நாம் பயணத்தை தொடர்வோம். இதன்படி எஞ்சியுள்ள அடுத்த 18 மாதங்களில் எதிர்பார்த்த துரித அபிவிருத்தியை முன்னெடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிதாக கிராம உத்தியோகத்தர்கள் 1650 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அபிவிருத்திக்காக கிராமத்திற்கு நிதியொதுக்கீடுகள் செய்யும் போது கிராம உத்தியோகத்தர்களே அதற்கான உரிய வேலைகளை செய்கின்றனர். தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு பொறுப்புமிக்க கடமைகளை இனிமேல் சுமத்தவுள்ளோம். இரண்டு வருடங்கள் நாட்டை உரிய முறையில் கட்டியெழுப்பி விட்டு எஞ்சியுள்ள 18 மாதங்களில் துரித அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம்.

நாம் நாட்டை பொறுப்பேற்கும் போது நாட்டின் பொருளாதாரம் பெரும் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. கல்வி துறை பாரிய சரிவை சந்தித்தது. எமது அரச வருமானத்தின் மூலம் கடனை விடுத்து வட்டியை கூட செலுத்த முடியாமல் போனது. அந்தளவுக்கு பொருளாதார ரீதியான சிரமத்தை எதிர்கொண்டோம்.

கடன் தொல்லையிலிருந்து விடுப்பட்டு நிலையான பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கே நாம் கடந்த இரு வருடங்கள் முயற்சி செய்தோம். பெரும் கஷ்டமான காலத்திலும் கூட வரவு செலவுத் திட்டத்தை மட்டுப்படுத்தவில்லை.

நாம் சிரமமான பொருளாதாரத்தை பொறுப்பேற்று நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துள்ளோம். வெளிநாட்டு முதலீடு கடந்த வருடம் பன்மடங்காக அதிகரித்தது. அது நடப்பாண்டில் இன்னும் அதிகமாகும். இந்நிலையில் தற்போது கடன் செலுத்த கூடிய சூழலை ஏற்படுத்தி கடன் சுமையை குறைத்து வருகின்றோம்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டளவில் அதிகளவில் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வருட காலத்தில் அபிவிருத்திக்கும் அவதானம் செலுத்துவோம்.

மேலும் கல்வி துறையில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தவுள்ளோம். நாம் ஆரம்பித்த அபிவிருத்தி தொடர்ந்து கொண்டு செல்லவுள்ளோம். எமது நாட்டின் பொருளாதாரம் வரட்சி, வெள்ளத்தினால் பாதிப்புறும் என கூறினாலும் அவ்வாறு செல்ல விடாமல் நாட்டின் பொருளாதாரத்தை சீராக முகாமைத்துவம் செய்துள்ளோம்.

அத்துடன் கிராம வீதி அபிவிருத்திக்கு விசேட அவதானம் செலுத்துவதுடன் கிராமத்தின் குளங்களை புனரமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

நாட்டை கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல. எமது வேலைத்திட்டங்களில் ஒரு சில குறைப்பாடுகள் உள்ளன. எனினும் அதனை திருத்திக்கொண்டு நாம் பயணிக்கவுள்ளோம். இதன்படி அடுத்த 18 மாத எதிர்பார்த்த துரித அபிவிருத்தியை முன்னெடுப்போம் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு