“சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்ற பல நாடுகள் இறுதியில் வீழ்ந்து போனதே வரலாறு.” – ஜனாதிபதி ரணிலுக்கு பொன்சேகா அறிவுரை!

நாடு பலமடைந்து வருகின்றது என்று ஜனாதிபதியும் வெளிநாட்டு நாணய கையிருப்பு பிரச்சினை இல்லை என்று மத்திய வங்கி ஆளுநரும் கூறுகின்றனர் என்று தெரிவித்த

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, நகைச்சுவைகளை கூற வேண்டாம் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உள்ளிட்ட கடனுடன் 6,200 கோடி ரூபாய் கடனுக்குள் இலங்கை தள்ளப்பட்டுள்ளது. நாட்டை சீரழித்தவர்களுக்கு மாற்று வழிகளை கொடுப்பதற்காக நாங்கள் வரவில்லை. அவர்கள் வீட்டுக்கு போக வேண்டும். நாங்கள் எப்படி மாற்றுவழியில் முன்னேற்றுவது என்று தீர்மானம் எடுக்கலாம்.

நாடு வங்குரோத்தடையவில்லை. பலமடைந்து வருகின்றது என்று ஜனாதிபதி கூறுகின்றார். மத்திய வங்கி ஆளுநரும் வெளிநாட்டு நாணய கையிருப்பு பிரச்சினை இல்லை என்று கூறுகின்றார். இவ்வாறு நகைச்சுவைகளை கூறாது அது உண்மையென்றால் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளையும், பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தலாம்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தலாம். இதனை செய்யாது மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க வேண்டாம் என்று கேட்கின்றோம்.

இதேவேளை நிலைமையை அறிந்துகொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேவையான நிதியை வழங்கி உடனடியாக தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இப்போது கடன் வாங்குவதுடன், நாட்டின் அரச நிறுவனங்களை விற்பதற்கும் முயற்சிக்கின்றனர்.

லெபனான் போன்ற நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றது தான் இறுதியில் வீழ்ந்து போனது. இதனால் சர்வதேச நாணய நிதியத்தை நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது.

அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அடக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இதனுடன் தொடர்புடையவர்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தண்டனை வழங்குவோம்.

முன்னெப்போதும் இல்லாதவாறு நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. உண்ண உணவு இல்லாவிட்டாலும் சிலர் பாற்சோறு சாப்பிடுகின்றனர். சிறிய கடன் கிடைத்தது என்பதற்காக பாற்சோறு சாப்பிடும் மனிதர்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்களுக்கு அறிவு உண்டாகட்டும் என்று வேண்டுகின்றோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *