பிணைமுறி விவகாரம் – 118 பேரின் பெயர் பட்டியலை வெளியிட வழியுறுத்தல்


5a48be6f4d1ea-IBCTAMILபிணைமுறி விவகாரத்தில் பிரதமர் மீது பாரிய குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும், 2020ம் ஆண்டு வரை எமது ஆட்சி தொடரும். இதை எவராலும் மாற்றியமைக்க முடியாது. இருந்தாலும் இந்த குற்றசாட்டில் அர்ஜூன் அலோசியஸிடமிருந்து பணம் வாங்கியதாக சொல்லிக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிடுகின்றனர்.

அதற்கு இடம் கொடுக்கப்போவதில்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் ஊடான 14000 வீட்டு திட்டத்தில் 250 வீடுகளை தலவாக்கலை மடக்கும்புரை மேல் பிரிவு தோட்டத்தில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா வைபவ ரீதியாக இன்று (04) இடம்பெற்றது.

இவ்விழாவை தலைமை தாங்கி நடத்திய அமைச்சர் திகாம்பரம் தோட்ட தொழிற்சாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பெருந்தோட்ட பகுதிகளில் லயன்களிலிருந்து பதவிக்கு வந்த இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், திலகராஜ், திகாம்பரம் ஆகிய நாம் எவரிடமும் பணம் வாங்கவில்லை, நேர்மையான சேவையை எம் மக்களுக்கு செய்து வருகின்றோம்.

அத்தோடு பணம் வாங்கியதாக சொல்லப்படும் 118 பேர் தொடர்பில் பிரதமர் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறி குறித்த நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்.

அத்தோடு, எனது உயிர் இருக்கும் வரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடு அமைத்துக் கொடுப்பேன். லயம் என்ற அடையாளத்தை மாற்றி எனது மக்களை புதிய கிராமத்தில் சொந்த நிலத்தில் வீடு கட்டி வாழ வைப்பேன்.

இந்திய அரசாங்கம் 14000 வீடுகளை மலையக பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்க உதவிகள் செய்துள்ளது. 2020ம் ஆண்டுக்குள் இந்த வீடுகளை கட்டியமைக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் வழியுறுத்தியுள்ளது.

இன்று வரை 1300 வீடுகள் கட்டப்பட்ட நிலையில் மேலதிகமான வீடுகளை கட்டியமைக்க எனது அமைச்சு இந்திய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும். மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வேலையற்றவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டாம் என சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் லயம் ஒன்றில் வாழும் சகல குடும்பங்களுக்கும் தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க நாட்டின் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளேன்.

நான் கட்சி, மதம், ஜாதியை பார்த்து சேவை செய்பவன் அல்ல. என்னுடைய உறவுகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ தனிமையான பொது சேவையை செய்பவனும் அல்ல. மாறாக மலையகத்தில் உள்ள அனைவரும் எனது சொந்தங்கள் என்ற வகையில் அவர்களுக்கு சேவை செய்வதில் பெருமிதம் அடைகின்றேன்.

என்னுடைய உயிர் இருக்கும் வரை தோட்ட மக்களுக்கு லயன் வாழ்க்கையை ஒழித்துக் கட்டி தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பேன். இலங்கையில் நாம் வாழ்ந்தாலும், இந்தியா எமது தந்தை நாடு. இந்தியாவின் இரத்தமே எமது உடம்பில் ஓடுகின்றது. இந்தியாவோடும், இலங்கையோடும் நாம் விசுவாசமாக இருப்போம்.

எனது அமைச்சிக்கு வருபவர்கள் வீடு கேட்டு வரும் நிலை உயர்ந்துள்ளது. எமக்கும் இது ஒரு பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. எமது சமூகத்திற்கு அந்தஸ்த்தை வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்திய அரசாங்கம் பாரிய உதவிகளை செய்தும், செய்து கொண்டும் வருகின்றது. அந்த அரசாங்கம் கட்டியமைக்கும் வீடுகளை இந்திய அரசாங்கத்தின் வீடுகள் தான் என்று பிரச்சாரம் செய்கின்றோம்.

மலையகத்தில் லயன்களை உடைக்கும் அளவிற்கு மக்கள் ஒரு பக்கமாக ஒற்றுமையை பலப்படுத்தி வருகின்றனர். லயம் என்பது எமது அடையாளமாகும். இந்த அடையாளத்தை மாற்றியமைத்து புதிய கிராமங்களை அமைத்து சொந்த காணியில் வீடுகளை கட்டி வாழ வேண்டும். இதுவே எனது அவா.

அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இவர்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய சேவை பற்றி ஊடகங்கள் சிலவற்றில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய முன்வர வேண்டும் என அவர் உரையில் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு