இங்கினியாகல மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ; 4 மின்மாற்றிகள் நாசம்

அம்பாறை, இங்கினியாகல பகுதியிலுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திங்கட் கிழமை காலை ஏற்பட்ட பாரிய தீயினால் நான்கு பாரிய மின்மாற்றிகள் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளன.  இதனால் பாரிய நஷ்ட மேற்பட்டுள்ளதுடன், அம்பாறையின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.

இங்கினியாகலயில் நீர் மின் உற்பத்தி நிலையமொன்றுள்ளது. இந்த உற்பத்தி நிலையத்திலேயே  தீவிபத்து ஏற்பட்டது.  இதையடுத்து விமானப்படை, பொலிஸார் மற்றும் இராணுவ தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

மின் நிலையத்திலுள்ள தீயணைப்பு பிரிவால் பாரிய தீயை உடனடியாக அணைக்க முடியாது போகவே தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டெரியத் தொடங்கியது.  வெளியிலிருந்து தீயணைப்பு பிரிவுகள் அங்கு வந்து சேருவதற்கிடையில் பாரிய தீ பரவி மின் நிலையதிலுள்ள, குறைந்தது நான்கு பிரதான மின்மாற்றிகளை முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளது.

இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த விமானப்படையினர் தீயணைப்பு பிரிவு காலை முதல் பலமணி நேரமாக தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்தது. பொலிஸ் தீயணைப்புப் பிரிவும் இணைந்து இந்த தீயணைப்பு முயற்சியில் நீண்ட நேரம் போராடின. எனினும் அதற்கிடையில் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை தீ முற்றாக அழித்து நாசமாக்கியுள்ளது. இதனால் பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

இங்கு ஏற்பட்ட தீயை அடுத்து அம்பாறை மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன்  பின்னரே அக்கரைப்பற்று, திருக்கோவில், கோமாரி பகுதிக்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.

எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் (30) மாலை வரை மின்விநியோகம் தடைப்பட்டே இருந்தது. மின் உற்பத்திநிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தப் பாரிய தீ பரவி மிகப் பெரும் நஷ்டத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக மின்சார சபையும், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *