“வங்கிகளில் கடன் பெற்றுள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வட்டி வீதத்தை குறைப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – ஹர்ஷடி சில்வா

“வங்கிகளில் கடன் பெற்றுள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வட்டி வீதத்தை குறைப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகள் பெறும் லாபம் தொடர்பாக சனிக்கிழமை (8) அவரது இல்லாத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொண்டுள்ளதன் மூலம் வங்கிகள் அவர்களின் வட்டியை குறைத்துக்கொள்ள முடியும். ஏனெனில் அனைத்து வட்டி வீதங்களும் நூற்றுக்கு 10 வீதத்தால் குறைந்துள்ளது. அதனால் வங்கிகளில் கடன் வட்டிகள் எவ்வாறு குறைவடைந்திருக்கிறது என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கிகள் பண வைப்பாளர்களின் வட்டியை குறைத்திருக்கின்றன. ஆனால் கடன் பெற்றவர்களின் வட்டியை குறைக்கும் விடயத்தில் மலினப்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே இருக்கிறது.

அதனால் வங்கிகளில் கடன் பணத்துக்கான வட்டி குறைக்கப்பட வேண்டும் என்ற இந்த விடயத்தை மத்திய வங்கி ஆளுநருக்கும் தெரிவித்தோம். அதற்கு மத்திய வங்கி ஆளுநர் அதனை ஏற்றுக்கொண்டார். அதேநேரம் வங்கி பிரதானிகளுக்கும் வட்டி குறைப்பு விடயமாக தெரிவித்திருக்கிறார். வங்கிகள் இதனை செய்ய தவறினால்,வங்கிகளை ஒழுங்கு முறை மூலம் அதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தற்போது ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் போது அதன் சுமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். என்றாலும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு மாத்திரமே இதனை மேற்கொள்வதாக தெரிவித்து, வங்கிகளை இதில் இருந்து கைவிட்டார்கள்.

இதனால் கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு பங்குச்சந்தைகள் திறக்கப்பட்ட முதல் தினத்தில் அனைத்து வங்கிகளிலும் பங்குச்சந்தை வியாபாரம் நூற்றுக்கு 25வீதம் விலை அதிகரித்தது. அதனால் வங்கிகளில் பங்குச்சந்தைகள் பாரியளவில் லாபம் ஈட்டி வருகின்றன.அதனால் அவர்கள் ஈட்டிவரும் பாரிய லாபத்தில் இருந்து, வங்கிகளில் கடன் பெறும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

எனவே வங்கிகளில் பெறும் கடனுக்கான வடடி வீதத்தை குறைக்கும் நடவடிக்கையை மத்திய வங்கி ஆளுநர் மேற்கொள்வார் என நாங்கள் நம்புகிறோம்,. அவ்வாறு இடம்பெறாவிட்டால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்காக நாங்கள் இந்த விடயத்தை கையில் எடுப்போம். சாதாரண வியாபாரிகளுக்கு அநீதி ஏற்பட நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *