“யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை தொடர்பில் வெட்கப்படுகிறேன்.” – யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன்

யாழ். மாவட்டத்தின் தற்போதைய கல்வி நிலை குறித்து வெட்கமாக உள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் கல்வி வலய சங்காணை மேற்கு பிரதேசத்திலே சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுத்தல் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியும், விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் வேர்ல்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று(02) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் உரையாற்றுகையில்,

“கல்வியில் முதலிடத்திலிருந்த மாவட்டம் தற்போது இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன?

 

மேலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது. பிள்ளை தனது பிரச்சினைகள் குறித்து பெற்றோரிடம் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதில்லை.

இதனாலேயே பிள்ளைகள் தவறான வழிநடத்தலின் கீழ் சென்று இவ்வாறு தவறான வழியில் பயணிக்கின்றனர். இது குறித்து பெற்றோர்கள் அதீத கவனம் எடுக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களின் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும்.

எமது மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் மாத்திரமின்றி சட்ட விரோத போதைப் பொருள் பாவனை சார்ந்த முறைப்பாடுகளும் நீதிமன்ற வழக்குகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அனைவரும் இது குறித்த விடயங்களில் அவதானமாக செயற்படுங்கள்.

எமது மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்க வேண்டியது எமது கடமையாகும்.

கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்த மாவட்டத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அபிவிருத்தி சார் நடவடிக்கைகள், சமூகம் சார் பிரச்சினைகள் சம்பந்தமாக தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்ட படியே இருக்கின்றேன்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பல கலந்துரையாடல்களையும் சமூக பிரச்சினைகளைத் தடுப்பதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கின்றோம்.

எங்களுடைய மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் என்பது அதிகரித்ததொன்றாகவும் எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய பிரச்சினையாகவும் காணப்படும் அதேவேளை அதனை அலட்சியப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம்” எனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *