ஆசிரியர்கள் – thesamnet@gmail.com


பின்னூட்ட அறிக்கை

பின்னூட்டம் இடுபவர்கள் எதை கவனத்திற் கொண்டு பின்னூட்டங்களை இடவேண்டும் என்ற குறிப்பு தேசம் நெற்றில் தரப்பட்டள்ளது. அதன்படியே நாம் எமக்கு கிடைக்கும் பின்னூட்டங்களில் தணிக்கை செய்ய வேண்டியவைகளைத் தணிக்கைக்குட்படுத்தி வெளியிடுகின்றோம்.

உதாரணமாக தனிமனிதர்களின் கட்டுரையாளர்களின் தனிப்பட்ட குடும்ப பின்னணிகள் பிரச்சினைகள்பற்றி வரும் போதெல்லாம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது அதேநேரம் அந்த தனிப்பட்டவர்களின் அரசியல் சமூக செயற்ப்பாடுகள் பற்றிய விடயங்கள் என்றுமே தணிக்கை செய்யப்படுவதில்லை. மக்கள் மக்கள் அமைப்புகள் சார்பான விடயங்கள் அரசியல் சார்பானவையில் பெரும்பான்மையானவைகள் அனுமதிக்கப்பட்டே வந்துள்ளது. அதற்குப் பதில்கள் பெரும்பான்மையான அமைப்புக்களோ குழுக்களோ எழுதுவதில்லை. பதிலாக தனிநபர்களே பதில் எழுதுவதையும் காண்கிறோம். அதிலும் பெரும்பான்மையானோர் புனை பெயரிலேயே எழுதுவார்கள்.

பொதுஅமைப்புகள் சார்பாக மாற்றுக் கருத்துக்களும் சந்தேகங்களும் எழும்போது அவை முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. காரணம் பொது அமைப்புக்கள் மக்கள் சார் அமைப்புக்கள் தாமே முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. பொது அமைப்புக்கள் பதில் எழுதாத சந்தர்ப்பங்களில் இந்த அமைப்புக்கள் தொடர்பான கருத்துக்களும் அதற்கு பதில் கருத்துக்களும் பின்னூட்டம் இடுபவர்களால் தொடர்ந்து எழுதப்படுவதும்; அவதானிக்கப்பட்டுள்ளது. தன்போது அப்போது அமைப்பிற்குப் பொறுப்பானவர்களின் பெயர்கள் கூட குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இவற்றில் அவரின் தனிப்பட்ட விடயங்கள் தவிர்த்து அமைப்புசார் செயற்பாடுகள் பின்னூட்டத்தில் அனுமதிக்கப்பட்டே வந்துள்ளது. இவற்றை தொடர்ந்தும் தேசம்நெற் அனுமதிக்கும்.

தேசம்நெற் தனது பின்னூட்டக் களத்திற்கு பெரிய அகன்ற எல்லைகளையே வைத்துள்ளது. இக்களத்தினுடாக எவரும் தத்தம் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் நேரடியாக பொதுஅமைப்புக்கள் மீது அல்லது மக்கள் இயக்கங்கள் மீது வைக்கமுடியும். நேரடியாக தம்மை இனங்காட்டாமல் கருத்தெழுதவும் நேரிடையாக சொல்லத் தயங்கும் கருத்துக்களுக்கும் தேசம்நெற் பின்னூட்ட களம் இடமளிக்கிறது. இப் பின்னூட்டகளத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரும்பாலான கருத்துக்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் பெருந்தொகையாக வேகமாக வைக்கப்பட்டபோது நாம் முழுமையாக அனுமதித்துள்ளோம். இக்கருத்துக்களை நிராகரிப்பவர்கள் அந்த கருத்துக்களை நிராகரித்து பின்னூட்டம் எழுதவேண்டுமே தவிர அதைவிடுத்து நாம் தேசம்நெற் புலிகளின் ஆதரவுக் கருத்துக்களை அனுமதிக்கிறோம் என்ற குற்றச்சாட்டை தேசம்நெற் மீதும் தேசம்நெற் பின்னூட்ட களத்தின்மீதும் அவதூறுகளாக வெளியிடுவதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பின்னூட்ட களத்தில் ஒருவர் பல புனைபெயரில் கருத்து வெளியிட இந்த தளம் வசதியளிக்கிறது. இந்த வசதிகளை பயன்படுத்தி பலர் தமது கருத்துக்களை பல பெயர்களில் வெளியிட்டு இருப்பது எமக்கு துல்லியமாக தெரியும். ஒருசிலர் தமது சொந்தப் பெயரை மட்டுமே பாவித்து வருகிறார்கள். அதேபோல பல பெயர்களில் பின்னூட்டம் இடும் நண்பர்கள் தமது சொந்தப் பெயரிலும் கருத்துக்களை இட்டுள்ளார்கள். இப்படி பல பெயரில் பின்னூட்டம் இட்டவர்களில் ஒருசிலர் எம்மைப்பார்த்து நாம் அவதூறுகளை அனுமதிக்கிறோம் என்று எழுந்தமானமாக தேசம்நெற் மீது குற்றம் சாட்டுவதையும் அவதானித்துள்ளோம். எது எப்படி இருப்பினும் எழுதியவர் யார் என்று பார்க்காது அவர் என்ன கருத்து எழுதியுள்ளார் என்பதை மட்டுமே கருத்திற் கொண்டே நாம் பின்னூட்டங்களை தணிக்கை செய்து வெளியிடுவதில் கவனம் செலுத்தியுள்ளோம். தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவோம்.

எமது பின்னூட்ட தளத்தின் அகன்ற தளத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்தி திட்டமிட்டு கேவலமாக எழுதியவர்களினதும், திட்டமிட்டு தனிநபர்களை தாக்கியவர்களினதும் கருத்துக்கள் முழுதாகவே தணிக்கை செயயப்பட்டுள்ளது. இப்படியாக தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டதன் காரணமாக அவர்கள் தமது கருத்துக்களின் தரத்தில் சொல்லாடலில் மாற்றம் செய்து கொண்டதையும் நாம் அதானித்துள்ளோம். அதை நாம் வரவேற்கிறோம்.

எமக்கு கிடைக்கும் பின்னூட்ட தொகைகளில் குறிப்பிடத்தக்க சதவீதம் முழுமையாகவோ அன்றி பகுதியாகவோ தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் எவருடைய கருத்துக்களையும் நாம் திரிவுபடுத்தியதில்லை.

எமது அவதானத்தையும் தாண்டி தவறுதலாக பிரசுரிக்கப்பட்ட கருத்துக்கள் வாசகர்களால் சுட்டிக் காட்டப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. இவ்விடத்தில் அவர்களுக்கு எமது நன்றியை கூறிக் கொள்வதுடன் உங்களின் தொடச்சியான பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். அதேபோல சில தவறுகள் எமது தொழில்நுட்ப மனிதவலு, இயலாமையாலும் ஏற்பட்டுள்ளது. இவை பின்னர் திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுரைகளுக்கு சம்பந்தமில்லாத கருத்துகளும் மற்றும் இறுதியாக வெளிவந்த பின்னூட்டத்தின் கருத்து தாக்கத்தால் திசை மாறி நிற்கும் கருத்துக்களும் எம்மால் நீக்கப்பட்டதுடன் தேசம் ஆசிரியர்களால் பல தடவைகள் சுட்டிக் காட்டப்பட்டும் உள்ளது. தவறான கட்டுரையின் கீழிடப்பட்ட கருத்துக்கள் சரியான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஒரு வருடத்தில் 46,5035 வாசிப்போரும் 10490 ற்கும் மேற்பட்ட பின்னூட்டகருத்துக்களும் 2378 ற்கும் மேற்பட்ட கட்டுரைகள் செய்திகளுமாக 110 வகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. அதைவிட மற்றைய எழுத்தாளர்களையும் தனிப்பட்டவர்களையும் கேவலப்படுத்தியும் பெண்களையும் பெண் எழுத்தாளர்களைத் தாக்கியும் கிடைக்கப் பெற்ற 867 பின்னூட்டங்கள் முழுமையாக பிரசுரிக்கப்படவில்லை.

தேசம்நெற் அகன்ற எல்லைகளைக் கொண்ட பின்னூட்ட களத்தை வைத்திருப்பதன் நோக்கம் எல்லா தரப்பினரும் பங்குபற்றுதலும் கருத்து எழுதும் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கேயாகும். ஆயுத இயக்கவாத பயங்களை கடந்து ஒரு மாற்றம் பெற்ற சூழல் தமிழ்பேசும் மக்களிடையே உருவாகி வருவதும் இந்த மாற்றங்களின் பிரதிபலிப்பை தமது கருத்து எழுதும் சுதந்திரத்தை தமது உரிமைகளைப் பாவித்து செயற்ப்படும் நிலைமைகளை குறைந்த பட்சம் உவாக்குவதே தேசம்நெற்றின் நோக்கமாகும். எதிர்வரும் காலங்களிலும் சுதந்திரமாக கருத்து எழுதும் ஊடகமாகவும் அதை அனுமதிக்கும் ஊடகமாகவும் தேசம்நெற் தொடர்ந்தும் செயற்ப்படும்.

நாம் எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது இயக்கங்களுக்கோ அல்லது அவர்களது அரசியற் கருத்துக்களை பிரதிபலித்தோ செயற்பட்டதில்லை. அவ்வாறு செயற்பட போவதுமில்லை. முழுமையான பொது ஊடகமாகவும் ஆதிக்க அரசியலை எதிர்க்கும் ஊடகமாகவும் ஆதிக்க சக்திகளை எதிர்த்தும் செயற்ப்படும்.

எம்மீது தொடுக்கப்படும் சந்தேகங்களுக்கு நாம் இந்த தொடர் அறிக்கையில் பதிலளித்துள்ளோம், தொடர்ந்து எம்மீதான உங்கள் விமர்சனங்களையும் நாம் வரவேற்கிறோம்.

•பின்னூட்டங்களில் ஒருவர் வெளியிடும் கருத்தை மற்றவர் அவதூறு என்றும் காழ்ப்புணர்வு கொண்டது என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

•ஒருவரின் அரசியற் பின்ணணி பற்றியும் அவரது கடந்த கால அரசியற் செயற்பாடுகள் பற்றியும் வெளியான கருத்துக்கள் தனிப்பட்ட தாக்குதல் என்றும் அவதூறு என்றும் எடுத்துக் கொள்ளலாகாது. தாம் பிரதிபலிக்கும் அமைப்பின் வெளிப்படுத்தாத கணக்குகள் நிதிபெறும் நடவடிக்கைகள் என்ஜிஓ க்கள் தொடர்புகள் இலங்கை அரசுடனான தொடர்புகள் சார்பாக வெளியான பின்னூட்டங்கள் எல்லாம் அவதூறாகக் கருதப்பட்டு தேசம்நெற்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

•இவற்றை அவதூறுகள் என்று குற்றம் சுமத்துவதைத் தவிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் தமது அமைப்பு சார்பாக அறிக்கைகளை வெளியிட்டிருக்கலாம் அல்லது அதற்கான பதில் எங்குள்ளது என்பதை குறிப்பிட்டிருக்கலாம். அதுவே சரியானதொரு அணுகுமுறையாகும். பொது அமைப்புகள் பொது மக்களுக்கான அமைப்புகள் தம்மீதான விமர்சனங்களை சந்தேகங்களை கேள்விகளை எதிர்கொள்ளாது அவதூறு என்று பிரச்சாரம் செய்வது அவ்வமைப்பின் மீது மேலும், சந்தேகங்களையும் விமர்சனங்களையும் வளர்க்கும் என்றே தேசம்நெற் கருதுகிறது.

•தேசம்நெற் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த போது தேசம்நெற் பதிலளித்துள்ளது. (இணைப்பு பார்க்க

தேசம்நெற்றின் இணையத்தளத்தின் அமைப்பில் மற்றும் தேசம்நெற்றின் உள்ளடக்கங்களின் தேடலிலும் நிறையவே மாற்றங்கள் தேவைப்படுவதை பல வாசகர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். மேலும் கட்டுரைகள் ஆக்கங்கள் எழுதுவதற்கு ஊக்கமளித்துள்ளார்கள் அவர்களுக்கு எமது நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். தேசம்நெற் வாசிப்பை இலகுவாக்குவதற்கும் வாசிப்பவர்கள் மேலும் தேடலைத் தூண்டும் முகமாகவும் எவரையும் எழுத முன்வர ஊக்கம் கொடுத்தும் இவற்றுக்காக தொடர்ந்தும் செயற்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறது.

பின்னூட்டம் இட அனுமதிப்பதன் மூலம்தான் சுதந்திரமாக மக்கள் எழுத தமது கருத்துக்களை முன்வைக்க வரவேண்டும் என்பதல்ல எமது கருத்து பின்னூட்ட களம் இல்லாமலும் பல இணையத்தளங்கள் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் பின்னூட்டப் பகுதியை நிறுத்தினாலும் கூட இப்பின்னூட்டம் எழுதும் எழுத முனையும் வகைப்போக்கு என்றுமே மக்களிடம் இருக்கும். இந்தப் போக்கினை தேசம்நெற் நெறிப்படுத்தி இப்பின்னூட்ட கலாச்சாரத்தை சரியான நோக்கில் எடுத்துச் செல்லவே தேசம்நெற் முற்படுகின்றது. அதில் கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளது. நாம் தொடர்ந்து செயற்படுவதன் மூலம் இப்பின்னூட்டக் கலாச்சாரத்தை செழுமைப்படுத்துவோம். அதற்கு தேசம்நெற் வாசகர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு இன்றியமையாதது.

நன்றி.

-தேசம்நெற் ஆசிரியர் குழு.