சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் இரத்து – பின்னணி என்ன..?

100,000 குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை இரத்து செய்ததற்காகவும் குரங்குகள் பண்டமாற்று செய்யப்படுவதற்கானவை அல்ல என்பதை அங்கீகரித்ததற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கு PETA எனப்படும் People For The Ethical Treatment Of Animals அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகளை அவர்கள் உயிரியல் மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபடுத்துவார்கள் என்பதால், அவை இறந்துவிடும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக PETA-வின் சிரேஷ்ட விஞ்ஞான ஆலோசகர் Dr. Lisa Jones-Engel தெரிவித்துள்ளார்.

குரங்குகள் சோதனைக்கூடங்களில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் என தெரிவித்து, அவற்றை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி முன்னதாக இலங்கை அரசாங்கத்திற்கு PETA கடிதம் எழுதியிருந்தது.

இதனிடையே, இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்திற்கு எதிராக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (Wildlife and Nature protection Society of Sri Lanka ) உள்ளிட்ட 30 மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கு நேற்று(26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வனஜீவராசிகள் மற்றும் பாதுகாப்பு திணைக்களம் சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்காது என அறிவுறுத்தல்களை வழங்கியதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.

இந்த வழக்கு மீண்டும் 2023 ஜூலை 6 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *