Covid 19 in srilanka

Covid 19 in srilanka

கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி !

கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் ஊடாக கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் ஊடாக மருந்தினை பெறுவதற்கு மருந்து உற்பத்தியாளர்களுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அனுமதிவழங்கப்பட்ட கொரோனா மருந்தினை உலகநாடுகள் மத்தியில் சமமாக விநியோகிப்பதற்காக உருவாக்கப்பட்டதே கொவக்ஸ் சர்வதேச திட்டம். இந்த திட்டத்தின் மூலம் மருந்தினை பெறுவதற்கு தகுதிவாய்ந்த நாடு இலங்கை என உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதிவழங்கியுள்ளது.

“கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு” – ஜே.வி.பி

“கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு” என ஜே.வி.பி குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு.

அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தபடி மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் முதலாவது அலை கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இரண்டாவது அலையின் போது சுகாதார அமைப்பின் மீது நம்பிக்கை குறைவடைந்ததால் மக்கள் அவர்கள் தெரிவிப்பதை செவிமடுக்க தவறிவிட்டனர்.

சுகாதார அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் மற்றும் சபாநாயகரும் தேவையற்ற ஊக்குவிப்புகளை முன்னெடுத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது   நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. முஸ்லீம்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” -முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது   நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. முஸ்லீம்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொவிட் சடலங்கள் எரிக்கப்படுவது  தொடர்பில் தனது நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  The Hindu” பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் தமது உறவினர்களை அடக்கம் செய்யும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். உலக சுகாதார ஸ்தாபனம் அடக்கம் செய்ய முடியும் என கூறுகிறது. முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் உலக சுகாதார அமைப்புடன் உடன்படுகிறேன்.

சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது   நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களும் சமமாகப் பகிரப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும்” – நீதியமைச்சர் அலி சப்ரி

“கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும்” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் தற்போது கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் ஜனசாக்கள் எரிப்பதை கண்டித்து தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலே இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“உலகில் இல்லாத ஒன்றை நாங்கள் கேட்கவில்லை. கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்பது முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமான கோரிக்கையல்ல. உலகில் 195 நாடுகளில் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கி இருக்கின்றது.

உலக சுகாதார ஸ்தாபனமும் அதனை அனுமதித்திருக்கின்றது. அதனடிப்படையிலேயே எந்த நிபந்தனையிலாவது அடக்கம் செய்ய கோருபவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை.

அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கவேண்டும் என யாரும் தெரிவிக்கவில்லை. அத்துடன் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கில் முதலாவது கொரோனா மரணம் !

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று (26.12.2020) உயிரிழந்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று இருப்பது நேற்றுமுன்தினம் உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரி பெறப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவின் பிரகாரம் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண்மணி நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி அநுராதபுரம் மித்சிறி செவன் வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார். கொரோனாத் தொற்றுடன் கூடிய நிமோனியா காய்ச்சலே அவரது உயிரிழப்புக்குக்காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனாத்தொற்று – 40 ஆயிரத்தை நெருங்குகின்றது நோயாளர் எண்ணிக்கை !

நாட்டில் மேலும் 551 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 541 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 10 பேர் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36, 099 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 432 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

“கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை, புதைக்கவோ எரிக்கவோ அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”  – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுரை !

“கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை, புதைக்கவோ எரிக்கவோ அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”  என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுகாதார அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரpவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால்  உயிரிழந்தவரின் உடலில் இருக்கும் வைரஸ் அழிவதில்லை. எனவே குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் அவரின் உடலை வைத்திருக்கும்போது அக்கொள்கலன் சேதமடையும் . கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதின் ஊடாக அக்கொள்கலன்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை, புதைக்கவோ எரிக்கவோ அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த முஸ்லீம்கள் சிலருடைய உடல்களை எரிக்காது குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்குமாறு காலி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது” – ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ !

“கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருடைய கவனமும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக திரும்பியுள்ளது. இந்நிலையிலே இலங்கையும் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி,

“அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகள் குறித்து விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவை நியமித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் குழுக்கள் தொடர்பாக, அவர்களது தேவை மற்றும் வாழும் சூழலின் அபாயத் தன்மை என்பவற்றின் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் சாத்தியம் அதிகம் காணப்படும் இடங்கள் மற்றும் ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

“யாழில் 100ஐ நெருங்கும் மருதனார்மடம் கொரோனா கொத்தணி – பரவும் வைரஸ் மிகவும் வீரியம் கூடியது” – வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் எச்சரிக்கை !

மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று(23.12.2020) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. அதிலும் தற்பொழுது யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது.

இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  கொரோனா தொற்று நோயினால் நாட்டில் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகைகளுக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பொழுது இந்நோய் எமது பிரதேசத்திலும் மேலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது. எனவே இப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதுடன் மத வழியாடுகளில் ஈடுபடும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியையும் பேணுதல் வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 95ஆக உயர்வடைந்துள்ளது.

“இலங்கை கொரோனா தடுப்பூசியினை பெறுவதற்கான உதவிகளை நாம் செய்வோம் ” – ஐ.நா பிரதமருக்கு உறுதி !

உலக நாடுகள் அனைத்திலும் இன்றைய திகதிக்கு மிகப்பெரிய பேசுபொருளாகியிருப்பது கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பானதாகவேயுள்ளது. இந்தநிலையில் இலங்கை அரசும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுதல், விநியோகம் மற்றும் பாதுகாப்பான நிர்வாகத்திற்காக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஐ.நா தூதுக்குழு குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரசியா பெண்ட்சே மற்றும் யுனிசெப் அமைப்பிற்கான இலங்கை பிரதிநிதி ஆகியோர் பிரதமரை இன்று சந்தித்தனர்.

ரஸ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை  ( Sputnik V ) இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து தீர்மானிப்பதற்காக அடுத்த வாரம் ரஸ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.