போலி முகவர் நிலையங்களை கண்டுபிடிக்க நாடு முழுவதும் சுற்றிவளைப்பு


downloadநாடு முழுவதும் இயங்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எவ்வித சுற்றிவளைப்பும் முன்னெடுக்கப்படவில்லை. வெகுவிரைவில் போலி முகவர் நிலையங்களுக்கு எதிராக கடும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் 16 வயதுக்கும் குறைந்த கிண்ணியாவைச் சேர்ந்த சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய இரண்டு இலங்கைப் பெண்களையும் கைது செய்வதற்கு துபாய் மற்றும் ஓமானிலுள்ள இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள சிறுமி அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரைக் காலமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் பக்கச்சார்புடனேயே செயற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வெளிநாடு செல்வோருக்காக நடைமுறையிலிருக்கும் குடும்ப பின்னணி அறிக்கையின் காரணமாகவே பல மோசடிகள் இடம்பெற்று வருவதனால் அதனை ரத்துச் செய்யாமல் அதில் சில மாற்றங்களை மட்டும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவை எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து காரணங்களை முன்வைக்கவிருப்பதாக தெரிவித்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோருக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடவிருப்பதாகவும் கூறினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு