சிவனேசதுரை சந்திரகாந்தன்

சிவனேசதுரை சந்திரகாந்தன்

கொலைக்குற்றச்சாட்டில் அமைச்சர் பிள்ளையான் விரைவில் கைது..?

பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்திற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்,

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனக்கு வழங்க வேண்டிய மரியாதை தொடர்பில் சுமந்தின் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

மேலும் ஒரு சட்டத்தரணியாக இந்த விடயங்களை சுமந்திரன் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்த சந்திரகாந்தன், இவ்வாறான இழிவான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க கூடாது எனவும் சபையில் வலியுறுத்தினார்.

“சிங்களவனை காட்டி தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” – சிவனேசதுரை சந்திரகாந்தன் 

“பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(31) மாலை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அடுத்து வருகின்ற வரவு செலவுத் திட்டத்திலும், உலக வங்கி, மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய திட்டங்களிலும் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே நாம் அடைய நினைக்கும் இலக்காகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிக்கலான சூழ்நிலை இருந்தபோது எமது கட்சியை மட்டக்களப்பு மக்கள் மீட்டெடுத்தார்கள். அதன் பெறுமதியை நாம் அரசாங்கத்துடன் இணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் மக்களுக்கு நாம் முன்வைத்த கோரிக்கைகயை நிறைவேற்றுவதில் பல தடைகள் உள்ளன. ஆனாலும் சற்றுக்காலம் தாழ்த்தியாவது அவற்றை நிறைவேற்றிக் கொடுப்போம் என நாம் நம்புகின்றோம். 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பட்டிருப்பு பாலத்தை நாம் பார்வையிட்டோம். அப்பாலம் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட பாலமாகும். அதனை செப்பனிடுவதற்கு 1300 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது.

 

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீ சட்டத்தின் பின்னர்தான் சீ.மூ.இராசமாணிக்கம் ஐயாவும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். ஒரு சிங்கள எழுத்துக்காகவேதான் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அதற்காக எமது தமிழ் தலைவர்கள் வாகனங்களில் ஸ்ரீ எழுத்தை நீக்கிவிட்டு அ எழுத்தை பொருத்திக் கொண்டு மட்டக்களப்புக்கு வந்தார்கள். பின்னர் பட்டிருப்புத் தொகுதியிலே சீ.மூ.இராசமாணிக்கம் ஐயா அவர்கள் நாடாளுமன்றத்திலே இருந்தார். தமிழரசுக் கட்சியின் நூற்றாண்டு வரலாறு தோற்றுப்போன வரலாறாகும். இரண்டு தலைமுறைகள் அழித்துவிட்ட வரலாறாகும். அழிந்துள்ள இந்த வரலாற்றிலேயேதான் நாம் நிற்கப்போகின்றோமா என சிந்திக்க வேண்டும்.

இராசமாணிக்கம் ஐயா பிறந்த இடம் மண்டூர் அவர் மண்டூருக்கு கட்டிக் கொடுத்த பாலம் எங்கே? அவரது காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் எங்கே? அவர் மக்களுக்காக செய்த பணி ஒன்றுமே இல்லை. மாறாக பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என சாதாரண மக்களை உசுப்பேற்றி விட்டார்கள்.

தற்போது 2 தலைமுறைகள் கடந்து தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பொலிஸில்  சேரமுடியாது, சிங்களவர்களுடன் சேர்ந்து நிர்வாகம் செய்ய முடியாது, ஏனைய பணிகளைச் செய்யமுடியாது, போன்ற நிலமைகளை களுவாஞ்சிகுடி மக்கள் இன்னமும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது.

அழிந்து புதைக்கப்பட்ட எமது இளைஞர்களுக்குச் சொல்லும் கருத்து என்ன? அல்லது இந்த மக்களுக்கு நாம் கட்டும் வழி என்ன? இன்னமும் துவேசத்தனமாகப் பேசி இந்த மக்களை எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம், அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என்றால் ஒன்றும் இல்லை.

இதுதான் பாரம்பரிய மேட்டுக்குடி அரசியல் வரலாறாகும். ஏனெனில் அவர்கள் அவர்களது வாரிசுகளுக்காகத்தான் செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதற்கு உதாரணம் இந்த மண்ணிலேயே நிகழ்ந்திருக்கின்றது.

எந்தப் அப்பாவிப் பிள்ளைகளை உசுப்பேற்றி துப்பாக்கிகளைக் கொடுத்து மரணிக்க வைத்தார்களோ, எந்தப் பிள்ளைகளை சிங்களமும், ஆங்கிலுமும் கற்கக் கூடாது என உசுப்பேற்றினார்களோ அவர்களுடைய பிள்ளைகள் தற்போதிருக்கும் நிலமைகளை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன்.

சாமானிய மனிதர்களை வாழவைப்பதுதான் அரசியல் என“ அவர் இதன்போது தெரிவித்தார்.

“தமிழ் மக்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.” – நாடாளுமன்றில் பிள்ளையான் !

“மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி வருகின்ற மகாவலி திட்டத்தின் செயற்பாடுகள் முன்மொழியப்படும் போது, அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.” என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்  தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் உரை நிகழ்த்திய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் உரை நிகழ்த்திய அவர்,

இந்த நாடாளுமன்றத்தில் வடக்கு, கிழக்கை மையப்படுத்தும் எம்.பி.க்கள் எல்லோரும் கடும் போக்கான தொனியில் தான் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் நான் நோட்டிஸ் ஒட்டி, முதலமைச்சராகி இன்று எம்.பி.யாகவுள்ளேன். அரசாங்கத்துடன்தான் இணந்து செயற்படுகின்றேன். எனவே அரசாங்கம் எங்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்தக் கடும் போக்கானவர்களுக்கு தீனி போடுகிற அளவிலே அரச நிர்வாகம் செயற்படக்கூடாது. அரசாங்கத்துடன் இணைந்துள்ள எங்களின் தனித்துவமான அரசியலை வளர்த்தெடுக்கக்கூடிய சூழலை அரசாங்கம் உருவாக்கித்தர வேண்டும்.

அத்தோடு, மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி வருகின்ற மகாவலி திட்டத்தின் செயற்பாடுகள் முன்மொழியப்படும் போது, அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்

“தமிழர்களுடைய தேவைகளை அறியாத மாற்று அரசியல் செய்கின்ற சக்திகள் மீண்டும் குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்” – பிள்ளையான் குற்றச்சாட்டு !

“இலங்கைக்குள் நாங்களும் மக்களும் பேசி தீர்மானிக்கவேண்டிய விடயங்களை வெள்ளைக்காரர்கள் வந்து தீர்த்துவைப்பார்கள் என நாங்கள் சொல்லுவோமாக இருந்தால் மீண்டும் இந்த மக்கள் கஸ்டப்படுவார்கள்.” என மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தவினால் இன்று (20.02.2021) திறந்து வைக்கப்பட்டபோது அங்கு உரையாற்றிய மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பயன்படுத்தமுடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியங்காடு உணவு களஞ்சியசாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் தொலை நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய சுமார் 70 மில்லியன் ரூபா செலவில் புணருத்தாபனம் செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்களஞ்சியசாலையை வைபவரீதியகத் திறந்து வைத்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எமது மக்களுடைய எதிர்பார்ப்பை தேவைகளை அறியாத மாற்று அரசியல் செய்கின்ற சக்திகள் மீண்டும் இந்த மாவட்டத்திலும் இந்த நாட்டிலும் குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள், உங்களுக்குத் தெரியும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் என்ன நடந்தது அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுக்கு முன்னரிருந்த அமைச்சர் இந்த நாட்டிலே என்ன செய்தார். சதோச எங்கெல்லாம் திறக்கப்பட்டது, எங்கே மூடப்பட்டது, சதோச களஞ்சியங்களுக்குள் கூட போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன இப்படிப்பட்ட சம்பவங்களையெல்லாம் நாங்கள் பார்த்தோம், இவையெல்லாம் வரலாற்றில் மிக மோசமான சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இப்படியான சூழலிலே அந்த அரசாங்கத்தை பாதுகாத்தவர்கள் இப்பொழுது ஜெனிவாவைப்பற்றி போசுகின்றனர். ஜெனிவாவிலே போய் என்ன நடக்கப்போகின்றது என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் இலங்கைக்குள்ளே அரசாங்கமும் நாங்களும் மக்களும் பேசி தீர்மானிக்கவேண்டிய விடயங்களை இன்னமும் பிரச்சாரத்திற்காக அல்லது வெள்ளைக்காரர்கள் வந்து தீர்த்துவைப்பார்கள் என நாங்கள் சொல்லுவோமாக இருந்தால் மீண்டும் இந்த மக்கள் கஸ்டப்படுவார்கள்.

துன்பத்தோடும் வலியோடும் தங்களுடைய வாழ்விடங்களில் வாழ்ந்து தற்போது நிம்மதியாக வாழவேண்டுமென்று என்னுகின்ற மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் அரசியலே தவிர, அந்த மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் உசுப்பேற்றிவிட்டு வாக்குகளை எடுத்துவிட்டு பாராளுமன்றம் செல்வது எங்களுடைய நோக்கம் அல்ல, எமது மக்களுடைய வலிகளையும் வேதனையையும் சுமந்த ஒரு அரசியல் பிரமுகராக பிரதிநிதியாக எமது மண்ணை கட்டியெழுப்புவதற்கான நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்.

அந்த முயற்சியையும் அரசாங்கத்தின் கொள்கையையும் இந்த மண்ணிலே கொண்டு வந்து சேர்த்து நம்பிக்கையூட்டி மக்களையும் மண்னையும் வாழ வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், உணவு ஆணையாளர் திணைக்கள பிரதம கணக்காளர் கலாநிதி. ஈ.எம்.என்.ஆர். பண்டார, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பலரும் பிரசன்னமாயிருந்நதனர்.

“இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும்” – பிள்ளையான் !

“இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும்” என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும். மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே எமது கட்சியானது ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

குறித்த காலப்பகுதி வரும்போது அரசியலும் நிர்வாகமும் மக்களும் ஒன்றித்து பயணிக்க முடியும். இப்போதும் நாங்கள் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றோம். அந்த அடிப்படையில் கூட இந்த மண்ணுக்கு செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் நாம் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நியாயமற்ற விமர்சனங்கள் மூலம் சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் ” – பாராளுமன்றில் பிள்ளையானுக்காக ஒலித்த நீதியமைச்சரின் குரல் !

முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து பல்வேறுபட்ட தரப்பினரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விமர்சனங்கள் குறித்தும் சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் அலிசப்ரி பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

அதில் நீதியமைச்சர் குறிப்பிடும்போது “சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார்.
அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை என குறிப்பிட்ட நீதியமைச்சர் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம் சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும்  கேட்டுக்கொண்டுள்ளார்.