பல்கலைக்கழகம் முதல் பள்ளிக்கூடம்வரை வேலியே பயிரை மேய்கின்றது!!! : த ஜெயபாலன்


AA_Private_Tution_Burned_02யாழ்ப்பாணக் கல்லூரியின் கணித ஆசிரியர் சுதர்சனை, சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்காக விளக்கமறியலில் யூன் 28 வரை தடுத்து வைக்க யாழ் மல்லாகம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட ஆசிரியரை பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் யாழ் பல்கலைக்கழகமாக இயங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி இன்று மிக மோசமான காரணங்களுக்கு பெயர் பெற்ற கல்லூரியாக மாறியுள்ளது.

யூன் 14 அதிகாலை கல்லூரிக்கு அருகில் உள்ள ஏஏ என்ற தனியார் கல்வி நிலையம் முற்றாக எரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான விவகாரம் பெரு வெளிச்சத்திற்கு வந்தது.

குறித்த தனியார் கல்வி நிலையம் யாழ்ப்பாணக் கல்லூரியின் கணித ஆசிரியர்களில் ஒருவரான சுதர்சன் என்பவரால் நடத்தப்பட்டு வருகின்றது. இவரிடம் கபொத சாதாரண தரத்தில் கற்ற ஒரு மாணவியே இவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக அம்மாணவியால் குற்றம்சாட்டப்பட்டு உள்ளார். இம்மாணவியும் இக்கல்வி நிலையத்தில் கல்வி பயிலுகின்ற ஏனையவர்களும் பெரும்பாலும் யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்தவர்களே.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற் க்கு இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் சிலரின் பெற்றோர் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கி இருந்தனர். அவர்களின் தகவலின்படி யூன் 12ம் திகதி யாழ்ப்பாணக் கல்லூரியில் கபொத சாதாரணதரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருத்தி கர்ப்பமடைந்த செய்தி வெளியே தெரியவந்தது. மறுநாள் யூன் 13ம் திகதி யாழ்ப்பாணக் கல்லூரியின் கணித ஆசிரியரும் ஏஏ தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளருமான 41 வயதான சுதர்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

AA_Private_Tution_Burned_01சுதர்சன் கைது செய்யப்பட்ட மறுநாள் யூன் 14 அதிகாலை அவருடைய ஏஏ தனியார் கல்வி நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. கர்ப்பமடைைந்த மாணவியின் உறவினரே இத்தீவைப்பில் ஈடுபட்டு தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 18 மாதங்களாக சங்கானை பிரதேச சிறுவர் அலுவலகத்திற்கு பதின்ம வயது மாணவிகள் பல முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். அம்முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பெற்றோர்கள் ஒத்துழைக்காத நிலையில் சிறுவர் அலுவலர்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளில் மூன்று மாணவிகள் வழங்கிய வாக்கு மூலங்களின் அடிப்படையில் சுதர்சன் சந்தேகநபராக குற்றம் பதிவு செய்யப்பட்டு யூன் 15இல் மல்லாகம் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். மாணவிகள் மீது மேற்கொண்ட மருத்துவ பரிசோதணையின் அடிப்படையில் சுதர்சனை யூன் 28 வரையான இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அமெரிக்க்கன் சிலோன் மிஸ்ஸன் என்ற கிறிஸ்தவ அமைப்பினரால் 1871இல் ஆரம்பிக்கப்பட்ட வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுமை மிக்க அதிபர்களால் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. வடக்கின் கல்வி வளர்ச்சியில் அமெரிக்கன் சிலோன் மிஸ்ஸனின் பாத்திரம் அளப்பெரியது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தமிழர்கள் மத்தியில் மிகச் சிறந்த கல்விமான்களை உருவாக்கி உள்ளது. ஹன்டி பேரின்பநாயகம் சீலன் கதிர்காமர் போன்ற பலரை இக்கல்லூரி உருவாக்கி உள்ளது.

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது சிறிதுகாலமாகவே அங்கு ஒரு பேசுபொருளாக இருந்துள்ளதாகவும் அவ்வாறான ஆசிரியர்களை அணுகுவதற்கே மாணவிகள் தயங்கியதாகவும் தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் குறிப்பிட்ட ஆசிரியர் மாணவ மாணவிகளை தன்னுடைய ஏஏ தனியார் பாடசாலைக்கு வருவதற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அண்மையில் கணித பாடத்திற்கான தவணைப் பரீட்சைத்தாள் தயாரிப்புப் பொறுப்பை பெற்றிருந்த சுதர்சன் தனது தனியார் கல்வி நிலையத்தில் கற்கும் மாணவ மாணவிகளுக்கு அதன் மாதிரியை வழங்கி, அவர்களை மட்டும் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற வழியமைத்து இருந்தார். இக்குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படுவதாக இருந்த போதும் பின்னர் அது கைவிடப்பட்டது.

வேலியே பயிரை மேய்கின்ற இந்நிலைமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதல் பள்ளிக்கூடம் வரை பரவிக்கிடக்கின்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் இன்னமும் அங்கு கடமையாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்னமும் குறிப்பாக தமிழ்துறையில் மாணவிகள் விரிவுரையாளர்களை நெருங்குவதற்கு அஞ்சுகின்ற நிலைமை காணப்படுகிறது. இது தொடர்பான் விரிவான நூல் ‘யாழ் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ என்ற தலைபில் வெளிவந்திருந்தது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்கும் யாழ் பல்கலைக்கழகம் அங்கு கற்கும் மாணவிகளினை பாதுகாக்கத் தவறியுள்ளது. வாழ்நாள் பேராசிரியராக்கப்பட்ட பொன் பாலசுந்தரம்பிள்ளையின் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் சீரழிய ஆரம்பித்த பல்கலைக்கழகம் இன்னமும் முன்னைய எழுச்சியை நோக்கி திரும்ப முடியாத நிலையிலேயே இன்றும் உள்ளது. அதற்கான சீரிய தலைமை யாழ் பல்கலைக்கழகத்தில் இன்னமும் உருவாகவில்லை. அதனால் அங்கிருந்து உருவாக்கப்படும் ஆசிரியர்களும் பொறுப்பானவர்களாக இல்லை.

யாழ்ப்பாணக் கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இம்மாணவியின் துணிகரமான முயற்சியே தொடர் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டவரை நீதிமன்றின் முன் நிறுத்த உதவியது. வறணியில் அண்மையில் இடம்பெற்ற ஆசிரியரின் பாலியல் தொந்தரவை அம்பலத்துக்கு கொண்டு வந்தவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியே.

பெண்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் போன்ற விடயங்களில் குற்றவாளியை மறந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றத்தை சுமத்துகின்ற தமிழ் கலாச்சாரம் மாற்றப்படாதவரை இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகிகளை இனம்காண்பது மிகக் கடினம்.

உங்கள் கருத்து
 1. வட்டூரான் on June 17, 2018 3:38 am

  இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த தம்பிராஜா ஜெயபாலன் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள். பாலியல் துஷ்பிரயோகம் மாத்திரமன்றி வேறு பல துஷ்பிரயோகங்களும் யாழ்ப்பாணக் கல்லூரியில் அண்மையிலே இடம்பெற்று வருகின்றன. நிலைமை கட்டுமீறிச் செல்வதனை அடுத்து 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பாடசாலைக்கு அனுப்பும் நிதியினை ஒவ்வொரு காலாண்டுக்கும் 20% அமெரிக்காவில் இருக்கும் தர்மகர்த்தா சபையினர் குறைத்து வருகின்றனர். இது தொடர்பாக தர்மகர்த்தா சபையினரால் பல்வேறு கடிதங்கள் கல்லூரி ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் தியாகராஜாவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டின் இறுதியில் கல்லூரியின் சீர்கேடுகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி யாழ்ப்பாணக் கல்லூரியில் இருந்து பயன் பெறும் சமூகங்களைச் சேர்ந்த 200பேர் கடிதம் ஒன்றினை தர்மகர்த்தா சபையினருக்கு அனுப்பிவைத்தனர். இந்த ஆண்டும் இந்த முறைகேடுகளை விசாரிக்கும் படியும் உரிய மாற்று நிருவாகக் கட்டமைப்பினை ஏற்படுத்த உதவும்படியும் கோரி கல்லூரியின் பழைய மாணவர்கள் பலர் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றினை தர்மகர்த்தா சபையினருக்கு அனுப்பினர். இந்த விபரங்கள் யாவும் விரிவான அறிக்கைகளின் வாயிலாக கொழும்பு ரெலிகிராஃபிலே வெளியாகி இருக்கின்றன. இணைப்புக்கள் யாவும் கீழே வழங்கப்படுகின்றன:

  அறிக்கை 1: https://www.colombotelegraph.com/index.php/cut-on-the-funds-to-jaffna-college-and-uduvil-girls-college-trustees-note-serious-irregularities-in-administration/

  அறிக்கை 2: https://www.colombotelegraph.com/index.php/jaffna-college-trustees-firm-in-their-demands-as-alumni-seek-stronger-intervention/

  அறிக்கை 3: https://www.colombotelegraph.com/index.php/administrative-malpractices-continue-at-jaffna-college-despite-fund-cuts-by-trustees/

  அறிக்கை 4: https://www.colombotelegraph.com/index.php/locals-petition-trustees-over-irregularities-at-jaffna-college/

  அறிக்கை 5:https://www.colombotelegraph.com/index.php/no-pre-eminent-place-for-jdcsi-alumni-of-jaffna-college-demand-diversification-of-board-membership/

  இரண்டாவது அறிக்கை சமகளம் இணையத்தில் தமிழில் வெளியாகி இருந்தது. அதற்கான இணைப்பு: http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/

  தமிழ் ஊடகங்கள் பாடசாலையின் நிருவாகிகளுக்கு இருக்கு அரசியற் செல்வாக்குக் காரணமாக இந்த விடயங்களினை வெளிப்படுத்த தயங்குகின்றன. உங்களது இணையத்தளம் போன்றனவே இந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து யாழ்ப்பாணக் கல்லூரியில் நீதியும் நியாயமும் உறுதிப்படுத்தப்பட உதவ வேண்டும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு