வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை; வீதி பாஸ்களும் ரத்தாகும்- அமைச்சர் டளஸ் எச்சரிக்கை


dalas_alahapperuma.jpgதனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டிகள் மீது கல்லெறிந்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பொது மக்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்கிய தனியார் பஸ் வண்டிகளின் பாதை அனுமதிப் பத்திரமும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை தனியார் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே குறிப்பிடுகையில்,

வேலை நிறுத்த நடவடிக்கையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாகாண தனியார் போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பஸ் ஊழியர்களின் ஒழுக்க விதிகள் சம்பந்தமான வேலைத் திட்டத்தை இடை நிறுத்துமாறு கோரி பஸ் ஊழியர்களில் சிறு தொகையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் பெரும்பாலான தனியார் பஸ் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றவில்லை.

கடந்த 31 ஆம் திகதி காலை முதல் கொழும்பிலிருந்து காலி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, கண்டி, கதிர்காமம், பொலன்னறுவை, இரத்தினபுரி, பதுளை, சிலாபம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கான தனியார் பஸ் சேவை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தம் நேற்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்றது. காலி, மாத்தறை, உட்பட பல பிரதேசங்களிலிருந்து தனியார் பஸ் வண்டிகள் நேற்று கொழும்புக்கான சேவையில் ஈடுபட்டன. 103 ஆம் இலக்க நாரஹென்பிட்டி மற்றும் களனி விகாரை, 135 ஆம் இலக்க கொஹுவல தனியார் பஸ் வண்டிகளும் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டன.

இதன் காரணமாக மாகாணத்தின் பல பிரதேசங்களில் நிலவும் நிலைமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு மூன்று முறை கோரிக்கை விடுத்த போதிலும் நேற்று நண்பகல் வரையும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஸ்டான்லி பெர்னாண்டோ கூறினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு