பௌதீக அபிவிருத்தி போன்று ஆன்மீக செயற்திட்டங்களும் நாட்டிற்கு முக்கியம்


maithri20151003பௌதீக ரீதியில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான அபிவிருத்திப் பணிகளைப் போன்றே ஆன்மீக நற்பண்புகளை வளர்க்கக்கூடிய விரிவான செயற்திட்டங்களும் நாட்டிற்கு அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

சமய சூழலிலிருந்து விலகியுள்ள மக்களை மீண்டும் சமய வாழ்வியலை நோக்கி வரச்செய்து அன்பு, கருணை மற்றும் மனிதாபிமானத்துடன் விழுமியப் பண்புகளைப் பாதுகாக்கும் சமூகத்தை நாட்டில் கட்டியெழுப்ப சகல தரப்பினரும் தமது பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலன்னறுவை, புலஸ்திகம ஸ்ரீசாந்தி நிக்கேத்தனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாதுகோபுரத்தை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று (08) பிற்பகல் கலந்துகொண்டு ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி முதலில் சமய அனுஸ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தாதுகோபுரத்தை திறந்து வைத்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்திற்கு முதலாவது மலரஞ்சலியையும் ஜனாதிபதி செலுத்தினார்.

அதன்பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் புதிய தாதுகோபுரத்தை நிர்மாணிப்பதற்கு நிதி உதவியளித்த நியு ரத்ன குழும நிறுவனத்தின் லங்கேஸ்வர மித்ரபாலவுக்கு ஜனாதிபதி நினைவுப்பரிசு வழங்கினார்.

பொலன்னறுவை இசிபத்தனாராமாதிபதி வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களின் தலைமை சங்கநாயக்கர் வண. உடகம ஸ்ரீ தம்மானநந்த தேரர், அத்தனகல்ல ரஜமகா விகாராதிபதி வண. பன்னில ஆனந்த தேரர், ஸ்ரீ சாந்தி நிக்கேத்தனாராமாதிபதி வணக்கத்திற்குரிய தொடம்வல தம்மரத்தன நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பெரும்பாலான பக்தர்களும் இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் ´நில செவன´ செயற்திட்டத்துடன் இணைந்ததாக பொலன்னறுவை மாவட்டத்தில், லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவில் 133 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவான அல்ஹிலால்புர கிராமத்திலும் 142 ஆம் இலக்க கேகலுபுர கிராமத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ´நில செவன´ நிலையங்களை நேற்று பிற்பகல் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

வினைத்திறனான, நம்பிக்கையான மற்றும் தரமான அரச சேவையை கிராம மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் அலுவலக செயற்பாடுகளுக்காக இந்த சேவை நிலையங்கள் ஒவ்வொன்றும் சுமார் 20 இலட்ச ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 05 ´நில செவன´ நிலையங்கள் இதனுடன் இணைந்ததாக நேற்றும் நேற்று முன்தினமும் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி சிசிர கொடிகார, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு