வவுனியாவில் காடழிப்பை அம்பலப்படுத்திய ஆசிரியர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பிய கிராமசேவகர்!

காடழிப்பை வெளிக் கொண்டு வந்த ஆசிரியருக்கு எதிராக போலி முகநூல் மூலம் அவதூறை ஏற்படுத்தியது கிராம சேவகர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் வவுனியா காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவிற்கு சொந்தமான பகுதியில், கிராம அலுவலர் உட்பட்ட சிலர் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனை அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தடுத்து நிறுத்தியதுடன், குறித்த விடயம் தொடர்பில் அரச அதிபர், வவுனியா பிரதேச செயலாளார், வனஇலாகா திணைக்களம், காவல்துறையினர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதுடன் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.

அதனையடுத்து, கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பாக செயற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கிராம அலுவலர் ஒருவர் தொலை பேசியில் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதுமட்டுமன்றி, குறித்த ஆசிரியருக்கு எதிராக போலி முகநூல்களில் அவதூறும் பரப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர் வவுனியா தொழில்நுட்ப குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், கொழுப்பு இலத்திரனியல் குற்றவியல் பிரிவுக்கும் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா தொழில்நுட்ப குற்றத்தடுத்து பிரிவு காவல்துறை குறித்த போலி முகநூல்கள் கிராம அலுவலர் ஒருவருடையது எனத் தெரிவித்துள்ளதுடன், அவரை அழைத்து வாக்கு மூலத்தையும் பெற்றுள்ளனர்.

அதேவேளை, இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வனஇலாகா திணைக்களத்தாலும் கிராம அலுவலருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், குறித்த அலுவலர் தொடர்பில் பிரதேச செயலாளர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதே நேரம் குறித்த ஆசிரியர் திருமகன் என்பவர் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளை கண்டித்து குறித்த ஆசிரியர் கல்வி கற்பிக்கும் வவுனியா – தரணிக்குளம் கணேஷ்வரா வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்றை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *