“அவள் தேசத்தின் பெருமை ” – லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் !

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அவள் தேசத்தின் பெருமை என்ற தொனிப்பொருளிலான மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் 26.03.2023 கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் – பெண் விடுதலை பற்றிய கருத்துக்களும் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கு மகாசக்தி மகளிர் சம்மேளன தலைவி திருமதி சத்தியமூர்த்தி லலிதகுமாரி தலைமை ஏற்று நடத்தி இருந்தார்.
தலைமை உரையில் கருத்து தெரிவித்திருந்த லலிதகுமாரி அவர்கள் ” வழமையாக அரசு நிறுவனங்களோ – அல்லது அதன் துணை நிறுவனங்களோ மட்டுமே இந்த மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். இப்படியான ஒரு நிகழ்வு பல மாணவிகள் கல்வி கற்கக்கூடிய ஒரு திறன் விருத்தி மையத்தில் நடைபெறுவதையிட்டு நான் பெருமகிழ்வடைகிறேன். பெண்கள் சார்ந்த மாற்றம் என்பது பெரிய அளவிலான இடங்களில் இருந்து இடம்பெறுவதை காட்டிலும் வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய ஆண்பிள்ளைகள் ஆக குறைந்தது வீட்டில் உங்களுடைய வேலைகளை அம்மாவுக்கு பொறுப்பு கொடுக்காது நீங்களே செய்வது மாற்றத்திற்கான முதலாவது அடியாகும். கடந்த காலங்களைப் போல் அல்லாது இன்றைய நாட்களில் பெண்கள் முன்னோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். சில சமூக தடைகள் அவர்களுக்கு இருந்தாலும் கூட அதனையும் தாண்டி கிளிநொச்சி மாவட்டத்து பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை இன்னும் கிராமங்கள் முழுவதும் சென்றடைய வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சர்வதேச அரங்கில் பல விருதுகளைப் பெற்று வன்னி மண்ணின் பெருமையை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி அகிலத்திரு நாயகி ஸ்ரீசெயானந்தபவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் தயார்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகமும் – கலாச்சாரமும் பெண்களை பாதுகாக்கின்றதா ..? அல்லது அடிமைப்படுத்துகின்றதா என்ற தலைப்பிலான பட்டிமன்றம் பலருடைய வரவேற்பையும் பெற்றிருந்தது.
நிகழ்வுகளின் இறுதியில் தேசிய அரங்கிலும் – சர்வதேச அரங்கிலும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல விருதுகளை பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த கௌரவிப்புக்கான நிதி அன்பளிப்பை ஹட்டன் நேசனல் வங்கி வழங்கியிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து மகளிர் அணியின் தலைவி நடராசா வினுசா பேசிய போது ” கிளிநொச்சி மாவட்ட மகளிர் இன்று பல்வேறு பட்ட துறைகளிலும் மிளிர ஆரம்பித்துள்ளனர். இருந்த போதும் பெண்கள் என்பதாலோ என்னமோ அவர்கள் எவ்வளவு பெரிய சாதனை படைத்தாலும் அதனை நமது சமூகத்தினர் கண்டு கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் RollBall அதாவது உருள்பந்து விளையாட்டு வீராங்கனைகளாகிய நாம் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை பதிவு செய்துள்ளதுடன் – நமது அணியைச் சேர்ந்த பல வீராங்கனைகள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அரங்கிலும் கால் பதித்துள்ளனர். ஆனால் இந்த விளையாட்டு பற்றி கூட எம்மில் பலருக்கு இன்னும் தெரியாது உள்ளது. நாம் விளையாடுவதற்கு ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லாது சிரமப்பட்டு கொண்டிருக்கின்றோம். விளையாட வருகின்ற அனைத்து வீராங்கனைகளுமே கஷ்டப்பட்ட குடும்ப பின்னணி உடையவர்களே. மற்றைய பகுதிகளில் விளையாட்டு வீராங்கனைகள் ஏதோ ஒரு வகையில் அடையாளம் காணப்பட்ட அவர்களுக்கான உதவிகள் செய்யப்படுகின்ற போதிலும் கூட எமக்கு கிடைக்கக்கூடிய சமூக மட்டத்திலான ஆதரவு என்பது மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. பயிற்றுவிப்பாளரும் – சில அதிகாரிகளும் மட்டுமே எங்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்துகிறார்கள். எங்களுடைய பல வீராங்கனைகளுக்கு விளையாடுவதற்கான சப்பாத்து கூட இல்லாத ஒரு துர்பாக்கிய சூழலே நிலவுகின்றது. விளையாடுவதற்கான ஒரு விளையாட்டு தளம் கிடையாது. விளையாடுவதற்கான பயிற்சிகளை கூட நாம் பாடசாலையின் பிரதான மண்டபத்திலேயே மேற்கொள்ள வேண்டிய சூழலே காணப்படுகின்றது. எனவே இந்த இடத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் போல எங்களை ஆதரிக்க கூடிய பலரை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்குமா இன்னும் பல மாணவிகளை சர்வதேச அரங்குக்கு எங்களால் கொண்டு செல்ல முடியும்.” என அவர்  குறிப்பிட்டிருந்தார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *