அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

வெளியானது மீள எண்ணப்பட்ட ஜோர்ஜியா மாநில வாக்கு எண்ணிக்கை முடிவுகள் – ஜோ பைடன் புதிய சாதனை !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டினார். குறிப்பாக ஜோர்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை.
எனினும், ஜோர்ஜியா மாநிலத்தில், டிரம்புக்கும், பைடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்தால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. இந்த முறை வாக்குகள் அனைத்தும் கைகளால் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் பைடன் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில செயலாளரின் இணையதளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெற்றியாளரை இயந்திர வாக்கு எண்ணிக்கை துல்லியமாக தெரிவித்ததை, மறு வாக்கு எண்ணிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோர்ஜியா மாநிலம் ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார்.

தேர்தலில் மோசடி நடக்கவில்லை என கூறியதற்காக தேர்தல் பாதுகாப்பு உயர் அதிகாரியை பதவியில் இருந்து நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர். டிரம்பின் குற்றச்சாட்டை தேர்தல் பாதுகாப்பு உயர் அதிகாரி கிறிஸ் கிரெப்சும் மறுத்திருந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், நவம்பர் 3ல் நடந்த தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியிருந்தார்.
இதனால் மேலும் கோவப்பட்ட ஜனாதிபதி டிரம்ப், தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்சை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டார் டிரம்ப். கிறிஸ் கிரெப்சின் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளார்.
‘தேர்தல் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மிகவும் தவறானது. தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. எனவே, கிறிஸ் கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என டிரம்ப் மேலும் கூறி உள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் மார்க் எஸ்பரை  அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்  அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

முடிவடையாத அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – கைகளால் மீள எண்ணப்படுகின்றது ஜோர்ஜியா மாநில வாக்குகள் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். அவர் 290 ஓட்டுகளை பெற்று இருக்கிறார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 214 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால் தோல்வியை டிரம்ப் ஏற்று கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
ஜோர்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து உள்ளதாகவும் அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர போவ தாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜோர்ஜியா மாநிலத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அம்மாநில நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாக்குகள் கைகளால் எண்ணப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜார்ஜியா மாநிலத்தில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை16 வாக்கள் கொண்ட ஜோர்ஜியா மாநிலத்தில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடனைவிட டிரம்ப் 14 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே பின் தங்கி உள்ளார். இதையடுத்து அங்கு மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜார்ஜியா மாநில செயலாளர் பிராப் ராபென்ஸ்பெர்கர் கூறும்போது, ‘‘கணித ரீதியாக, வித்தியாசம் மிக நெருக்கமாக உள்ளதால் அனைத்து ஓட்டுகளும் கைகளால் மீண்டும் எண்ணப்படும். மறுவாக்கு எண்ணிக்கையை இந்த வாரத்துக்குள் தொடங்க விரும்புகிறோம்’’ என்றார்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு ஒரு வாரம் கழித்து அலாஸ்கா மாநிலத்தின் முடிவு வெளியிடப்பட்டது. இதில் டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார். இதனால் அவருக்கு 3 ஓட்டுகள் கிடைத்தன. இதன் மூலம் அவர் பெற்ற ஓட்டு எண்ணிக்கை 217 ஆக உயர்ந்தது.
ஏற்கனவே ஜோ பைடன் 290 ஓட்டுகள் பெற்று விட்டதால், அலாஸ்காவில் டிரம்பின் வெற்றி, ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை ஆகியவை ஜோ பைடனின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி டொனால்டு டிரம்ப் ஒரு ட்வீட் போட்டிருந்ததார். அதில் ‘‘வாக்குகள் எண்ணப்பட்ட அறைக்குள் எங்களது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 71,000,000 சட்டப்பூர்வமான வாக்குகள் பெற்று நான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்.
எங்களுடைய பார்வையாளர்களை அனுமதிக்காததை பார்க்க முடிந்தது மோசமான நிகழ்வு. இதற்கு முன் இப்படி நடந்ததே கிடையாது. மக்கள் கேட்காத போதிலும் லட்சக்கணக்கான வாக்குச்சீட்டுகள் மெயில் மூலம் அனுப்பப்பட்டது’’ என்று தெரிவித்திருந்தார்.
அதை மேற்கோள் காட்டி இன்று ‘‘தற்போது 7,30,00,000 வாக்குகள்’’ என பதிவிட்டுள்ளார். இதனால் டிரம்ப் நம்பிக்கையில் உள்ளார்.
ஜோ பைடன் 7,71,81,757 வாக்குகளும் டொனால்டு டிரம்ப் 7,20,71,588 வாக்குகளும் பெற்றுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக தவறுதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. தேர்தல் இன்னும் முடியவில்லை” – டிரம்பின் பிரசார குழு அறிக்கை !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 294 வாக்குகள் பெற்று 46வது அதிபராக பதவியேற்க உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இந்நிலையில், தோல்வியை ஏற்பதற்கு டொனால்ட் டிரம்ப் தயாராக இல்லை.
இதுதொடர்பாக, டிரம்பின் பிரசார குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக தவறுதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. அவரது ஆதரவு மீடியாக்கள் அவருக்கு உதவி செய்வதற்காகவும், உண்மையை மறைக்கவும் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் முடிவடைய இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்பதுதான் உண்மை. எந்த ஒரு மாகாணத்திலும் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கவில்லை. முக்கியமான மாகாணங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எங்கள் சட்ட போராட்டம் இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது.
திங்கட்கிழமை முதல் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து சரியான வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க உள்ளோம். அமெரிக்க மக்கள் ஒரு நேர்மையான தேர்தலுக்கு தகுதியானவர்கள். இதுதான் நமது தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு காரணமாக அமையும்” என தெரிவித்துள்ளது.

“யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்க போகின்றோம்” – அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடன் “இது தொடக்கம்தான் . அமெரிக்காவில் இனவெறியை அகற்றுவோம் ” – துணைஜனாதிபதி கமலா ஹாரிஸ் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
“ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது. என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். நாட்டு மக்கள் வெற்றி மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இதைவிட சிறந்த நாள் வருமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம். கடந்த 4 ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். கொரோனா காலத்திலும் கட்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி.
ஆட்சி ஏற்றவுடன் நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை.  அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பாதுகாப்பே எனது இலக்கு. எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்து இருக்கிறார்கள். வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்.
நம்மால்  முடியும் என்ற முழக்கத்துடன் ஒபாமா ஆட்சிக்கு வந்தார். அவருடன் நான் இருந்தேன். யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்க போகின்றோம். அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் டெலவர் நகரில் மக்களிடம் வெற்றி  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு  நன்றி.
வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி. நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூர்கிறேன்.
ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்.
துணை ஜனாதிபதியாகியுள்ள நான் முதல் பெண் தான், கடைசி பெண் அல்ல. இது தொடக்கம்தான். ஒரு பெண்ணை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது.
நமது நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருக்கின்றன.
கடந்த 4 ஆண்டாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். இன வெறியை அகற்றுவோம் என உறுதிபடக் கூறுகிறேன்.
பைடனுக்கு வாக்களித்ததன் மூலம்  நம்பிக்கை, கண்ணியம், ஒற்றுமைக்கு வாக்களித்துள்ளீர்கள்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி: ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில்!!!

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் அறிவிக்கப்பட உள்ளது. 270 எலக்ரோரல் கொலிஜ் வாக்குகளை வெல்லப்பட வேண்டிய சிலையில் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டு 264யையும் டொனால்ட் ட்ரம் – மைக் பென்ஸ் கூட்டு 214யையும் வென்றுள்ளனர். ஆனால் இன்னும் பென்சில்வேனியா, ஜோர்ஜியா, அரிசோநா, நோர்த் கரலினா, நவாடா ஆகிய ஐந்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. அதில் குறிப்பாக பென்சில்வேனியா ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்துகொண்டுள்ளது. இங்கு எண்ணப்பட்டு வரும் வாக்குகள் பெரும்பாலும் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டுக்கு சாதகமாகவே அமைந்து வருகின்றது.

அமெரிக்காவில் மிக இறுக்கமான போட்டியாக அமைந்துள்ள 2020 தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை சில ஆயிரத்திலேயே வேறுபடுகின்றது. அதனால் மீள எண்ணப்பட வேண்டும் என்ற சட்ட நடவடிக்கைகள் இரு தரப்பிலும் முடக்கி விடப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது தபால் மூலமான வாக்கள் சட்டப்படியானவையல்ல என்று டொனால்ட் ட்ரம் சட்ட நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. டொனால்ட் ட்ரம் இன் குடியரசுக் கட்சி – ரிப்பப்பிளிக்கன் பார்ட்டி தேர்தல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற டொனால்ட் ட்ரம் இன் குற்றச்சாட்டில் இருந்து தம்மை ஓரம்கட்டி உள்ளனர்.

டொனால்ட் ட்ரம் தபால் மூலமான வாக்குகளுக்கு பயப்படுவதற்கும் அவை எண்ணப்படக் கூடபது என்று கோருவதற்கும் காரணம் பெரும்பாலும் தபால் மூலமான வாக்குகள் டெமோகிரட் கட்சிக்கு சாதகமாக அமைவதே வழமை. அதனால் தபால் மூலமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டால் தான் இலகுவாக வெற்றி பெறலாம் என்பது அவரது சரியான கணிப்பே. வழமைக்கு மாறாக கோவி-19 போன்ற காரணங்களினாலும் தபால் மூலமான வாக்குகள் பத்து மடங்கிற்கும் அதிகமாக எகிறி இருந்தது. மேலும் 68 வீதமானவர்கள் தேர்தல் நாளுக்கு முன்னரே தபால் மூலமாகவும் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றும் வாக்களித்து இருந்தனர். அதற்கு முந்திய தேர்தலில் 2016இல் 34 வீதமானவர்களே அவ்வாறு வாக்களித்து இருந்தனர்.

ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தலில் தெரிவான ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாலும் ஜனவரி 21ம் திகதியே அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக கடமைகளையாற்ற ஆரம்பிப்பிப்பார். இந்த இடைவெளியில் டொனால்ட் ட்ரம் இன் வெள்ளை மாளிகை நாடகம் மிக சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க தேர்தலில் சுவாரஸ்யம் – மக்கள்தொகை 12 ஆக உள்ள நகரின் முழுமையான வாக்குகளையும் வென்றார் ஜோபிடன் !

அமெரிக்காவில் இன்றையதினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இந்தத்தேர்தலில்இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் என்றொரு பகுதி உள்ளது. அதில் டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற நகரும் மில்ஸ்பீல்டு என்ற நகரும் உள்ளன. அதில், டிக்ஸ்வில்லி நாட்ச் நகரில்தான் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அதுவும், அனைத்து வாக்குகளையும் அவர் சுருட்டிக்கொண்டுள்ளார், அவரை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், டிக்ஸ்வில்லி நாட்ச் நகரின் மொத்த மக்கள்தொகையே 12 தான் (2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி). அதிலும் 5 பேர்தான் வாக்காளர்கள்! அந்த ஐந்து பேர் வாக்களித்ததில், ஐந்து பேருமே ஜோ பிடனுக்குதான் வாக்களித்துள்ளார்கள். ஆகவே, 5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற, ஒரு வாக்கு கூட கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளார் டிரம்ப்.

அதேபோல், 12 மைல் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு நகர் மில்ஸ்பீல்டு, அதன் மக்கள் தொகை 21. அந்த 21 பேரில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன. ஆக, அந்த தொகுதியில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காட்டம் !

அமெரிக்க ஜனாதிபதிதேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக்கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலாகரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரு வேட்பாளர்களையும் முறைப்படி ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பளார்களாக அறிவிக்கும், அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், ஜனாதிபதி ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பொறுத்தவரை ஜனாதிபதி பதவி என்பது மணிக்கணக்கில் டிவி பார்ப்பதும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதவிடுவதும்தான் பணி என நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார், நாம்தான் உலகில் முன்னணியில் இருக்கிறோம். நல்ல விஷயம். மிகப்பெரிய தொழிற்சாலைகள் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்ட நம்நாட்டில்தான் வேலையின்மை வீதம் மூன்று மடங்கு இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் என்பது உலகிலேயே மிகவும் முக்கியமான பணிக்கான நேர்காணல். இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கும் போது கொரோனாவில் ஏறக்குறைய 1.70 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டார்கள், லட்சக்கணக்கான மக்கள், சிறுவணிகர்கள் வேலையிழந்துள்ளனர்.

இது போன்ற நேரத்தில், ஓவல் அலுவலகம் ஒரு கட்டளை மையமாக இருக்க வேண்டும். மாறாக, இது ஒரு புயல் மையம். எப்போதும் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஒரே விஷயம் மட்டும் மாறவில்லை. பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதும், அடுத்தவர் மீது பழிசுமத்துவம் மாறவில்லை.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவிய போது, ஜனாதிபதி ட்ரம்ப் முதலில் வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்றார், பின்னர் விரைவில் மறைந்துவிடும் என்று தெரிவித்தார். இது எதுவுமே நடக்கவில்லை என்றவுடன், நாள்தோறும் தொலைக்காட்சி முன் பேட்டி அளித்து தான் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்துக்கொண்டார், வல்லுநர்கள் தகவலுக்காக காத்திருக்கிறேன் என்றும்தெரிவித்தார்.

மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை சொல்வதை விரும்பாத ட்ரம்ப் அவர்களுக்கு அறிவுரை கொடுப்பார்.
அமெரிக்க மக்களிடம் தொடக்கத்திலேயே முகக்கவசம் அணிய அறிவுறுத்தாமல், பல்வேறு மாநிலங்களுக்கு பரவியபின்புதான் முகக்கவசம் அணிய ட்ரம்ப் அறிவுறுத்தினார்.

ட்ர்ம்ப்புக்கு ஜனாதிபதி பதவி என்பது மணிக்கணக்கில் டிவி பார்ப்பதும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடும்தான் என நினைத்துக்கொண்டிருக்கிறார். மறுத்தல், கவனத்தை திசைதிருப்பல், இழிவுபடுத்துவது ஆகியவை மூலம் மகிழ்ச்சிப்படுத்த முயல்கிறீர்கள். ஆனால், உண்மையான பிரச்சினை வரும் போது அட்டை வீடுபோல் அனைத்தும் சரிந்துவிடும்.

இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருந்தால்,ட்ரம்ப் என்ன செய்வார். அடுத்தவரை குறைசொல்வார், கிண்டல் செய்வார், சிறுமைப்படுத்துவார். ஆனால்,ஜே பிடன் என்ன செய்வார் என உங்களுக்குத்தெரியும், சிறப்பாக நாட்டை கட்டமைப்பார்.

ஜனநாயகக் கட்சி சிறந்த ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளது. தனக்கிருக்கும் பொறுப்புக்களை ஏற்று செயல்படுவார்; யார் மீதும் குறைகூறமாட்டார், கவனமாக இருப்பார், யாரையும் திசைதிருப்பமாட்டார், ஒற்றுமையை விரும்புவார், யாரையும் பிரிக்கமாட்டார் அவர்தான் ஜோ பிடன்.

அமெரிக்காவை மீண்டும் சிறந்த நிலைக்கு பிடன் கட்டமைப்பார், மிகவும் நேர்த்தியான  திட்டங்களை வகுத்து, அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு முதலீடு செய்ய அழைப்பார். புத்தாக்கம் நிறைந்த நிறுவனங்கள், நிதியுதவி, காலநிலையைக் காக்க முனைப்பு போன்றவற்றை பிடன் செய்வார்.

இவ்வாறு கிளிண்டன் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக தெரிவு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை வாழ்நாள் கௌரவம்  என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிடவுள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே ஜோ பைடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தமது வாழ்நாளில் கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவம்“ என அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி யார்..? என்ற ஆவல் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.