கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள் தொகை !

இன்றைய தினத்தில் நாட்டில் 687 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

ஆதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50,229 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 43,267 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 247 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

6,715 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கையிலும் புகுந்த புதிய வகை வைரஸ் – தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பி.சி.ஆர் சோதனையை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் !

பிரித்தானியாவிலும் தென்னாபிரிக்காவிலும் பரவிவருகின்ற வீரியமிக்க ஆபத்தான வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பிரதிஇயக்குநர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்டவரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பி.சி.ஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார். பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பதாயிரத்தை நெருங்கும் இலங்கை கொரோனா தொற்றாளர்களின் தொகை – மேலும் நால்வர் பலி !

நாட்டில் மேலும் 588 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 537ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 6 ஆயிரத்து 672 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 621ஆக அதிகரித் துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 603 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்னர்.

மேலும் நேற்றையதினம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

“கொரோனா தோற்றம் தொடர்பாக ஆய்வு செய்யயும் உலக சுகாதார அமைப்பின் குழுவுக்கு சீனா அனுமதி மறுப்பு !

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் பரவ தொடங்கியதாக கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்தது.
இந்த சிறப்புக்குழு வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என தெரிவித்தது.
இந்நிலையில், சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெட்ரோஸ் அதனோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வுசெய்ய அங்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவுசெய்தோம். ஆனால் நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காமல் சீன அரசு தாமதித்து வருவது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – 3 ஆம் கட்ட பரிசோதனை முடியாது நடைமுறைக்கு வந்ததாக பலரும் குற்றச்சாட்டு !

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவி‌ஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம்(03.01.2021) ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றன.
இதில் கோவி‌ஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம், தற்போது கோவி‌ஷீல்டு தடுப்பூசியின் விலையை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா கூறுகையில், ‘தடுப்பூசியின் விலை மலிவாகவும், அனைவரும் வாங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே இந்திய அரசு 3 முதல் 4 அமெரிக்க டாலர் (இந்திய ரூ.219-292) என்ற மலிவு விலைக்கு தடுப்பூசியை பெறும். மிக அதிக அளவில் வாங்குவதால் இந்த விலைக்கு கொடுக்கப்படும்’ என்று கூறினார்.
இந்த தடுப்பூசியை பொறுத்தவரை இந்தியாவுக்கு முதலிலும், அடுத்ததாக தடுப்பூசி சர்வதேச கூட்டணி நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று கூறிய பூனவல்லா, அதைத் தொடர்ந்தே தனியார் சந்தைக்கு அனுப்பப்படும் எனவும், அங்கு இரு மடங்கு விலையில் விற்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் எனவும், ஏப்ரலுக்குள் இது இரட்டிப்பாகும் எனவும் பூனவல்லா தெரிவித்தார். அதேநேரம் மத்திய அரசு ஜூலை மாதத்துக்குள் 30 கோடி டோஸ்கள் கேட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் “கோவேக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. எனவே, முன்கூட்டியே அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது.

3 ஆம் கட்ட பரிசோதனை முடியும் வரை கோவேக்சின் தடுப்பூசியை  தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனை  வலியுறுத்துகிறேன். அதுவரை,கோவிஷீல்டு தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சித்துள்ளார்.

ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்த கொரோனா – புதிய கொரோனா வைரஸ் சீனாவிலும் !

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் அடையாளப்படுத்தப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவிகிதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இதனால், பல நாடுகளும் இங்கிலாந்துடனான விமான மற்றும் சாலை வழி போக்குவரத்தை ரத்து செய்தன.
ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா சீனாவில் பரவாமல் இருந்தது.
இந்நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது உருமாறி மீண்டும் சீனாவையே வந்தடைந்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து டிசம்பர் 14-ம் திகதி 23 வயது நிரம்பிய இளம் பெண் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திற்கு விமானத்தில் வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும், அந்த கொரோனா உருமாறிய கொரோனா வைரசா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் அந்த 23 வயது நிரம்பிய பெண்ணுக்கு பரவியுள்ளது.
 இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் என சீன அரசு நேற்று (டிசம்பர் 31) தெரிவித்துள்ளது. இதன் மூலம் உருமாறிய கொரோனா வைரஸ் சீனாவிலும் பரவிவிட்டது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உருமாறி மீண்டும் 2020 டிசம்பர் மாதம் சீனாவையே வந்தடைந்துள்ளது.

வடக்கில் முதலாவது கொரோனா மரணம் !

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று (26.12.2020) உயிரிழந்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று இருப்பது நேற்றுமுன்தினம் உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரி பெறப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவின் பிரகாரம் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண்மணி நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி அநுராதபுரம் மித்சிறி செவன் வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார். கொரோனாத் தொற்றுடன் கூடிய நிமோனியா காய்ச்சலே அவரது உயிரிழப்புக்குக்காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“புதிதாக பரவும் கொரோனா வைரஸின் அறிகுறிகள் இவைதான்” – வெளியிட்டது இங்கிலாந்து அரசு !

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இங்கிலாந்திலும் வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. அதன்பின் பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதற்கிடையே இங்கிலாந்தில் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. வைரசின் இந்த புதிய மாறுபாடு வீரியமிக்கதாக இருக்கிறது. இதனால் வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது.

இந்தநிலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை கூறும் போது, ‘ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பதுடன் சேர்ந்து சோர்வு, பசியின்மை, தலை வலி, வயிற்றுப்போக்கு, மன குழப்பம், தசை வலி, தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகுறிகள் தென்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதிய வகை கொரோனா வைரஸ் முன்பைவிட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜெர்மனியிலும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. லண்டனில் இருந்து ஜெர்மனி சென்ற பெண் ஒருவருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் காட்டுத்தீயாய் பரவும் புதிய வகை வைரஸ் – 57 இடங்களில் கண்டுபிடிப்பு !

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 இலட்சத்து 10 ஆயிரத்து 314 ஆக அதிகரித்துள்ளது.

இது ஒருபக்கமிருக்க பிரித்தானியாவில் பரவும் புதிய வைரஸ் உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் எந்தெந்த பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வரை, புதிய வகை கொரோனா வைரஸ், பிரித்தானியாவைச் சுற்றி 57 இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்திய ஆய்வாளர்கள், இங்கிலாந்தில் 45 இடங்களிலும், ஸ்காட்லாந்தில் ஆறு இடங்களிலும், வேல்ஸில் ஆறு இடங்களிலும் எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கண்டறிந்துள்ளனர்.

இதற்கமைய, கிளாஸ்கோ, லின்வுட், நியூட்டன் மெர்ன்ஸ், ஏர்டிரி, போன்ஹில் மற்றும் லென்ஸி ஆகிய பகுதிகளிலும், கிராமப்புறமான நார்தம்பர்லேண்டில் ரோத் பரிக்கு அருகிலும், நியூகேஸில்-ஆன்-டைன் மற்றும் லோ பெல்லுக்கு அருகிலுள்ள கேட்ஸ்ஹெட்டில், கவுண்டி டர்ஹாமில் பிஷப் ஆக்லாந்து ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கும்ப்ரியாவில் பென்ரித் அருகில், மிடில்ஸ்பரோ, லங்காஷயரில் ஹர்ஸ்ட் கிரீன், கிளெக்ஹீட்டன், ஹல் அருகே உள்ள போக்லிங்டனில், மெர்ஸ்சைட்டின் வடக்கில், கிராஸ்பி மற்றும் கிர்க்பிக்கு அருகில் இரண்டு பகுதிகள், மத்திய மான்செஸ்டரின் ஒரு பகுதி, தெற்கு யார்க்ஷயரில் மால்ட்பி அருகே, ரெக்ஷாமில் ஒரு பகுதி மற்றும் செஷயரின் பர்ட்டனில் ஒரு பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஸ்டாபோர்ட்ஷையரில் மேட்லாக் அருகில், நாட்டிங்ஹாம்ஷையரில் ஈக்ரிங் அருகில், லிங்கன்ஷையரில் உட்ஹால் ஸ்பா, ஸ்டாஃபோர்ட்ஷையரில் ஸ்டாபோர்டுக்கு அருகில், லெய்செஸ்டர் பகுதியில், ஓகாமுக்கு அருகிலுள்ள அப்பர் ஹம்பிள்டன், நார்விச் அருகிலுள்ள டெரெஹாம், இப்ஸ்விச் அருகே ஸ்டோமார்க்கெட், கேம்பிரிட்ஜ்ஷையரில் வில்லிங்ஹாம் அருகே, கெட்டெரிங்கில், கோவென்ட்ரிக்கு அருகிலுள்ள கெனில்வொர்த்தில், பர்மிங்காமின் ஓல்ட்பரி பகுதிக்கு அருகிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வொர்செஸ்டரில், ஹியர்போர்டில், பிஷ்கார்ட், நீத், பிரிட்ஜெண்ட், பாரி மற்றும் நியூபோர்ட்டில், பிரிஸ்டலில், பிரிட்ஜ்வாட்டருக்கு அருகில் மற்றும் எக்ஸிடெர் அருகில், தெற்கு கடற்கரையில் டோர்செஸ்டருக்கு அருகில், தாட்சம் அருகிலுள்ள நியூபரியில், வின்செஸ்டருக்கு அருகிலுள்ள நியூ ஆல்ரெஸ்போர்டில், பில்லிங்ஷர்ஸ்ட் அருகில், டோர்கிங்கில், ஹெயில்ஷாம் அருகில், கேன்டர்பரிக்கு அருகில் (இந்த புதிய வைரஸ் தோன்றியதாக கருதப்படுகிறது), மத்திய லண்டனில், ஆக்ஸ்போர்டு அருகில், செயின்ட் ஆல்பன்ஸுக்கு அருகிலுள்ள வெல்வின் கார்டன் நகரில், பிரைன்ட்ரீ அருகில், பெட்போர்டுக்கு அருகிலுள்ள ஸ்டாக்ஸ்டனிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

“யாழில் 100ஐ நெருங்கும் மருதனார்மடம் கொரோனா கொத்தணி – பரவும் வைரஸ் மிகவும் வீரியம் கூடியது” – வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் எச்சரிக்கை !

மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று(23.12.2020) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. அதிலும் தற்பொழுது யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது.

இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  கொரோனா தொற்று நோயினால் நாட்டில் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகைகளுக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பொழுது இந்நோய் எமது பிரதேசத்திலும் மேலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது. எனவே இப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதுடன் மத வழியாடுகளில் ஈடுபடும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியையும் பேணுதல் வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 95ஆக உயர்வடைந்துள்ளது.