மக்களுக்காக வேலை செய்யாத அரசு அதிகாரிகள் – தங்களுக்கு பிரச்சனைகள் என்றால் மட்டுமே போராடும் அபத்தமான அதிகாரிகள்!

அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றியடைந்ததாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த போராட்டங்களால் மாணவர்கள், நோயாளர்கள் உட்பட பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொதுமக்கள் பலரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டங்களால் வைத்தியசாலைகளில் யாரும் கவனிப்பாரின்றி உள் மற்றும் வெளி நோயாளர்கள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய போராட்டத்தால் இந்த நிலை இன்னமும் மோசமடைந்துள்ளது.

இதைவேளை ஆசிரியர்களின் போராட்டத்தால் 100% பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாடசாலைகள் ஒரு வருட கால இடைவெளியில் இயங்கிவரும் நிலையில் இறுதித்தவணை பரீட்சை நேரத்தில் சம்பள உயர்வு வேண்டி பாடசாலை ஆசிரியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் பெற்றோர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை முழுமையாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு கூறியுள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

நாடு எதிர்கொண்டுள்ள இன்றைய நெருக்கடி நிலைக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிலுள்ளவர்கள் இந்த அரசாங்க அதிகாரிகள் தான். ஆட்சியாளர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த அரசாங்க அதிகாரிகள் பதவியில்  நிலையாக ஆயுள் முழுமைக்கும் இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எந்த விடயங்களிலும் இதுவரை முன்னேற்றம் இல்லை. நாட்டு மக்களுக்கு தேவையான – அடிப்படை தகவ்லகள் கூட இன்னமும் கணினி மயப்படுத்தப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் கணினித்துறைக்குள் தன்னுடைய நிர்வாக கட்டமைப்பை மிக வேகமாக உள்நுழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் தன்னை மாற்றிக்கொள்ள நினைக்காத பிரித்தானியர் கால  நிர்வாக கட்டமைப்பு ஒன்று தான் இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு அரசு திணைக்களங்களில் அளவுக்கு அதிகமான அதிகாரிகள் நித்திரை கொள்வதற்காகவே நியமிக்கப்பட்டது போல அசமந்தப் போக்கிலேயே இந்த நிர்வாக கட்டமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் உச்சகட்டமான அபத்தம் தான் அண்மையில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த இலவச உணவுப் பொதிகள் கூட மக்கள் கைகளுக்கு ஒழுங்காக சென்று சேராத பிரச்சினை. மலையகம் தொடங்கி இலங்கையின் பல பகுதிகளிலும் அந்த உணவுப் பொதிகளின் நிலை என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.

இந்தக் கல்வித்துறை தொடர்பான இடங்களில் பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய ஆசிரியர்கள் எண்ணத்தை சாதித்து விட்டார்கள் என சம்பள உயர்வு கேட்டு போராடுகிறார்கள் என தெரியவில்லை. பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் பாவனைக்கான வசதிகளை கூட ஏற்படுத்திக் கொடுக்காத – ஏற்படுத்திக் கொடுக்க நேரமில்லாத ஆசிரியர்களும் – அதிபர்களும் தான் இங்கு அதிகம் பேர்.

மாணவர்களின் உடைய பிரச்சனைகளுக்காக இந்த ஆசிரியர்களும் – நோயாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பில் வைத்திய அதிகாரிகளும்- பொதுமக்களின் உடைய தேவைக்காக நிர்வாக அதிகாரிகளும் இதுவரையில் போராட்டம் செய்ததாக பெரிதாக பதிவுகள் இல்லை. எப்பொழுதெல்லாம் இந்த நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்பொழுது மட்டுமே நாடு சீரழிகிறது என இந்த அரசாங்க அதிகாரிகள் அழுது வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மக்கள் புரட்சி என பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு – இந்த அபாயகரமான நிலைக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இந்த அரசு அதிகாரிகளுக்கும் உரியது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *