“ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் வேண்டுமாயின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  வாபஸ் செய்யப்பட வேண்டும்.” –

“ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐராேப்பிய ஒன்றியத்தினால் நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி, சலுகை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதனை மீண்டும் பெற்றுககொள்ள நாங்கள் விண்ணப்பிக்கவேண்டும்.

அதன் பிறகு எந்த நாடுகளுக்கு இதனை வழங்குவது என ஐராேப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும். தற்போது  ஆசியாவில் இலங்கை. பாகிஸ்தான் உட்பட 4 நாடுகளுக்கே இந்த ஜீ.எஸ்.பி சலுகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஜீ.எஸ்.பி. சலுகையை பெற்றுக்கொள்ள ஐராேப்பிய ஒன்றியத்திடம் 27 இணக்கப்பாடுகள் இருக்கின்றன. அதனை அந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

அந்த இணக்கப்பாடுகளில் பிரதான விடயமாக இருப்பது, மனித உரிமை, தொழிலாளர் உரிமை, நல்லாட்சி மற்றும் சூழலை பாதுகாப்பது தொடர்பானதாகும். அதில் பிரதானமாக இருப்பது தேர்தல் உரிமையாகும்.

தேர்தல் நடத்தாமல் இருப்பது மக்களின் வாக்குரிமையை மீறும் பாரிய விடயமாக கருதப்படுகிறது. அதனால் மக்களின் ஜனநாயக உரிமையை விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த விடயம்தான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம். அதனால் அரசாங்கம் எந்த தீர்மானத்தை மேற்கொண்டாலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் இலங்கைக்கு  ஜீ.எஸ்.பி. சலுகை மீண்டும் கிடைக்கப்போவதில்லை.

ஏனெனில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பல, மக்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் மீறப்படுகின்றன.

மக்களின் உள்ளத்தில் இருக்கும் விடயங்களை வீதிக்கிறங்கி அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இவ்வாறானதொரு செயலை பயங்கரவாத செயல் என தெரிவித்து, அவர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பிரப்பிப்பதை ஐராேப்பிய ஒன்றியம் அனுமதிப்பதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஓமான் முதலீட்டாளர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர் இப்போது தனது தொழிற்சாலையை மூடிவிட்டு செல்லப்போவதாக தெரியவருகிறது.

இவ்வாறு இருக்கையில்  முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா? இந்த தொழிற்சாலை மூடப்பட்டால் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. என்றாலும் ஓமான் முதலீட்டாளருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் இந்த நாட்டின் சட்டம் தொடர்பில் ஐராேப்பிய ஒன்றியத்துக்கு நம்பிக்கை இல்லை, மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பில் நம்பிக்கை இல்லை. கட்டளையாளர் போல்  நாட்டை நிர்வகிக்க நடவடிக்கை ஜீ.எஸ்.பி. சலுகை எமக்கு கிடைக்கப்பாேவதில்லை.

2010இலும் எமது ஜீ.எஸ்.பி. சலுகையை இல்லாமலாக்கிக்கொண்டது இந்த அரசாங்கமாகும். ஜீ.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனால் 630 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படும் என்றும் எமது வறுமை நிலை மேலும் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனால் அரசாங்கம் ஜீ.எஸ்.பி சலுகையை பாதுகாத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *