இலங்கை நாட்டை முடமாக்கிக்கொண்டிருப்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல – அரச அதிகாரிகளும் தான் !

இலங்கை அண்மையில் எதிர்கொண்டிருந்த மிகப் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடிக்கும் – இலங்கையில் இன்னமும் மில்லியன் கணக்கிலான  மக்கள் ஏழைகளாகவே இருப்பதற்கும் இலங்கையின் அரசு நிறுவனங்கள் முறையாக இயங்காமையே முக்கியமான காரணமாகும். இதனை அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்ட இரண்டு விடயங்களின் ஊடாக தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

01. மக்களின் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி.

02. பாவிக்க கூடிய நிலையிலும் யாருக்கும் கையளிக்கப்படாத நிலையில் கிளிநொச்சியில் தேங்கி கிடக்கும் உழவு இயந்திரங்கள்.

அரிசி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசாங்கத்தின் உதவியோடு இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டிருந்தது.  எனினும் பல இடங்களில் இவை மக்களுக்கு விநியோகிக்கப்படாது பதுக்கப்பட்ட தன்மையினை காண முடிந்தது. அவ்வாறு பதுக்கப்பட்ட அரிசி புழு மொய்த்தும் வண்டுகள் நிறைந்ததாகவும் காணப்பட்ட நிலையில் பல இடங்களில் பாவனைக்கு உதவாது குப்பையில் கொட்டப்பட்டிருந்தன. இவற்றை முறையாக கண்காணித்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் கொடுக்காதுவிட்டமையே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்திருந்தது. வவுனியாவின் ஆசி குளம் கிராம உத்தியோகத்த பிரிவில் உள்ள அரச கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழ்நாடு அரசினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 1272 கிலோ அரிசி பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இதனைப் போலவே அரசு அதிகாரிகளின் அசமந்த போக்கினால் மக்களுக்கு சென்று சேர வேண்டிய அன்பளிப்புகள் முறையாக மக்களின் கைகளுக்கு போய் சேராத ஒரு நிலை இன்று வரை இலங்கையின் சாபக்கேடாக தொடர்கிறது.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் சமநிலை சேவைகள் நிலையம் ஒன்றில் இயங்க முடியாத நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட உழவு இயந்திரங்கள்  இயங்க முடியாத நிலையில் கமநல சேவைகள் அறையினுள் போட்டு மூடப்பட்டிருப்பதான புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டிருந்தன.

(குறித்த சமூக வலைத்தள பதிவை காண)

https://www.facebook.com/100001431522803/posts/6435197643204556/?mibextid=QyDEvNoB73lyOOK6

குறித்த சமூக வலைதள பதிவுகளை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சியில் உள்ள குறித்த கமநல சேவைகள் நிலையத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மிக விரைவில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தனர். அதுமட்டுமன்றி ஜனாதிபதி செயலகத்திலிருந்து குறித்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது இருந்தமைக்கான மேலதிக விளக்கங்கள் கோரப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

இதனை போலவே வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து சுமார் 12 ஏக்கர் காட்டை அழிக்க துணை போன வவுனியா கட்டையர்குள பகுதி கிராம உத்தியோகத்தர் தொடர்பான விவகாரம், வடக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மண் அகழ்வை கண்டும் காணாது இருக்கும் அரசு உத்தியோகத்தர்கள் , கம்பளையில் பிரதேச அரச வைத்தியசாலையில் ஏற்கனவே எழுதப்பட்ட மருந்துச்சிட்டையினை மீள பயன்படுத்தியதால் 7 வயது குழந்தை பலியான சம்பவம் என அரச அதிகாரிகளின் அசமந்த போக்கை தினசரி இலங்கையர்கள் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக சேவையாற்றும் சில அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் வாங்கும் சம்பளத்துக்காக சரி உண்மையாக வேலை செய்வதில்லை. காலை எட்டு மணிக்கு வேலை ஆரமப்மாகும். மக்கள் காத்திருப்பது கணக்கேயில்லாமல் சரியாக 10-11 மணிக்கிடையில் தேநீர் இடை்வேளை, சரியாக 1 மணிக்கு மதிய உணவு மதியம் 3,  4 மணிக்கு அலுவலகம் மூடப்படும். பின்பு சனி,ஞாயிறு முழுமையான விடுமுறை . இதறகிடையில் சம்பளம் போதாது – சம்பள உயர்வு வேண்டும் என போராட்டங்கள் வேறு.

மக்களுக்காக வழங்கப்படுகின்ற இந்த இலவசமான உதவி திட்டங்களை கூட மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்கின்ற அளவிற்கு இந்த அரச அதிகாரிகள் நிலை இருக்கின்றது. அலுவலகங்களில் கூட இலங்கையின் அரசு அதிகாரிகள் பெரிதாக வேலை செய்வது கிடையாது. இன்னமும் பழமையான ஆவணப்படுத்தல் முறைமைகளை கையில் வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்றுவதனை பெரிய ஒரு தொழிலாக அடையாளப்படுத்தி மக்களின் உழைப்பை இந்த அரசு அதிகாரிகள் சுரண்டி கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுக்காக இவர்கள் எதனையும் ஆக்கபூர்வமாக செய்தது கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆகச் சிலரை தவிர அரசு உத்தியோகத்தினை மக்களுக்கான சேவையாக வழங்குகின்ற திணைக்களங்களின் எண்ணிக்கை கூட இலங்கையில் குறைந்துவிட்டது. சாதாரணமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழாக தகவலை கோருகின்ற மனுக்களுக்கு கூட சரியான பதில் கிடைப்பது இல்லை. சரியான பதிலை வழங்கி விட்டால் தங்களுடைய உண்மையான நிலை தெரிந்து விடுமோ என்ற அச்சம் தான் இதற்கான உண்மையான காரணம்.

அரசாங்கங்களும் – அரசியல்வாதிகளும் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறிக் கொண்டிருக்க போகிறார்கள். அவர்களை நொந்து எந்தப் பயனுமே இல்லை. இந்த இலங்கை நாட்டை முடமாக்கியதில் ஆகப்பெரிய பங்களிப்பு வாழ்நாள் முழுவதும் அரசு அதிகாரிகள் என்ற பெயரில் கதிரைகளை தேய்த்துக் கொண்டிருக்கும் இந்த அரசு அதிகாரிகளுடையது. நாம் அதிக கேள்வி கேட்க வேண்டியது இந்த அரசு அதிகாரிகளை தான்.

அரச அதிகாரிகள் முறையாக செயற்படாத வரையில் இலங்கை மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *