பிரேமானந்தா – பிரேமகுமார் – ஜெயந்திரன் கொடியவர்களின் கூடாரமாகும் லண்டன், பாரிஸ் சைவ ஆலயங்கள்!

இலங்கை, இந்தியாவில் பிரேமானந்தா முதல் லண்டனில் பிரேமகுமார் பாரிஸில் குடுமி ஜெயா என அறியப்பட்ட ஜெயந்திரன் வரை மக்களின் மத நம்பிக்கைகளை வைத்து, நம்பிக்கையை வளர்த்து மோசம் செய்கின்ற நிலை அறிவியல் வளர்ந்த மேற்கு நாடுகள் வரை தொடர்கின்றது. 13 பாலியல் வன்புணர்வு உட்பட 50 வரையான சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இழைத்த இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா பற்றிய ஒளிப்பதிவில் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் ‘தமிழா தமிழா’ த பாண்டியண் சொல்கின்ற போது சமூகத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் எவ்வாறு இந்தக் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று தெரிவித்தார். பாலியல் குற்றவாளியை விடுதலை செய்யுமாறு கேட்டவர் வடக்கு கிழக்கின் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன். இவருக்கும் பிரேமானந்தாவுக்குமான உறவு இலங்கையில் பிரேமானந்தா ஆச்சிரமம் நடத்துகின்ற போது 1983 இனக்கலவரத்துக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. அப்போது சி.வி விக்கினேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதிபதி.

இளம்பெண்களை வன்புணரும் பாலியல் வெறியனை கும்பிட்டு வந்த நீதிபதி சி.வி விக்கினேஸ்வரன் தன் முன் – சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும் விடுதலைப் போராட்ட போராளிகளுக்கு அதிகபட்ச தண்டணையை வழங்கி வந்தவர். ஆனால் பிரேமானந்தா போன்ற காமுகர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்ய மன்றாடியவர்.

பிரேமானந்தா முதல் பிரேமகுமார் வரைக்கும் முன்னாள் நீதிபதியும் முதலமைச்சருமாக இருந்த சி.வி விக்கினேஸ்வரன் மட்டுமல்ல லண்டனில் பாரிஸில் இருந்த சைவ ஆலயங்களும் அதன் முக்கியஸ்தர்களும் கூட பாலியல் குற்றவாளிகளுக்கு கூடாரமாகச் செயற்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள ஆலயங்களின் முக்கியஸ்தர்கள், அறங்காவலர்கள் பிரேமகுமார் ஆனந்தராஜா, பாலியல் குற்றவாளி என பிரித்தானிய நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அக்குற்றவாளிக்கு ஆதரவாக நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். சிறார்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க வேண்டிய ஆலயங்கள் காமுகர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் மீது அபாண்டமான வதந்திகளைப் பரப்பியும் வருகின்றனர்.
பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றுவதில் அவருக்கு உறுதுணையாக நின்றது ஹைகேற்றில் உள்ள உயர்வாசற் குன்று முருகன் ஆலயம். ஆலயத்தின் நிர்வாகசபைக்கான தேர்தலில் அதில் போட்டியிட்ட தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன், தான் தெரிவு செய்யப்பட்டால் சமூக விழுமியங்களைப் பேணுவேன் என அவர் காங்கேயன் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் செப்ரம்பர் 22இல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் பாலியல் குற்றவாளிக்கு துணைபோவதாகவே ஆலயத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தது.

லண்டன் ஹைகேற் உயர்வாசற் குன்று முருகன் ஆலயத்தின் அறங்காவல் சபைத் தலைவராக யாழ் காரைநகரைச் சேர்ந்த கதிரவேலு நாகராஜா உள்ளார். தெய்வேந்திரம்பிள்ளை காங்கேயன் செயலாளராகவும் யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த பத்மநாதன் பார்த்தீபன் பொருளாளராகவும் உள்ளனர். உரும்பிராயைச் சேர்ந்த செல்லையா சோதிலிங்கம் அறங்காவல் உறுப்பினராகவும் உள்ளனர். இந்த அறங்காவலர் சபையினால் நடத்தப்படும் ஹைகேற் உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் பிரேமகுமார் ஆனந்தராஜா மிகுந்த செல்வாக்கை கொண்டிருந்தார். இவருடைய வழக்கு வூட்கிறீன் நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆலயத்தில் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விசேட பூசைகள் நடாத்தப்பட்டது. தண்டனை குறித்த நீதிமன்ற அமர்வின் போதும் பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு ஆதரவாக பார்த்தீபன் நீதிமன்று சென்று தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். இவர்களுடன் தேசம்நெற் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவர்கள் யாரும் இணைப்புக்கு வரவில்லை. அவர்களுக்கு குறும் செய்தியும் அனுப்பப்பட்டது. ஆனால் பதிலில்லை. தனாதிகாரி பார்தீபன் முதற் தடவை எடுத்த போது “வேலையாக உள்ளேன் பிறகு எடுக்கிறேன்” என்றார். ஆனால் அவர் பின்னர் எடுக்கவில்லை.

இரு ஆண்டுகளுக்கு முன் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே பிரேமகுமாரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொலிஸார் ஹைகேற் முருகன் ஆலயத்திற்கு அறிவித்திருந்தனர். அத்தோடு இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை பற்றிய தொடர்ச்சியான கூட்டங்கள் சூம் ஊடாக நடந்துள்ளது. இக்கூட்டத்தில் அப்போது ஆலயத்தின் தலைவராக இருந்த சபாபதிப்பிள்ளை ஸ்றிகாந்தா, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர், மெற்ரோ பொலிட்டம் பொலிஸ் உத்தியோகஸ்தர் என மூவர் கலந்துகொண்டு நிலைமையை அவதானித்து வந்தனர். நாகராஜா தலைமையிலான புதிய நிர்வாக சபை பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட பிரேமகுமாரோடு நெருக்கமாக இருந்தது.

பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே முதலில் உருவானது. 1975இல் சபாபதிப்பிள்ளை இவ்வாலயத்தை உருவாக்கினார். தமிழ் ரைம்ஸ் என் எஸ் கந்தையா, பேர்மிங்ஹாம் பாலாஜி கோயிலை உருவாக்கிய டொக்டர் ராஓ, லண்டனுக்கு வெளியே ஒரு கோவிலை உருவாக்கிய வைரவமூர்த்தி, விநாயகமூர்த்தி, விம்பிள்டன் பிள்ளையார் கோவிலை உருவாக்கிய ரட்ணசிங்கம், ஸ்ரோன்லி அம்மன் ஆலயத்தை உருவாக்கிய குணசிங்கம் ஆகிய ஏழு பேர் இந்த ஆலயத்தின் அறங்காவலர்களாக இருந்தனர். சபாபதிப்பிள்ளையின் மகனே முன்னைய நிர்வாகத் தலைவராக இருந்த டொக்டர் ஸ்றிகாந்தா. இவர் பிரித்தானியாவின் மிகப்பிரசித்தி பெற்ற ‘மூர் ஐ ஹொஸ்பிரல்’லில் தசாப்தங்கள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களில் ஹைகேற் முருகன் ஆலயமே மிகக் கூடுதலான சொத்துக்களைக் கொண்டுள்ளது. இவர்களிடம் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு 45மில்லியன் பவுண்கள் எனமதிப்பிடப்படுகின்றது. இருந்த போதும் இவ்வாலயம் இதுவரை குறிப்பிடத்தக்க சமூக செயற்பாடுகளை தாயகத்திலோ லண்டனிலோ மேற்கொள்வதில்லை.

பிரேமானந்தா பற்றிய நேர்காணலில் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்கள் கோயில்களைக் கட்டி கோடி கோடியாகச் சம்பாதிப்பதாக்க குறிப்பிட்டிருந்தார் மூத்த பத்திரிகையாளர் த பாண்டியன். அதில் அவர் லண்டனில் உள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

பாண்டியன் குறிப்பிட்டது போல் ஆர் ஜெயதேவன் புலிகளுடன் நெருக்கமாக இருந்த காலம் ஒன்று இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் லண்டனில் இருக்கும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அங்கு வருகின்ற ஆலய வருமானத்தைப் பயன்படுத்தி பெருமளவில் பொதுத் தொண்டுகளைத் தாயகத்தில் மேற்கொண்டு வந்தது. அப்போது ஆலய நிர்வாகத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எஸ் கருணைலிங்கம் ஆலய வருமானத்தில் செலவு போக மூன்றிலொரு பங்கை தாயக மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். சில தடைகள் இருந்தாலும் அது இன்றை வரைக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அன்று இந்த முன்மாதிரியைத் தொடர்ந்து லண்டனில் புலிகளும் இரு கோவில்களை நிறுவினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம் மற்றையது என்பீல்ட் நாகபூசணி ஆலயம். இந்த ஆலயம் தொடர்பான சர்ச்சையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர் ஜெயதேவனை விசாரணைக்கு இலங்கைக்கு வரவழைத்து அவரைத் தடுத்து வைத்து படுகொலை செய்யவும் முயற்சித்தனர். அக்காலகட்டத்தில் தேசம் உட்பட பலரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலைக் கண்டித்து அழுத்தங்களை வழங்கினர். அதன் பின் பிரத்தானிய அரசினதும் அழுத்தங்களால் ஆர் ஜெயதேவன் விடுவிக்கப்பட்டார்.

பிரேமகுமார் ஆனந்தராஜா என்ற பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதல் வழங்கியவர்களின் சமூக அக்கறையற்ற தன்மையை தேசம்நெற் வன்மையாகக் கண்டித்துப் பல பதிவுகளை வெளியிட்டு வந்தது. பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு நற்சான்றிதழ் வழங்கிய கலாநிதி நித்தியானந்தனின் சமூகப்பொறுப்பற்ற செயலை தேசம்நெற் அம்பலப்படுத்தியது. ஏனையவர்களும் அம்பலப்படுத்தப்படுவார்கள் என தேசம்நெற் எச்சரித்தது.

அதற்காக சமூவலைத் தளத்தில் ஆர் ஜெயதேவன் ஊடகவியலாளரான த ஜெயபாலன் (என்) மீது கொதித்து எழுந்து பதிவுகளை வெளியிட்டார். அப்பதிவில் ‘குற்றும் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி’ என்ற சட்டத்தின் தாரக மந்திரத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் பாலியல் குற்றவாளியான பிரேமகுமார் ஆனந்தராஜா நீதிமன்றத்தால் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பின்னரே நாற்பது பேர் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதனை நீதிமன்றத்தில் நீதிபதியும் பிரதிவாதியின் சட்டத்தரணியிடம் உறுதிப்படுத்திக் கொண்டார். “பிரேமகுமார் ஆனந்தராஜா ஒரு பாலியல் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டது தெரியப்படுத்தப்பட்டே இந்நற்சான்றிதழ் பெறப்பட்டது” என்பதை நீதிபதி பெப்ரவரி 02 தண்டனைக் காலத்தை தீர்மானிக்கும் வழக்கின் போது உறுதிப்படுத்திக்கொண்டார்.

வன்முறையான கிரிமினல் குற்றங்கள் கொலைகள் உட்பட, நிதி மோசடிகள் போன்ற விடயங்களில் உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கணப்பொழுதின் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு வன்முறைக் குற்றங்கள் தேவையின் உந்துதலால் நிதிமோசடிகள் நிகழலாம். அவ்வாறான சமயங்களில் நற்சான்றிதழ் வழங்குவது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆனால் மிகத் திட்டமிட்டு சாதுரியமாக இளம்பெண்களைத் துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு ஆலயங்களை கூடாரமாக்குவது அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது அயோக்கியத்தனமான செயல். இவ்வாறான சமூகத் தலைவர்களை யோக்கியமற்ற அயோக்கியர்கள் என்றால் மிகையல்ல. பாதிக்கப்பட்ட மாணவி கலாநிதி நித்தியானந்தனின் தமிழ் பள்ளியில் படித்த குழந்தை. ஆனால் கலாநிதி நித்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தவனைக் கண்டிக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தான் கையெழுத்திட்டதாக சிலருக்கு குறிப்பிட்டிருக்கின்றார். இந்த அயோக்கியத்தனத்துக்கு ஆர் ஜெயதேவன் வக்காலத்து வாங்குகின்றார். ஈழபதீஸ்வரர் ஆலயம், ஹைகேற் முருகன் ஆலயம் போன்றன முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடமாக வேண்டுமேயொழிய பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டுமேயொழிய காமுகர்களுக்கு புகலிடமாகவும் அவர்களைக் காப்பாற்ற கையெழுத்து வேட்டையும் நடத்தக்கூடாது. இவர்களுக்கு பாடம் புகட்ட இன்னும் பல பெரியார்கள் வரவேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரு ஆலயங்கள் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கும் ஆலயங்கள், பள்ளிகள், தேவாலயங்கள், குருதுவாராக்கள் கொடியவர்களின் கூடாரமாகவும் பணம் சுரண்டுபவர்களாகவும் இருப்பதற்கு முற்றுப்புள்ளி முதலில் வைக்க வேண்டும். ஆனால் இவ்வாலயங்கள் அப்படிச் செய்வதில்லை. பிரான்ஸின் லாகுர்னே இல் உள்ள சிவன் ஆலயத்தின் உரிமையாளரான வெற்றிவேலு ஜெயந்திரன் அதன் வருமானத்தைக் கொண்டு நல்லூரடியில் ‘லக்ஸ் ஹொட்டல்’ என்ற பெயரில் காமவிடுதியை நடத்தி வருகின்றார். அதற்காக ஒரு சில மணித்தியாலங்களுக்கு ஹொட்டலை ‘புக்கிங்’ செய்யும் வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு சமூகத்தின் கலாச்சார விழுமியங்கள் சீரழிக்கப்படுகின்றது. பல இளம் பெண்களின் வாழ்வைச் சீரழித்த ஜெயந்திரன் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களில் வறுமையில் உள்ள குடும்பங்களில் இருந்து இளம் பெண்களை வேலைக்கு எடுப்பதாகவும் பின் அவர்களுக்கு போதையூட்டி தன் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதாகவும் இந்த ஹொட்டலுக்கு சாரதியாக இருந்தவர்களில் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொண்டு இந்த லக்ஸ் ஹொட்டலில் ஒரு ‘ரூம் புகிங்’ செய்ய வேண்டும் எனக் கேட்டபோது, “அண்ணை இந்த ஹொட்டல் நல்லதில்லை. அது மற்றைய விசயங்களுக்குதான் பாவிக்கிறவை” என்றார் அச்சாரதி. “இப்பதான் இப்படியா?” என்று கேட்டபோது, “அப்ப இருந்தே இப்படித்தான்” என்றார் அவர். “உங்களிடம் யாராவது முறையிட்டார்களா?” என்று கேட்டபோது, “ஆறு வருசத்துக்கு முதல் ஒரு நாள் ஒரு வடிவான நல்ல வெள்ளை கலரான பொம்பிளப் பிள்ளை அழுதுகொண்டு ஓடி வந்தாள். தனக்கு எதனையோ தந்து குடிக்கச் சொன்னதாகவும் தன்னை துஸ்பிரோகம் செய்ய முற்பட்டு தன்னை அடித்ததாகவும் சொன்னாள்” என்றார். “அதைவிட நிறைய கேள்விப்பட்டு இருக்கிறன். இதையெல்லாம் பார்த்துப் போட்டு பாவங்களை சம்பாதிக்க வேண்டாம் என்று போட்டுத்தான் அங்கயிருந்து விலத்தீட்டன்” என்றார். “அவன் கோயில் வைச்சிருக்கிறான் காசிலை குறைவிடான். ஆனால் வாயைத் திறந்தா ஒரே தூசணமும் சாதியை இழுத்தும் தான் கதைப்பான். எனக்கு ஒரு மாதிரியாத் தான் இருக்கும்” என்றார் அந்தச் சாரதி. அவர் இப்போது யாழில் இல்லாவிட்டாலும் அவருடைய பாதுகாப்பிற்காக அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

குடுமி ஜெயா என்று அறியப்பட்ட கைதேர்ந்த ஒரு அயோக்கியனை கடவுளுக்கு இணையாக வைத்து லாகுர்னே சிவன் கோவிலில் காசுக்காகப் பாடி கூத்தடிக்கின்ற ஒரு காவிக்கூத்தாடி தான் இந்திரநாதன் நாகலிங்கம். பாரிஸில் குடும்பமாக வாழ்கின்ற இவருக்கும் இளவயதில் மகளும் இருக்கின்றார். ஆனால் இவர் குடுமி ஜெயாவின் நெருங்கிய நண்பரும் கூட. புலம்பெயர் தேசத்தில் இருந்து அயோக்கியர்களுக்கும் காமுகர்களுக்கும் கதைவசனம் எழுதும் இந்திரன் என்று அறியப்பட்ட இவர் பொதுமேடைகளில் சமூகம் பற்றி சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றார். பாடுகின்றார். ஆனால் நடைமுறையில் அவரது பேச்சுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லாமல் சமூகத்தை சீரழிப்பவர்களை இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்பவர்களை கடவுளோடு இணைத்து சமூகத்தை சீரழிக்கின்றார்.

பிரித்தானியாவில் உள்ள நியுகாஸ்டில் உதைபந்தாட்டக் கழகத்தை சவுதியரேபியா கொள்வனவு செய்ததை அடுத்து பெரும் சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. காரணம் சவுதியரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மன் ஊடகவியலாளர் ஜமால் கொஷொக்கியை படுகொலை செய்தவர் என்பதால் அது உதைபந்தாட்டக் கழகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் என்பதன் அடிப்படையிலேயே இந்த சர்ச்சை எழுத்துள்ளது. ஒரு உதைபந்தட்டக் கழகம் கூட தன்னுடைய விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற போது ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கியுள்ள கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி வருகின்றது.

பிரித்தானியாவில் தமிழர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் ஒப்பிரேசன் என்வர் என்ற ஸ்கொட்லன்ட் யாட்டின் பொலிஸ் நடவடிக்கையோடு ஊடகவியலாளராக நானும் அன்றைய கவுன்சிலர் போல் சத்தியநேசனும் ஈடுபட்டிருந்தோம். வேறும் பலரும் ஈடுபட்டு இருந்தனர். அதனை தலைமை தாங்கி நடத்தியது பின்நாட்களில் துணை ஆணையாளராக இருந்த சேர் ஸ்ரிபன் ஹவுஸ். அவர் ஜனவரி 2022இல் உள்துறை அமைச்சு லோசகருக்கு கூறிய ஒரு சொல் பெரும் அதிர்வலையை மார்ச் 2, 2023இல் ஏற்படுத்தி உள்ளது. ‘பாலியல் வன்புணர்வு’ rape என்பதை அவர் ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று குறிப்பிட்டுவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று தான் ஒருபோதும் குறிப்பிடவில்லை என சேர் ஸ்ரிபன் ஹவுஸ் கடுமையாக தன்னுடைய மறுப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்புணர்வு என்ற மிகக்கொடுமையான குற்றச்செயலை ‘பாலியல் துன்பியல்’ regretful sex என்று மிதமாகக் குறிப்பிட்டு அக்குற்றத்தின் கொடுமையை சேர் ஸ்ரீபன் ஹவுஸ் குறைத்துவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. பாலியல் குற்றங்களுக்கு எதிராக மிக உறுதியாக போராடுகின்ற நாடுகளில் ஆலயங்களை வைத்திருக்கும் எம் ஆணாதிக்க ஆசாமிகள் இக்குற்றங்களை இழைக்கும் கொடியவர்களை பாதுகாப்பதோடு பாதிக்கப்பட்ட இளம்பெண்களையும் அப்பிள்ளைகளின் தாய்மார்களையும் எள்ளிநகையாடுகின்றனர். இவற்றை அம்பலப்படுத்தினால் அதனை gutter reporting, gutter journalism என்று கொக்கரிக்கின்றனர்.

பெண்களை கீழானவர்களாக நோக்குகின்ற பெண்கள் துன்புறுத்தப்பட்டால் அதற்கு அவர்களது நடத்தையே காரணம் என்று எண்ணுகின்ற பெண்கள் சொல்வதை நம்ப மறுக்கின்ற ஆணாதிக்கச் சிந்தனை தான் இந்நிலைக்குக் காரணம். இந்த ஆணாதிக்கச் சிந்தனை இருக்கின்ற வரை பிரேமானந்தா, பிரேமகுமார், குடுமி ஜெயா போன்றவர்கள் எப்போதும் போற்றப்படுவார்கள். எங்களுடைய ஆலயங்கள் முற்று முழுதாகவே ஆண்களுடைய – ஆணாதிக்க வாதிகளுடைய கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இயற்கை நிகழ்வான தீட்டை காரணம் காட்டி பெண்களை ஒதுக்கும் இந்த ஆணாதிக்க அயோக்கியர்களை ஆலயங்களில் இருந்து விரட்டாதவரை ஆலயங்கள் கொடியவர்களின் கூடாரமாகவே அமையும். ஹைகேற் முருகன் ஆலயம், வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயம், லாகுர்னே சிவன் ஆலயம் மற்றும் ஆலயங்கள் ஆணாதிக்க கருத்தியல் கொண்ட பெண்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு வக்காலத்து வாங்குகின்ற ஆசாமிகளை அறங்காவலர்களை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இந்த ‘உண்டியல்’களை காயவிட்டால் போதும்.

பெண்களை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்த: பெண்களுக்கு போதைவஸ்தூட்டி பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதை தடுக்க, பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க இந்த ஆலயங்களின் உண்டியலை காயப்போடுங்கள். உண்டியலைக் காயப்போட்டால் ஆசாமிகள் ஓடிவிடுவார்கள். கடவுள் உண்டியலுக்குள் போடும் பணத்தை வைத்து யாருக்கும் அருள்பாலிப்பதில்லை. அதனால் சாமிக்கு லஞ்சம்கொடுக்கும் பழக்கத்தை கை விடுங்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *