அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்!!!


Political_Prisoner_Wife_funeralஇலங்கையின் இருள் சிறைகளில் நூற்று ஆறு தமிழ் அரசியல் கைதிகள்  அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்து அண்ணளவாக பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இவர்களின் விடுதலைக்கான எந்த முயற்சிகளும் இலங்கை அரசினால் எடுக்கப்படவில்லை. மைத்திரி – ரணில் அணியுடன் கூட்டு வைத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண்போம் என்று தேர்தலில் வாக்குக் கேட்டு பாராளுமன்றம் போன கூட்டமைப்பினரும் அரசியல் கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததில்லை.
இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது எனவும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களிற்கு எதிராகவே வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள அண்மையில் தெரிவித்திருக்கிறார். ஆனால் இவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய தெசியக் கட்சி -  சுதந்திரக் கட்சியின் கூட்டமைப்பினர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் போதும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என பலமுறை கூறியிருக்கிறார்கள். இவர்கள் பதவிகளிற்கு வர முதல் அரசியல் கைதிகளாக இருந்தவர்கள் இன்று பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள். தேர்தல்களின் போது முகங்கள் மாறுகின்றனவே தவிர முதலாளித்துவ, இனவாத இலங்கை அரசுகள் என்றுமே மாறுவதில்லை.
மக்கள் விடுதலை முன்னணியினரின் (JVP)  இலங்கை அரசிற்கு எதிரான முதலாவது எழுச்சி எழுபத்தொன்றாம் ஆண்டு நடைபெற்றது.  தோழர் ரோகண விஜயவீரா உட்பட கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் பின்பு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை – இந்திய ஒப்பந்தம் எண்பத்தேழாம் ஆண்டின் ஆடி மாதம் கொண்டு வரப்பட்ட போது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்த இன்றும் இருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகள் இந்த ஒப்பந்தத்தின் பின்பே பாராளுமன்ற அரசியல்வாதிகளாக மாறினார்கள். இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு இனப்படுகொலைகளின் பின்பு இலங்கை அரசினால் கைது செய்யப்பட்ட பலரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்பு விடுதலை செய்யப்பட்டனர்.
அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருக்கும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்கா இந்த நூற்றியாறு அரசியல் கைதிகளை மட்டும் பயங்கரவாதிகள் என்கிறார். இலங்கையின் சிங்கள இனவாதிகளின் கூச்சல்களிற்கு அடிபணிந்தே இவர்களை பயங்கரவாதிகள் என்றும் விடுதலை செய்ய மாட்டோம் எனவும் மைத்திரி அரசு கூறுகிறது. புலிகள் அமைப்பின் தலைமைப் பொறுப்புகளில் இருந்த குமரன் பத்மநாதன், கருணா , பிள்ளையான், தயா மாஸ்டர் போன்றவர்களை வெளியே விட்டு வைத்திருக்கும் இந்த அரசு தான் புலிகள் அமைப்பின் கீழ் மட்டங்களில் இருந்தவர்களை பயங்கரவாதிகள் என்கிறது. ஆனையிறவு முகாம் தாக்குதல்கள் உட்பட பல முகாம்களிம் மீதான தாக்குதல்களை நானே தலைமை ஏற்று நடத்தினேன் என்று கருணா பேட்டி அளித்தார். பிரபாகரனிற்கு பின்பு அடுத்த தலைவர் நானே என்று குமரன் பத்மநாதன் பிரித்தானிய சனல் 4 தொலைகாட்சிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
இவர்கள் இலங்கை அரசுகளுடன் இருக்கிறார்கள் என்னும் ஒரே காரணத்திற்காக இவர்கள் பயங்கரவாதிகள் இல்லை. இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை அதிகாரத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்த அர்ச்சுனன் மகேந்திராவும் அரசுக் கும்பல்களும் பயங்கரவாதிகள் இல்லை. ஊடகவியலாளர் பிரகீத் எகனலிகொடவையும், சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் மற்றும் பல மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்களை வெள்ளை வான் கும்பல்களை வைத்து கடத்திய மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜ பக்சாக்கள் பயங்கரவாதிகள் இல்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்ற இலங்கையின் ஆட்சியாளர்கள், ஆயுதப்படையினர் எவரும் பயங்கரவாதிகள் இல்லை என்பது மட்டுமல்ல எவர் மீதும் எந்த விதமான வழக்குகளும் கூட இல்லை
“அம்மையாரே, என்னைப் போன்ற கணவன்மார்கள் காணாமற் போன பெண்களுக்கு நீதியையும் மனிதாபிமானத்தையும் நிலை நாட்டி நீங்களொரு தேசிய அன்னையாவீர்கள் என நான் வேண்டுகிறேன்” .எனக் கண்ணீர் நிற்கா விழிகளுடன் தன் கணவரிற்கு நியாயம் வேண்டி கொலைகாரன் மகிந்த ராஜபக்சாவின் மனைவிக்கு கடிதம் எழுதிய ஊடகவியலாளர் பிரகீத் எகனலிகொடவின் மனைவி சந்தியா எகனலிகொடவிற்கு தமது அரசியல் எதிரிகளான மகிந்த கும்பலை விசாரித்து நீதி வழங்காத மைத்திரி – ரணில் கும்பல் தாமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யப் போவதில்லை. மக்களின் இணைந்த போராட்டங்களே எதிரிகளைப் பணிய வைக்கும்.
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கும் அனுராதபுரச் சிறை அமைந்திருக்கும் அனுராதபுர நகரில் “அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு” எல்லா இன மக்களையும் இணைத்து போராட்டம் செய்தது. “சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பு” யாழ்ப்பாண நகரிலும், அச்சுவேலியிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும், பொதுமக்களை சந்தித்தும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வருகிறார்கள். வரும் புதன்கிழமை 10.10.18 அன்று சம உரிமை இயக்கத்தினால் லண்டனில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.
மக்களே, எமக்காக போராடியதற்காக சிறை வைக்கப்பட்டு இன்று சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் எமது போராளிகளிற்காக நாம் இணைந்து போராடுவோம்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு