ஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்தால் எதிரணி உருவாகலாம்!!! : த கோபாலகிருஸ்ணன் (கிழக்குத் தமிழர் ஒன்றியம்)


Gopalakrishnan_Tகடந்த 22.08.2018 அன்று மட்டக்களப்பில் கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரிடத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய நிகழ்வு, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான த. கோபாலகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அது சம்பந்தமாக கிழக்கின் குரலாக வெளிவரும் அரங்கம் பத்திரிகை அவருடன் மேற்கொண்ட நேர்காணல்.

அரங்கம் : கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தில் சந்திக்க வைத்த வரலாற்று நிகழ்வொன்றினைக் கிழக்குத்தமிழர் ஒன்றியம் சாதித்துள்ளது. இச்சந்திப்பின் நோக்கம் என்ன?

கோபாலகிருஸ்ணன் : எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒரே அணியாகப் போட்டியிடுவது சம்மந்தமாக ஏற்கனவே அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தில் சந்திக்க வைத்துஇ திறந்த கலந்துரையாடலை மேற்கொண்டுஇ மக்களுக்கு உகந்ததான ஒருமித்த முடிவொன்றை எடுப்பதற்கான அதாவது முரண்பாடுகளுக்குள்ளும் ஓர் உடன்பாட்டைக் காணுவதற்கான முயற்சியே இது.

அரங்கம் : இது சாத்தியமாகுமா?

கோபாலகிருஸ்ணன் : கொள்கைகள் – கோட்பாடுகள் – சித்தாந்தங்கள் – கட்சிகள் – சின்னங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான் என்பதை மனம் கொண்டால் முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணமுடியும். அத்தகைய மனப்பக்குவம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைப்பீடங்களுக்கு ஏற்படவேண்டும்.

அரங்கம் : கட்சிகள் ஒன்றிணைவதாயின் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது?

கோபாலகிருஸ்ணன் : பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணையச் சம்மதிக்கின்ற கட்சிகளையெல்லாம் ஒரு கூட்டு அணியாக ஒன்றிணைத்துஇ அந்தக் கூட்டு அணியை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்துஇ ஒரு பொதுச்சின்னம் ஒன்றினைப் பெற்றுஇ செயற்படமுடியும். அப்பொதுச் சின்னம் தற்போதுள்ள தனிப்பட்ட கட்சியொன்றின் சின்னமாக இருக்க முடியாது.

அரங்கம் : இதனால் இணைந்த வடக்கு கிழக்கு எனும் தமிழர்களின் கொள்கை பாதிப்படையாதா?

கோபாலகிருஸ்ணன் : இல்லை. கிழக்குத் தமிழர் ஒன்றியம் தனது அரசியல் நிலைப்பாட்டினைத் தனது வேலைத்திட்டத்தில் தெளிவாகக் கூறியுள்ளது. அது இதுதான்.

இப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக அதிகுறைந்த பட்சம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்து ஒரே அலகாக அமைந்த – நிர்ணய உரிமையுடன் கூடிய – போதிய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பெற்ற ஒற்றை மொழிவாரி மாநில சுயாட்சி அலகையே கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஆதரிக்கும். ஆனால் அத்தகைய தீர்வு எட்டப்படும் வரைஇ வடமாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்தாத களநிலையைக் கருத்தில் கொண்டுஇ கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சமூகஇ பொருளாதார பிரச்சினைகளைக் கையாளும் வகையில் பொருத்தமான ‘அரசியல் வியூகம்’ களைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் வகுத்து அதனை வினைத்திறனுடன் செயற்படுத்தும். இந்த விடயம் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பெறும்.

அரங்கம் : இத்தகைய கூட்டு அணிக்குத் தலைமைவகிப்பது யார்?

கோபாலகிருஸ்ணன் : பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணையும் கட்சிகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையான பிரதிநிதிகளும் கிழக்குத்தமிழர் ஒன்றியப்பிரதிநிதிகளும் புரிந்துணர்வுடன் கூடிய கலந்துரையாடலை மேற்கொண்டுஇ உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளுக்கமையத் தலைவரைப் பின்னர் தேர்ந்தெடுப்பர். அதையிட்டு இப்போது அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அரங்கம் : இதன் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

கோபாலகிருஸ்ணன் : கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஏற்கனவே அதன் சமூக பொருளாதார அரசியல் வேலைத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. அதில் அரசியல் ஒரு அங்கம் மட்டுமே. எனினும் பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணையும் கட்சிகளுக்கான பொது வேலைத்திட்டம் பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பெற்று மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பெறும்.

அரங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைக்கும் நிலைப்பாட்டிற்கும் ஆதரவளிக்க முன்வந்துள்ளன என்றே அறிக்கைக் கிடைக்கிறது. பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைவதற்குத்தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வராது விட்டால் கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?

கோபாலகிருஸ்ணன் : சிக்கலான, ஆனால் தேவையான கேள்வி.

இப்போது உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்குள்ளே மிகப்பழையது அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் 1944 இல் ஆரம்பித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகும். அதன் சின்னம் ‘சைக்கிள்’ ஆகும். அக்கட்சியிலிருந்து பிரிந்துவந்த அமரர்.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) 1949 இல் ஆரம்பித்ததே இலங்கைத் தமிழரசுக்கட்சி. அதன் சின்னம் ‘வீடு’. சுமார் கால்நூற்றாண்டு காலம் இவ்விரு கட்சிகளும் கீரியும் பாம்பும் போலவே அரசியல் செய்தன.

ஆனால் 1972 ஆம் ஆண்டு பிரதமர் அமரர்.சிறிமாவோ பன்டாரநாயகா தலைமையிலான அரசாங்கம் கொணர்ந்த தமிழர்களின் அடிமைச் சாசனம் என வர்ணிக்கப்பெற்ற குடியரசு அரசியலமைப்பைத் தொடர்ந்து தமிழ் மக்களின் ஐக்கியம் கருதியும் அரசியல் தேவை கருதியும் இரண்டு கட்சிகளும் இனைந்து பொதுவான ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ என்ற அரசியல் கூட்டமைப்பும் அதன் பொதுவான சின்னமான ‘உதய சூரியன் சின்னமும் 1976ல் உருவாகின. இவ்விரு தலைவர்களும் தத்தம் கட்சிகளையும் சின்னங்களையும் தூக்கிப்பிடிக்காமல் பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்தனர்.

அமரர் எஸ்.ஜெ.வி.செல்வநாயகம் அவர்கள் அதுவரை கடைப்பிடித்த சமஸ்டிக்கொள்கையையும் அமரர். ஜி.ஜி.பொன்னம்பலம் அதுவரை கடைப்பிடித்த ஒற்றையாட்சி கொள்கையையும் கைவிட்டுத்தான் புதிய தமிழீழத் தனி நாட்டுக் கொள்கையினை ஏற்றுக்கொன்டிருந்தனர். இவ் அரசியல் நிகழ்வு தற்போதுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் மனம் கொள்ள வேண்டியதொரு முன்னுதாரணமாகும். எனவே இன்றைய கிழக்கு மாகாணத்தின் அரசியல் களநிலையைக் கருத்தில் கொண்டு சம கால அரசியல் தேவை கருதி தத்தம் அரசியல் கட்சிகளின் கருத்தினால் முரண்பாடுகளையும் கட்சிகளில் உள்ள தனிநபர் முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டுஇ கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உருவாக இருக்கிற சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த கூட்டணியின் பொதுச்சின்னத்தின் கீழ் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உற்பட அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும். இந்த இலக்கினை அடைவதற்கு கிழக்கு மாகாண தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் திரளுகின்ற போதுஇ தலைவர்களும் கட்சிகளும் மனம் மாறுவார்கள்.

கட்சிகளும் சின்னங்களும் மக்களுக்கானவையே தவிர கட்சிகளுக்கும் சின்னங்களுக்கும் மக்கள் அடிமைப்படமுடியாது. எனவே கிழக்கிலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலுள்ள பொது அமைப்புகளும்இ ஆன்மீகவாதிகளும்இ கல்விமான்களும்இ புத்திஜீவிகளும்இ துறைசார் நிபுணர்களும்இ தொழல்வான்மையாளர்களும்இ கலை – இலக்கிய – சமூக – அரசியல் செற்பாட்டாளர்களும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர் சமூகங்களும், வர்த்தக நடவடிக்கையாளர்களும் எனச் சமூகத்தின் அத்தனை தரப்புக்களும் கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உருவாகவுள்ள அரசியல் கூட்டு அணியின் கீழும்இ அக் கூட்டு அணியின் பொதுச் சின்னத்தின் கீழும் ஒன்றிணையும்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உற்பட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளினதும் தலைமைப் பீடங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அப்படியொரு நிலையில் மக்களின் அபிலாஷையைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் புறந்தள்ள முடியாது. எனவே இறுதிக்கட்டத்திலாவது யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு பொதுச்சின்னத்தின் கீழ் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணைந்து கொள்ளும் எனக் கிழக்குத்தமிழர் ஒன்றியம் நம்பிக்கை கொண்டுள்ளது.

அரங்கம் அப்படியான நிலையிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மனம் மாறவில்லையானால் கிழக்கு தமிழர் ஒன்றியம் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?

கோபாலகிருஸ்ணன் : அப்படியான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இலக்கிற்கு குறுக்கே நில்லாது. 2008ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்றது போல் விலகி வழிவேண்டும் என்பதே கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உவத்திரம் தராமலாவது இருக்கலாமல்லவா?

அரங்கம் : அப்படியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வழிக்கு வரவில்லையாயின்…..?

கோபாலகிருஸ்ணன் : விடமாட்டீர்கள் போலிருக்கின்றது. அப்படியாயின் பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைய முன்வருகின்ற கட்சிகளுடன் கலந்துரையாடிஇ தீர்க்கமான முடிவொன்றினை கிழக்கு தமிழர் ஒன்றியம் எடுக்கும். அம்முடிவினை மக்களிடம் கொண்டு செல்வோம். மக்கள் முடிவெடுப்பார்கள். இது தவிர்க்கமுடியாததாகும். தீராத நோய் ஒன்றை குணப்படுத்த அறுவை சிகிச்சைதான் ஒரே ஒரு வழி என்றாகிவிட்டால் அதனை மேற்கொள்வதுதானே விஞ்ஞானபூர்வமான செயற்பாடாகும். அரசியல் என்பது ஓர் சமூக விஞ்ஞானமாகும். அதில் பரிசோதனை முயற்சிகள் அவசியமானதும் தவிர்க்கமுடியாததுமாகும்.

(நன்றி: அரங்கம்)

உங்கள் கருத்து
  1. Puthumaivilampi on September 15, 2018 6:48 pm

    கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வடக்கு மாகாணத்திலும் கொள்கை அளவில் தமிழர்கள் ஒன்று இணையாவிடடால் தமிழர்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் சிங்கள தேசம் பறித்துவிடும். எந்த சிங்கள அரசியல் கட்சி இந்த இலங்கை தீவை ஆட்சி செய்தாலும் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை கடந்த கால நிகழ்வுகள் மிக தெளிவாக காட்டி நிற்கிறது. இங்கு நாம் இடது சாரிகள் வலதுசாரிகள், மேல் சாதி, கீழ்சாதி என்று பிரிவுகளை வைத்து கொண்டு எமது உரிமை பறிக்கப்படுகிறது என நீதி நியாயம் கேட்க முடியாது. எமது இனம் சிங்கள ஒடுக்குமுறையில் இடிந்து மட்டுமல்ல தமிழர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களையும் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார, சமூக வேறுபாடுகளையும் நகரும் நோக்கில் ஒரு கூட்டு முன்னணியே தேவையானதும் ஏற்று கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். முதலில் ஒரு தமிழர் கூட்ட்டமைப்பை அமைத்து பின்னர் மற்றும் தமிழ் பேசும் ஏனைய இனங்களையும் இந்த கூட்டணியில் இணைத்து தமிழர் தாயகத்தை காப்பாற்றவேண்டும். தமிழர் தாயகத்தை காப்பாற்றுவதன் மூலமே தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களை காப்பாற்ற முடியும். இல்லாவிடில் தமிழ் பேசும் இனம் முழுவதையுமே சிங்கள தேசம் பறித்து எடுத்துவிடும். தென் இலங்கையில் சிங்கள இனவாதிகளின் கை கடந்த ஏழு தசாப்தங்களாக ஓங்கி வருவதையும் ஏனைய சமூக அடையாளங்களை அழிப்பதிலும் ஒன்று பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே பதவி போட்டி நிலவினாலும், மக்களின் பொருளாதார நிலைமைகள் வீழ்ந்து சென்றாலும் ஏனைய இனங்களின் அடையாளங்களை அழிப்பதில் ஒன்றுபட்டு உள்ளார்கள் என்பதில் புதிய அரசியல் அமைப்பை எதிர்ப்பதில் ஒன்று பட்டு உள்ளார்கள். இந்த உண்மையை தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்கள் உணர வேண்டும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு