அமைச்சரவையில் கண்ணை திறந்துகொண்டிருக்கும் போதே ஏமாற்றி விடுகின்றார்கள்- அமைச்சர் மனோகணேசன்


IMG_2862பரீட்சைக்கு எப்படி மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்கின்றார்களோ அப்படி நாமும் அமைச்சரவை பத்திரத்தை படித்து எங்களை தயார்ப்படுத்திக்கொண்டு செல்ல வேண்டும். இல்லையெனில் அமைச்சரவை கூட்டத்தில் கண்ணை திறந்துகொண்டிருக்கும் போதே எங்களை ஏமாற்றி விடுகின்றார்கள்.என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண அலுவலகத்தை  இன்று 30-07-2018  கிளிநொச்சியில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
அமைச்சரவை கூட்டத்தில் கண்ணில் வெண்ணெய் விட்டு காதை கூர்மையாக்கிக்கொண்டு இருக்க வேண்டும். அத்தோடு மூளையை  தெளிவாக வைத்திக்கொண்டிருக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. எனக்கு மூன்று மொழிகளும் தெரியும் என்பதனால் எனது காலை வாரும் வேலையும் எவரும் செய்ய முடியாது. எனத் தெரிவித்த அமைச்சர்
வடக்கு கிழக்கு தெற்கு மலையகம் என மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துதான் அரசை உருவாக்கினார்கள் ஆகவே இந்த அரசாங்கம் எப்போதும ் சிங்கள அரசாங்கமாக இருக்க முடியாது. ஜதேக அரசாங்கமாக இருக்க முடியாது சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமாக இருக்க முடியாது  இது எங்கள் அரசாங்கம் நாங்கள் உருவாக்கிய அரசாங்கம் ஆகவே இந்த அரசாங்த்திடம் இருந்த உரிய வளப் பங்கீட்டை பெற்றுக்கொள்ளும் உரிமை  தமிழ் மக்களிடம் இருக்கிறது.
ஆனால் தமிழ் மக்களின் பிரதேசங்களில் வளப் பங்கீடுகள் இல்லை இது பிழையான காரியம்  ஆகவே ஏன் இந்த நிலைமை என்று பார்த்து அந்த வளப் பங்கீட்டை பெற்றுக்கொள்ளும் கடப்பாடு தமிழ் மக்களிடம் இருக்கிறது. இந்த கடமை தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருக்கிறது அவர்கள் அதனை செய்ய வேண்டும். இல்லையெனில் தேசிய ஒருமைப்பாடு தேசிய ஜக்கியம் வந்துவிடாது வளப்பங்கீட்டில் சமத்துவம் இல்லாது விட்டால் எப்படி ஜக்கியம் வரும்?  ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே ஒரு போதும் சமத்துவம் வராது எனவே சமத்துவம் இல்லாது விட்டால் ஜக்கியம் வராது.
நாளை(31-07-2018) அமைச்சரவை கூட்டத்தில் வீடு கட்டுவதற்குரிய விடயத்தில் எனது அமைச்சுக்கு இருக்கும் அதிகாரத்தை வெட்டிக் குறைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று கொண்டுவரப்படுவதாக நான் அறிகின்கிறேன். அதனை நான் விடமாட்டேன் அதனை தடுத்து நிறுத்துவேன். மேலும் இந்த விடயத்தில் எனக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் தேவை இங்கே தமிழரசு கட்சியின் தலைவர்  அண்ணன் மாவை மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன்   ஆகியோர் இருக்கின்றனர்  அவர்களிடம்  கோருகின்றேன். தயவு  செய்து அதிகாரிகளை நம்புவதை விட உங்கள் நண்பன் மனோகணேசனை நம்புங்கள் சிலவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சில காரணங்களுக்கா  என்னை விட சில  அதிகாரிகளை நம்புகின்றார்களோ என்ற சந்தேகம் எனக்குள் வந்திருக்கிறது எனவே இதனை தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினர் மனதில் கொள்ள வேண்டும்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு