இந்த யுகத்தின் தேவை சமயக் கல்வியே – ஜனாதிபதி


downloadஇந்த யுகத்தின் அவசியமாக உள்ள சமயக் கல்வியை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மனிதன் என்ற வகையில் வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கு சமயக் கல்வியின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

திஸ்ஸமகாராம வரலாற்று முக்கியத்துவம் மிக்க உத்தகந்தர புராதன ரஜமகா விகாரையில் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவ மிக்க உத்தகந்தர ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய தெனகம தம்மதஸ்சி நாயக்க தேரருக்கு, சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ ரேவத கௌரவ பட்டத்துடன், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் ருகுணு மாகம்பத்துவே உப தலைமை சங்கநாயக்க தேரர் பதவியை வழங்குவதை முன்னிட்டு இந்த புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தங்க வேலிக்கான தங்க தூண் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அறநெறி பாடசாலை கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, வெஹர விகாரை அபிவிருத்திக்காக அரசாங்கம் ஆரம்பித்த பௌத்த புனருத்தாபன நிதியத்தினூடாக குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கு விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

விகாரைகளின் அபிவிருத்திக்கும் பிக்குகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் பௌத்த சாசன சேவைகளை பலப்படுத்துவதற்கும் எவ்வித குறைபாடும் இன்றி அதிகபட்ச அனுசரணையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சங்கைக்குரிய தெனகம தம்மதஸ்சி நாயக்க தேரர் சாசனத்திற்கும் நாட்டுக்கும் மேற்கொண்டுள்ள பணிகளை ஜனாதிபதி பாராட்டினார். வரலாற்று முக்கியத்துவமிக்க உத்தகந்தர ரஜமகா விகாராதிபதி, சமாதான நீதிவான் சங்கைக்குரிய தெனகம தம்மதஸ்சி 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி தேரர் ஆனார். அப்போது முதல் இது வரையில் விகாரையின் மேம்பாட்டுக்கும் சாசனத்திற்கும் மிகப்பெறும் சேவைகளை மேற்கொண்டுள்ளதுடன், ஜப்பான், இந்தியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று சமய போதனைகளில் ஈடுபட்டு நீண்ட அனுபவத்தை பெற்றவர்.

நாயக்க தேரருக்கான கௌரவத்திற்குரிய ஆவணத்தை ஜனாதிபதி வழங்கி வைத்தார். வரலாற்று முக்கியத்துவமிக்க உத்தகந்தர ரஜமகா விகாரையின் பிரஜா பூமி உறுதியையும் ஜனாதிபதி சங்கைக்குரிய தெனகம தம்மதஸ்சி நாயக்க தேரரிடம் கையளித்தார். தேரர் அவர்கள் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்தை பிரிவின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி அனுநாயக்க தேரர் இந்த புண்ணிய நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பெருந்தொகையான மக்களும் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு