நியூயோர்க் டைம்ஸ் ஊடகவியலாளரின் டுவிட்டர் பதிவு தொடர்பில் பிரதி அமைச்சரின் கருத்து
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் மரியா அபி ஹபீப் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திடம் இருந்து பணம் பெற்றதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளரின் டுவிட்டர் பதிவு தொடர்பில் பிரதி அமைச்சரிடம் நாங்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தலுக்காக 7.6 மில்லியன் டொலர் நிதியை சைனா ஹாபர் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கில் இருந்து பணம் பெற்றதாக கடந்த 26 ஆம் திகதி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தான் குறித்த ஊடகவியலாளருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த ஊடகவியலாளர், பிரதி அமைச்சருடன் தான் தொலைபேசியில் உரையாடியதை அவர் வேறுவிதமாக தெரிவிப்பதாக நேற்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அத்துடன் தனது பத்திரிகை நிறுவனத்திடம் தவிர்ந்து வேறு யாரிடம் குறித்த செய்தி தொடர்பில் தகவல்களை வழங்கவில்லை எனவும் அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் குறித்த ஊடகவியலாளரின் கருத்து தொடர்பில் நாங்கள் மீண்டும் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தோம்.
இதன்போது தான் குறித்த ஊடகவியலாளருடன் கலந்துரையாடியதாகவும் அதனை தவிர வேறு எதையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
உங்கள் கருத்து