இறுதிப்போர் தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை முற்றுமுழுவதாக நிராகரிக்கிறோம் – ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் !

ஐ.நா தீர்மானங்களின் கீழ் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை முற்றுமுழுவதாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது பரந்துபட்ட அளவில் சட்ட மற்றும் அரசியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என இன்றைய ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அரச பிரதிநிதி, அரசியலமைப்புக்கு உட்பட்டே பொறுப்புகூறல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர்,

தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மத்தியிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலுக்கான நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்திவருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. தேவையான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளை, சமூக பாதுகாப்பு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை அனைத்து சமூகங்களுக்கு இடையிலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவது குறித்து அரசாங்கம் மனதில் வைத்து செயற்படுகின்றது.

சட்டரீதியான மறுசீரமைப்புக்கள் நிறுவன செயற்பாடுகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளின் விடுதலை, அதிகாரப் பகிர்வு,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தேசிய காணி பேரவை, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஆகியன குறித்து குறித்து கடந்த 8 ஆம் திகதி அதிபர் சந்திப்பொன்றை நடத்தினார்.

 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து அனைத்து தரப்பினருடனும் மேலதிக கலந்துரையாடல்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

 

உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் அதேவேளை சர்வதேச தரத்திற்கு அமைய அதனை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஊழல் எதிர்ப்புச் சட்டம், உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, அது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது.

 

கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் தென்னாபிரிக்காவிற்கு சென்று, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனுபவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தனர்.

இந்தப் பொறிமுறை இலக்கைக்கு பொருத்தமானதாக இருக்கும் அதேவேளை, அதனை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக ஆலோசனைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தை அமைப்பதற்கு அதிபர் செயலாளரை அனுமதிக்கும் வகையில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

காணாமல் போனோர் அலுவலகம் 3 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

 

காணாமல் போனோர் பற்றிய சான்றிதழை வழங்குவதையும் அதிபர் துரிதப்படுத்தியுள்ளார்.

இராணுவம் வசமிருந்த 92 வீதமான காணிகள் உரிய உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

 

மோதல்களின் பின்னர் வன இலாகா வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையககப்படுத்தப்பட்ட மீதமாக உள்ள காணிகளை உரிய தனிப்பட்ட நபர்களை கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் உட்பட வடக்கு கிழக்கு மக்களின் நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு கீழ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *